முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளம் மின் உற்பத்தியை மீண்டும் தொடங்க நடவடிக்கை பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

புதன்கிழமை, 7 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: கூடங்குளம் 1வது யூனிட்டில் நிறுத்தப்பட்டுள்ள மின் உற்பத்தியை மீண்டும் தொடங்க உடனடியாக தேவையான நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அணு சக்தி கழகத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதம் வருமாறு:

கூடங்குளம் அணு மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவதுப் பிரிவில் மீண்டும் மின்சாரம் தயாரிக்க தாமதமாவது குறித்து உங்கள் கவனத்துக்கு கொண்டு வரும் பொருட்டு இந்த கடிதத்தை எழுதுகிறேன். கூடங்குளம் முதலாவது யூனிட்டில் தயாராகும் மொத்தம் 1000 மெகாவாட் மின்சாரத்தில் தமிழ்நாட்டுக்கு 563 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வணிக ரீதியிலான மின் உற்பத்தி நடவடிக்கைகள் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் கடந்த 31.12.2014 அன்று தொடங்கியது. தற்போது பராமரிப்புப் பணிக்காக கடந்த 90 நாட்களாக அந்த மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய அணுசக்தி கழகம் இதுவரை கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதலாவது யூனிட்டில் மீண்டும் மின்சாரம் தயாரிப்பதற்கான அனுமதியைத் தரவில்லை. காற்றாலை மூலம் மின்சாரம் கிடைத்து வரும் சீசன் முடிவடைய உள்ளதால், விரைவில் கூடங்குளம் முதலாவது யூனிட்டில் மின் உற்பத்தியைத் தொடங்க வேண்டியது அவசியமாகும்.

எனவே தாங்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு இந்திய அணு சக்தி கழக அதிகாரிகளுக்கு உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும். கூடங்குளம் முதலாவது யூனிட்டில் மின் உற்பத்தியை மீண்டும் தொடங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மேலும் கூடங்குளம் அணு மின் நிலையத்தின் இரண்டாவது யூனிட்டின் அணு உலைப் பணிகள் முடிவடையும் தருவாயில் இருப்பதாக எங்களுக்குத் தெரிய வந்துள்ளது. இரண்டாவது யூனிட்டில் மின்சாரம் தயாரிக்க அணுசக்தி ஒழுங்கு முறை வாரியத்தின் ஒப்புதலுக்காக காத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இரண்டாவது யூனிட்டில் மின்சார உற்பத்தி தொடங்கும் போது தமிழ்நாட்டுக்கு மேலும் 563 மெகாவாட் மின்சாரத்தை கொடுக்க, உரிய அதிகாரிகளுக்கு தங்கள் அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கூடங்குளம் 2-வத யூனிட்டில் விரைவாக நடவடிக்கைகள் தொடங்கினால் தான் தமிழ்நாட்டுக்கு மேலும் 563 மேகாவாட் மின்சாரம் கிடைக்க ஏதுவாக இருக்கும். இந்த விஷயத்தில் விரைந்து பதில் அளிக்கவும் வேண்டி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அக் கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்