முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவிக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ 3 லட்சம் நிதி உதவி

வியாழக்கிழமை, 8 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: பிரான்ஸ், மற்றும் வெனிசூலாவில் நடைபெறும் வாள்வீச்சு போட்டிகளில் பங்கேற்க சென்னை வீராங்கனை பவானிதேவிக்கு ரூ 3 லட்சம் உடனடியாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு: -

விளையாட்டு மற்றும் இளைஞர் நல மேம்பாட்டில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடும் உயரிய நோக்கில், தமிழ்நாட்டில் பன்னாட்டுத் தரத்தில் விளையாட்டு மைதானங்கள் அமைத்தல், விளையாட்டு வீரர்கள் பன்னாட்டு போட்டிகளில் பங்கு கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக ஊக்கத் தொகை வழங்குதல், உள்விளையாட்டு அரங்கங்களை அமைத்தல், கிராம விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவித்தல், பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்துதல், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பொறியியல் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை உயர்த்தியது போன்ற எண்ணற்ற திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை சி.ஏ. பவானி தேவி, 2014ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளதோடு, இந்த ஆண்டு மங்கோலியாவில் நடைபெற்ற வாள்வீச்சுப் போட்டியில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார். இதுமட்டுமின்றி காமன்வெல்த் ஜூனியர் வாள்வீச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களையும் வென்றுள்ளார். தற்போது சி.ஏ. பவானி தேவி, 2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், சி.ஏ. பவானி தேவி இம்மாதம் வெனிசுவேலா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் வாள்வீச்சுப் போட்டிகளில் கலந்து கொள்ள நிதியுதவி வழங்கிட வேண்டுமென்று எனக்கு கோரிக்கை விடுத்திருந்தார் . அவரது கோரிக்கையை உடனடியாக ஏற்று இம்மாதம் வெனிசுவேலா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் வாள்வீச்சுப் போட்டிகளில் பங்கேற்பதற்கு ஏதுவாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ரூ 3 லட்சம் நிதியுதவி உடனடியாக வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்,.

மேலும், சி.ஏ. பவானி தேவி, வெனிசுவேலா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் வாள்வீச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வெல்ல எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்