முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை

வியாழக்கிழமை, 8 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைப்படி, கரூரில் தொற்று நோய் தடுப்பு குறித்து 4 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அலுவலர்களுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார்.  இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு

பொது சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரகவளர்ச்சித்துறையின் மூலம் தொற்றுநோய் பரவாமல் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக மண்டல அளவிலான ஆலோசனைக்கூட்டம் கரூர், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று 08.10.2015 மாண்புமிகு நாடாளுமன்ற துணைசபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை, தொழில் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் திரு.பி.தங்கமணி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அரசு செயலாளர் மரு.ஜெ.ராதாகிருஷ்ணன்,இ.ஆ.ப.,அவர்கள் வைரஸ் காய்ச்சல் மற்றும் அதன் பாதிப்பு கள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்க உரையாற்றினார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள காரணத்தால் சுற்றுப்புற சூழ்நிலையினால் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மருத்துவத்துறை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளின் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஈரோடு, திண்டுக்கல், நாமக்கல், கரூர் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த மருத்துவத்துறை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, ஊரகவளர்ச்சி முகமை ஆகிய துறைகளின் அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். மாவட்டங்களில் எளிதாக பரவக்கூடிய வைரஸ் காய்ச்சல் போன்ற தொற்றுநோய் பரவாமல் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக அமைச்சர்கள் ஒவ்வொரு துறையின் வாயிலாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் மாவட்டத்தின் அனைத்துப்பகுதிகளிலும் வைரஸ் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தேவையற்ற வதந்திகளை தவிர்க்கும் வகையில் அலுவலர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிட வேண்டும் எனவும் பொதுமக்களிடத்தில் இது தொடர்பாக மாபெரும் விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டுமெனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்சி.விஜயபாஸ்கர் பேசியதாவது: முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின் படி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட இதர துறைகளின் முழு ஒத்துழைப்போடு தொடர் நடவடிக்கைகளின் மூலம் தொற்று நோய் பரவாமல் முற்றிலுமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பிற மாநிலங்களிலும், மற்ற நாடுகளிலும் கூட தொற்றுநோய் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டு வரும் நிலையிலும் கூட தமிழகத்தில் எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக புதுடெல்லியில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி அதன் மூலம் உயிர் சேதங்கள் அடைந்த நிலையிலும் தமிழகத்தில், எடுக்கப்பட்ட பல்முனை நடவடிக்கைகளால் தொற்றுநோய்கள் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அனைத்துத்துறை அலுவலர்களும் கூட்டு முயற்சியுடன் செயல்பட்டு இன்னும் சிறப்பாக சுகாதாரத்தை பாதுகாத்திட வேண்டும்.

டெங்கு வைரஸ் காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் கொசு உற்பத்தி முற்றிலுமாக தடுத்திட மாநகரரட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு பணியாற்றி வருகிறார்கள். காய்ச்சல் மூலம் இறப்பு என்ற நிலையே ஏற்படக்கூடாது என்ற அளவிற்கு ஈடுபாட்டுடன் மருத்துவர்கள், மற்ற துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மேலும் தொற்று நோய் பரவாமல் தடுத்திட அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு வைரஸ் காய்ச்சல் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘எலிசா’ முறையில் டெங்கு காய்ச்சலை கண்டுபிடிக்க மாவட்ட அளவில் சோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தேவையான இரத்த அணுக்கள் பரிசோதனைக் கருவி, இரத்த கூறுகள், மற்றும் இரத்தம் ஆகியவை போதிய அளவு இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, சித்த மருத்துவத்துறையின் சார்பாக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களிடையே நிலவேம்பு குடிநீருக்கு பெரும் வரவேற்பு உள்ளது. தமிழ்நாடு அரசு, தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்காக அனைத்து தடுப்பு நடவடிக்கையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் தங்களுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக உணர்ந்தால் பதற்றமடையாமல் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். தாங்களாகவே மருந்துகளை மருந்து கடையில் வாங்கி உட்கொள்வது, அங்கீகாரம் பெறாத போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவது தீங்கான விளைவுகளை ஏற்படுத்தி விடும். அனைத்து வகையான காய்ச்சலுக்கும் தேவையான மாத்திரை மருந்துக்கள் போதிய அளவில் அனைத்து மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தொற்று நோய் தடுப்பது குறித்த விழிப்புணர்வுடன் தங்களது சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரித்து தொற்று நோய் பரவாமல் தடுத்திட அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.ஆய்வு கூட்டத்திற்கு முன்னதாக அமைச்சர்கள், கரூர் அருகிலுள்ள ஒத்தக்கடை கிராமத்தில் நடைபெற்ற வைரஸ் காய்ச்சல் விழிப்புணர்வு முகாமினை பார்வையிட்டனர். தொடர்ந்து கொசு புழுக்கள் உற்பத்தியாகும் நீர்நிலைப் பகுதிகள் மற்றும் நீர்தேங்கும் இடங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு அவைகளை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டனர். தொடர்ந்து கரூர் அரசு பொதுமருத்துவமனையில் காய்ச்சல் பிரிவில் (குநஎநச றுயசன) சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்வையிட்டு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தனர். இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர்.ச.ஜெயந்தி வரவேற்புரை ஆற்றினார். பின்னர் சுகாதார உறுதிமொழியை மாண்புமிகு அமைச்சர் தலைமையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் .எஸ்.பிரபாகரன், நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் வ.தட்சிணாமூர்த்தி, , திண்டுக்கல் ஆட்சித்தலைவர்.டி.என்.ஹரிகரன்,., சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில்பாலாஜி, செ.காமராஜ், மாவட்ட ஊராட்சித்தலைவர் திருமதி.கீதாமணிவண்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் மரு.கீதாலட்சுமி, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் மரு.அ.சந்திரநாதன், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் மரு.கே.குழந்தைசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்