முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதாவின் பண்ணை பசுமைக்காய்கறி கடைகளில் 1 கோடியே 7 லட்சம் கிலோ காய்கறி விற்பனை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தகவல்

வியாழக்கிழமை, 8 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: சென்னை மாநகரில் 2 நகரும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடை உட்பட 58 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் இதுவரை 1,கோடியே 7 லட்சம் கிலோ காய்கறிகள் ரூ.31.12 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலி்தா ஆணைக்கிணங்க, கூட்டுறவுத்துறை அமைச்சர் .செல்லூர் கே.ராஜூ தலைமையில் நேற்று தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூட்ட அரங்கில், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்த திட்டங்கள் மற்றும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் உட்பட அனைத்து கடன் வழங்குவதற்கான இலக்குகளின் முன்னேற்றம் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூகூறியதாவது:

பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன்களுக்காக பணியாற்றும் கூட்டுறவு சங்கங்களை நவீனப்படுத்தி, வணிக வங்கிகளுக்கு இணையாக பொதுமக்களுக்கு சிறந்த சேவையினை வழங்கும் வகையில் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த நான்கு ஆண்டுகளில் 3,381 கூட்டுறவு அமைப்புகளுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தந்துள்ளார். அதன் தொடர்ச்சியாக 110 கூட்டுறவு அமைப்புகளுக்கு பாதுகாப்புக் கதவுடன் கூடிய பாதுகாப்பு அறை, பாதுகாப்புப் பெட்டகம் உள்ளடக்கிய சொந்த கட்டடங்கள் கட்டப்படும் என்றும், 203 கூட்டுறவு நிறுவனங்களில் பாதுகாப்பு அறைகள் மற்றும் பாதுகாப்புக் கதவுகள் அமைக்கப்படும் என்றும், 2,966 கூட்டுறவு நிறுவனங்களில் பாதுகாப்பிற்காக தொலைக்காட்சி கண்காணிப்பு கேமரா நிறுவப்படும் என்றும், நடப்பாண்டில் 1,240 பணியாளர் கூட்டுறவுச் சிக்கன நாணய சங்கங்கள் கணினிமயமாக்கப்படும் என்றும் சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அவரது அனைத்து அறிவிப்புகளையும் உடனடியாக நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்களின் பாதுகாப்பினை வலுப்படுத்தும் வகையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த 2,966 கூட்டுறவு நிறுவனங்களில் உட்சுற்று தொலைக்காட்சி கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணியினை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

வேளாண் உற்பத்தியினை பெருக்கிடும் வகையில் 2011ம் ஆண்டிலிருந்து இதுவரை 45,00,797 விவசாயிகளுக்கு ரூ. 20,040.80 கோடி பயிர்க்கடன் கூட்டுறவுச் சங்கங்கள் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டிற்கு ரூ.5,500 கோடி வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 4,80,580 விவசாயிகளுக்கு ரூ.2,694.87 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 7751 ஆதிதிராவிடர்/பழங்குடியின புதிய உறுப்பினர்களுக்கும் 60,455 ஆதிதிராவிட பழங்குடியினருக்கும், 3,26,178 சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும் பயிர்க் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதே போன்று 23 மத்திய கூட்டுறவு வங்கிகளின் மூலமாக நடப்பு ஆண்டில் ரூ.347 கோடி முதலீட்டுக் கடன்கள் வழங்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டு கடன் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 18,890 பயனாளிகளுக்கு ரூ.114.70 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான அனைத்து கடனுதவிகளையும் விரைந்து வழங்கி, இலக்கினை எய்திட அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும். விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கும் வரை அப்பொருள்களை சேமித்து வைக்க ஏதுவாக முதலமைச்சர் ஜெயலலிதா 4,11,800 மெ.டன் கொள்ளளவு கொண்ட 3317 கிடங்குகள் கட்டுவதற்கு ஆணையிட்டு, பணிமுடிந்த 3,75,200 மெ.டன் கொள்ளளவு கொண்ட 3145 கிடங்குகளை திறந்து வைத்தார். இதன் மூலம் 33,340 விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைபொருட்களை இக்கிடங்குகளில் சேமித்து பயன்பெற்றுள்ளார்கள்.

