முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்மார்ட் போன்களிலிருந்து தகவலை திருடுகிறது பிரிட்டன்: எட்வர்ட் ஸ்னோடன் தகவல்

புதன்கிழமை, 7 அக்டோபர் 2015      உலகம்
Image Unavailable

மாஸ்கோ - உலகின் எந்த இடத்திலும் உள்ள ஸ்மார்ட் போன்களிலிருந்து  அதில் உள்ள தகவல்களை திருடும் தொழில்நுட்பத்தை பிரிட்டன் பயன்படுத்தி வருவதாக எட்வர்ட் ஸ்னோடன் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவின் முன்னாள் பணியாளரான இவர், அமெரிக்காவின் உளவு ரகசியங்கள் பலவற்றை வெளிப் படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர். பிற நாடுகளின் அரசு செயல்பாடுகளையும், சொந்த நாட்டு மக்களையும் அமெரிக்க உளவு அமைப்புகள் தொடர்ந்து ரகசியமாக கண்காணித்து வருவதை அவர் உலகுக்கு பகிரங்கப்படுத்தினார்.

இப்போது ரஷ்யாவில் அடைக்கலம் புகுந்துள்ள அவர், பிபிசி செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது., பிரிட்டன் அரசின் தகவல்தொடர்பு தலைமை அமைப்பு உலகின் எந்த மூலையில் இருப்பவரது ஸ்மார்ட் போனுக்குள்ளும் நுழையும் தொழில்நுட்பத்தை பெற்றுள்ளது. அவர்கள் போனில் என்ன செய்தி அனுப்புகிறார்கள். என்ன பேசுகிறார்கள் என்பதை உடனுக்குடன் பதிவு செய்ய முடியும். இதனை ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களே அறிய முடியாது. என்று கூறியுள்ளார்.

மேலும், பிரிட்டன் நினைத்தால் யாருடைய ஸ்மார்ட் போனில் உள்ள கேமரா மூலமும் புகைப்படம் கூட எடுக்க முடியும். அதனை போனின் உரிமையாளர்கள் தெரிந்து கொள்ளவே முடியாது. சுருக்கமாக கூறுவது என்றால் நம் அனைவரது செல்போன்களையும் நமக்கு தெரியாமலேயே பிரிட்டன் அரசால் பயன்படுத்த முடியும். தீவிரவாதிகள் தொடர்பான தகவல்களை அறிய பாகிஸ்தானில் இருந்துதான் பிரிட்டன் அதிக தகவல்களை ரகசியமாக திரட்டியுள்ளது. அமெரிக்காவின் சிஸ்கோ நிறுவனம் தயாரித்த ரூட்டர் கருவிகள் இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் அரசின் அனுமதியுடன்தான் இந்த தகவல் திரட்டும் வேலை நடை பெற்றுள்ளது என்றார் அவர்.

குற்றம் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளை கண்காணிக்க உளவு மற்றும் கண்காணிப்பு அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க பிரிட்டிஷ் அரசு ஆலோசித்து வரும் நிலையில் ஸ்னோடன் இத்தகவல்களை வெளியிட்டுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை பிரிட்டிஷ் அரசு உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை. ஆனால் இந்த கண்காணிப்பு அமைப்பு தேவையான ஒன்று, அது கடுமையான சட்டவரம்புக்குள்தான் செயல் படுகிறது என்று கூறியிருக்கிறது. உளவு நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து ஸ்னோடன் வெளியிட்ட விவரங்களால், இப்போது ஸ்மார்ட்போன் பயன் பாட்டாளர்கள் சங்கேத மொழியைப் பயன்படுத்துவது அதிகமாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்