முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் ஸ்மார்ட் சிட்டிகள் அமைய ஜெயலலிதா நடவடிக்கை எஸ்.பி.வேலுமணி தகவல்

வியாழக்கிழமை, 8 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் சீரிய முயற்சி திட்டங்களால் தமிழ்நாட்டில் 12 ஸ்மார்ட் சிட்டிகளும் இந்தியாவிலேயே மிகச் சிறப்பான சீர்மிகு நகரங்களாக மாறும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். தமிழ்நாட்டில் சீர்மிகு நகரங்கள் அமைப்பது குறித்து சென்னையில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கை துவக்கி வைத்து நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:–

தமிழ்நாட்டை, இந்திய மாநிலங்களிலேயே, சிறந்த ஆளுகை கொண்ட, முதன்மை மாநிலமாக” திகழச் செய்யும், தொலை நோக்குடன், முதலமைச்சர் ஜெயலலிதாவினால், தொலைநோக்குத் திட்டம் 2023 ஆவணம்” வெளியிடப்பட்டது. தமிழகத்தின் 10 நகரங்களை, உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்த, முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொலை நோக்குத் திட்டம் -2023 வலியுறுத்துகிறது.

மாநிலத்திலுள்ள அனைத்து பிற பகுதிகளும், சமச்சீர் உட்கட்டமைப்பு மேம்பாட்டின் மூலம், பொருளாதார வளர்ச்சி அடைய, இந்நகரங்கள் ஒரு முன் மாதிரியாக அமைந்திடவும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும், உரிய அழுத்தத்துடன் குழாய்கள் மூலம், பாதுகாக்கப்பட்ட குடிநீர், வாரத்தின் ஏழு நாட்களிலும், 24 மணி நேரமும், தொடர்ந்து வழங்குதலை உறுதி செய்திடவும், முதலமைச்சர் ஜெயலலிதாவின், தொலைநோக்குத் திட்டம்- 2023, வழிவகை செய்கிறது.

முதலமைச்சர் ஜெயலலிதா சென்னையில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை இந்திய நாடே வியக்கும் வகையில் நடத்தி, 2,42,160 லட்சம் கோடி அளவிலான முதலீடுகளை ஈர்த்து மகத்தான சாதனை படைத்துள்ளார். மேலும் முதலமைச்சர் ஜெயலலிதா அனைவரும் பாராட்டும் வகையில், சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் குறுகிய காலத்தில் உலகத்தரத்திலான சாலைகளை அமைத்து சாதனை படைத்துள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா, நகர்ப்புரங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், இரண்டு மாபெரும் புதிய நிதி திட்டங்களை, செயல்படுத்தி வருகிறார். சென்னை மற்றும் அதனைச் சார்ந்த புற நகர் பகுதிகளுக்காக, சென்னைப் பெருநகர வளர்ச்சித் திட்டம் மற்றும் இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு கூடுதல் நிதி வழங்கும், ஒருங்கிணைந்த நகர்ப்புர வளர்ச்சித் திட்டம் ஆகிய இரண்டு மாபெரும் திட்டங்களின் வாயிலாக, குடிநீர் வழங்கல், சாலைகள், கழிவு நீர் வடிகால் மற்றும் சுகாதாரப் பணிகள், மழைநீர் வடிகால், தெரு விளக்குகள், திடக்கழிவு மேலாண்மை, பேருந்து நிலையங்கள் மேம்பாடு, வாகனங்கள் நிறுத்துமிடம், ஆகிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பணிகள், நடைமுறையில் உள்ள திட்டங்களுடன் ஒருங்கிணைத்து, செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த நான்காண்டுகளில், சென்னைப் பெருநகர வளர்ச்சித் திட்டத்திற்கு 2000 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த நகர்ப்புர வளர்ச்சித் திட்டத்திற்கு 3000 கோடி ரூபாயும், நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் சிறப்புடன் நடைபெற்று வருகின்றன. முதலமைச்சர் ஜெயலலிதாவின், சீரிய சிந்தனையில் உருவான இத்திட்டத்தைப் பின்பற்றி, மத்திய அரசு, ஸ்மார்ட் சிட்டி மற்றும் அம்ருத் ஆகிய இரு நகர்புர வளர்ச்சித் திட்டங்களை, இந்தியா முழுமையும் செயல்படுத்துகிறது. இத்திட்டம், பிரதமரால், 25.6.2015 அன்று துவங்கப்பட்டு, இதற்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இத்திட்டத்தின்படி, மக்களுக்குத் தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், அதில் நவீன தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தி, உலகத்தரம் வாய்ந்த நகரங்களை, மக்களுடைய எண்ணங்களுக்கு ஏற்றவாறு, அனைத்து வசதிகளுடன் நிர்மானிப்பதை, குறிக்கோளாகக் கொண்டு இந்தியாவில் மொத்தம் 100 சீர்மிகு நகரங்களை, 5 ஆண்டுகளுக்குள் உருவாக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

