முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு கொள்ளளவு 8 லட்சத்து 15 ஆயிரம் மெட்ரிக் டன்னாக உயரும்: அமைச்சர் இரா.காமராஜ்

வியாழக்கிழமை, 8 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம், நேற்று சென்னை, கிண்டி சேமிப்பு கிடங்கு நிறுவன தலைமை அலுவலகத்தில், உணவு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் இரா.காமராஜ் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் உணவு உற்பத்தியைப் பெருக்கவும், கிடங்குகள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, உணவு தானியங்களை பாதுகாப்பாக சேமித்து வைத்து, பொதுமக்களுக்கு உரியதரத்துடன் விநியோகம் செய்ய வேண்டுமென முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதன்படி, 2011 முதல் இன்று வரை தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 68 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 16 சேமிப்பு கிடங்குகள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், நாகப்பட்டினம், திருச்செங்கோடு, ராமநாதபுரம், காரைக்குடி, தேனி, திருநெல்வேலி மற்றும் ராணிப்பேட்டை ஆகிய இடங்களில், 69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 72 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 15 கிடங்குகள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. இது தவிர, தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிபட்டி, தஞ்சாவூர், அருப்புக்கோட்டை, மயிலாடுதுறை, சேலம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 42 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 10 கிடங்குகள் கட்ட உத்தேசிக்கப்பட்டு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் கொள்ளளவு 6 லட்சத்து 33 ஆயிரம் மெட்ரிக் டன்னிலிருந்து 8 லட்சத்து 15 ஆயிரம் மெட்ரிக் டன்னாக உயரும் என்று தெரிவித்த அமைச்சர், அனைத்து கட்டுமானப் பணிகளையும் விரைந்து முடித்து கிடங்குகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென அலுவலர்களை கேட்டுக்கொண்டார்

2011-ல் 82 சதவிகிதமாக இருந்த கிடங்குகளின் பயன்பாட்டு அளவு தற்போது, 93 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இந்நிறுவன கிடங்குகளில், விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை சேமிப்பில் வைத்து, கிடங்கு சேமிப்பு ரசீது மூலம் வங்கிகளிலிருந்து கடன் வசதி பெறும் திட்டத்தின் கீழ், 2011 முதல் இன்று வரை 9 ஆயிரத்து 834 பயனாளிகள் 573 கோடி ரூபாய் கடன் வசதி பெற்றுள்ளனர். அம்மாவின் சிறப்பான தொடர் நடவடிக்கைகளின் பயனாக, டெல்லியில் நடைபெற்ற தேசிய சேமிப்பு கிடங்குகள் அபிவிருத்தி மற்றும் ஒழுங்குமுறை ஆணைய கூட்டத்தில், 2013ம் ஆண்டிற்கு அறிவிக்கப்பட்ட முதல் மூன்று பரிசுகளும், இரண்டு சிறப்பு பரிசுகளும் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்திற்கே வழங்கப்பட்டது. மீண்டும் 2014ம் ஆண்டிலும் முதல் மூன்று பரிசுகளும் தமிழ்நாட்டிற்கே கிடைத்தது. அரசு நிறுவனங்களுக்கு 5% முதல் 25% வரையிலும், விவசாயிகள் மற்றும் விலையில்லா அரிசி உள்ளிட்ட பொருள்களின் சேமிப்பு கட்டணத்தில் 30% வரையிலும் தள்ளுபடி அளிக்கப்படுகிறது

இக்கூட்டத்தில் உணவுத்துறை முதன்மை செயலாளர் சிவ்தாஸ் மீனா, சேமிப்பு கிடங்குகள் நிறுவன நிர்வாக இயக்குநர் கே.நாகராஜன் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்