நடப்பாண்டில் 10.30 இலட்சம் மெ.டன் உரம் கூட்டுறவுச் சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது பருவ மழை தொடங்கி உள்ளதால் விவசாயிகளுக்கு தேவையான டி.ஏ.பி., யூரியா, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உட்பட அனைத்து உரங்களும் போதிய அளவு இருப்பு வைத்து, விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் தங்கு தடையின்றி வழங்க வேண்டும்.

முதல்வர் ஜெயலலிதாவின் தொலைநோக்குத் திட்டமான, அனைத்து தரப்பு மக்களும் 15 சதவிகிதம் வரை தள்ளுபடி விலையில் தரமான மருந்துகளை பெற்று பயனடையும் வகையிலான 100 அம்மா மருந்தகங்கள் மற்றும் 194 கூட்டுறவு மருந்தகங்கள் வாயிலாக இதுவரை ரூ. 260.39 கோடி மதிப்பிலான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அம்மா மருந்தகங்களில் குறைந்த விலையில் தரமான மருந்துகள் கிடைப்பதால் மக்களிடையே இத்திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனவே, மக்களின் தேவைக்கேற்ப மருந்துகளை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும்.

அதே போன்று, வெளிச்சந்தையில் காய்கறி விலையினை கட்டுப்படுத்தும் வகையிலும், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தரமான காய்கறிகளை குறைந்த விலையில் பெற்று பயன் பெறும் வகையிலும், இடைத்தரகரின்றி விவசாயிகளையும், நுகர்வோரையும் இணைக்கும் வகையில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் திட்டத்தின்கீழ், சென்னை மாநகரில் 2 நகரும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடை உட்பட 58 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் காய்கறிகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது, இக்கடைகள் வாயிலாக இதுவரை 1,07,84,436 கிலோ காய்கறிகள் ரூ.31.12 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கிராமப்புற மக்களும் வருவாய்த்துறை மற்றும் சமூகநலத்துறையின் மூலமாக வழங்கப்படும் அரசின் சான்றிதழ்களை தங்களுக்கு அருகாமையில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பெற்றுக்கொள்ளும் வகையில் 4,228 சங்கங்களில் பொதுச் சேவை மையங்கள் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இச்சேவை மையங்கள் வாயிலாக 1.4.2015 முதல் 30.9.2015 வரையில் 33,03,374 சான்றிதழ்கள் பெற்று வழங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக சங்கங்களுக்கு ரூ.1,248.26 இலட்சம் நிகர வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த ஏழை எளிய மக்களின் பசிப்பிணியை அகற்றும் விலையில்லா அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருள்களை விநியோகிப்பதில் கூட்டுறவு நிறுவனங்கள் பெரும் பங்காற்றி வருகின்றன. அம்மாவின் எண்ணத்தினை ஈடேற்றும் வகையில் பசிப்பிணி அகற்றும் பணியினை மேற்கொண்டு வரும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மக்கள் நலன் ஒன்றினையே கருத்திற்கொண்டு, எவ்வித புகார்களுக்கும் இடம் தராத வகையில் அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலர்.சிவ்தாஸ் மீனா,., கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் ஜெயஸ்ரீ முரளிதரன்., கூடுதல் பதிவாளர்கள் க. இராஜேந்திரன், .இரா.கார்த்திகேயன், .மு.செந்தமிழ்ச்செல்வன், முனைவர் மு.ராஜசேகர், .கே.ஜெகன்நாதன், டாக்டர் நா.வில்வசேகரன், .பா.பாலமுருகன், இரா.பிருந்தா, .ம.அந்தோணிசாமி ஜான் பீட்டர் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்