2015-–16ம் நிதியாண்டில், இந்தியா முழுவதும் இத்திட்டத்தினை, 20 நகரங்களில் அமல்படுத்துவதும், அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில், ஆண்டு ஒன்றுக்கு 40 நகரங்களை, இத்திட்டத்தின் கீழ் இணைப்பதும், மத்திய அரசின் திட்டம் ஆகும். முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று, இந்தியாவின் மிகப்பெரும் மாநிலமான, உத்தரப்பிரதேசத்திற்கு அடுத்தபடியாக, தமிழ்நாட்டிற்குத் தான் 12 சீர்மிகு நகரங்களை, மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

தமிழ்நாட்டிற்கு ஆண்டொன்றுக்கு, மாநகர் ஒன்றுக்கு சராசரியாக 100 கோடி ரூபாய் வீதம், ஐந்தாண்டுகளில் 6000 கோடி ரூபாய் அளவுக்கு, இத்திட்டத்திற்கு நிதியுதவி மத்திய அரசு வழங்கவுள்ளது. மத்திய அரசுக்கு இணையாக, முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசும், சராசரியாக ஐந்து ஆண்டுகளில், 6000 கோடி ரூபாயை வழங்கவுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.இத் திட்டத்தின் கீழ் போதிய குடிநீர்வழங்குதல்,உறுதியளிக்கப்பட்ட மின்சக்தி வழங்குதல்,திடக்கழிவு மேலாண்மை உட்பட துப்புரவு செய்தல், நகர்ப்புற போக்குவரத்து மற்றும் மக்கள் போக்குவரத்து ஆகியவற்றுக்கான செம்மையான ஏற்பாடு செய்தல்,மக்களுக்கு, குறிப்பாக ஏழை மக்களுக்கு கட்டுபடியாகிற விலையில் வீட்டுவசதி ஏற்படுத்துதல், வலுவான தகவல் தொழில் நுட்ப இணைப்பு வசதி மற்றும் டிஜிட்டல் மயமாக்கல், சிறந்த ஆளுகை, குறிப்பாக மின் ஆளுகை மற்றும் மக்கள் பங்கேற்பு,நீடித்த தன்மை வாய்ந்த சுற்றுச் சூழல்,மக்களின், குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களின் பாதுகாப்பு, உடல் நலன் மற்றும் கல்வி ஆகிய உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். இத்திட்டம், அடுத்த ஐந்தாண்டுகளில் அதாவது, 2015–-16 முதல் 2019-–20ஆம் நிதியாண்டிற்குள் செயல்படுத்தப்படும்.

சீர்மிகு நகரங்களை உருவாக்கத் தேவையான செயல் திட்டங்களைத் தயாரிப்பதில், மாநகராட்சிக்கு உதவிட 7 கலந்தாலோசனை நிறுவனங்கள் நியமிக்கப்பட்டு, இந்திய அரசு வலைதளம் மற்றும் சமூக வலைதளங்களில் விரிவாக அறிவிப்புகள் கொடுக்கப்பட்டு, பொது மக்களின் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, 100 நாட்களுக்குள் மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட வேண்டியுள்ளதால், பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையில், சீர்மிகு நகரங்கள் திட்டத்தின் உட்கூறுகள் அனைத்தும், மிகவும் சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு, இந்தியாவிலேயே மிகச் சிறப்பான சீர்மிகு நகரங்களைக் கொண்டதாக தமிழகம் அமையும் என்பதை, மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் வேலுமணி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்