முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லஞ்ச குற்றச்சாட்டில் டெல்லி அமைச்சர் ஆசிம் அகமது கான் நீக்கம்: கெஜ்ரிவால் நடவடிக்கை

சனிக்கிழமை, 10 அக்டோபர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - டெல்லி சுற்றுச்சூழல், உணவு விநியோகத் துறை அமைச்சர் ஆசிம் அகமது கான் கட்டுமான நிறுவன அதிபரிடம் ரூ.6 லட்சம் லஞ்சம் கேட்ட ஆடியோ ஆதாரம் வெளியாகி நிலையில் அவரை பதவி நீக்கம் செய்து முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் பரிந்துரை செய்துள்ளார்.  இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் நிருபர்களிடம் கெஜ்ரிவால் கூறியதாவது: 

கட்டுமான தொழிலதிபர் ஒருவரிடம் உணவுத்துறை அமைச்சர் ஆசிம் அகமது கான் லஞ்சம் கோரியதாக அரசுக்கு அண்மையில் புகார் வந்தது. அதற்கு ஆதாரமாக அமைச்சரின் உரையாடல் அடங்கிய ஆடியோ இணைக்கப்பட்டிருந்தது. அமைச்சர் ஆசிம் அகமது கானின் சொந்த தொகுதியான மதியா மகாலில் கட்டுமான நிறுவன அதிபர் ஒருவர் அடுக்குமாடி கட்டிடம் கட்டி வருகிறார். அந்த கட்டிடப் பணிகள் தடையின்றி தொடர வேண்டுமானால் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் மிரட்டியுள்ளார். 

அதன்படி சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவன அதிபரும் அமைச்சருக்கு லஞ்சம் கொடுத்துள்ளார். இதில் இடைத்தரகராக ஒருவர் செயல்பட்டுள்ளார். புகாராக அனுப்பப்பட்ட ஆடியோவை ஆய்வு செய்த பிறகு, அமைச்சர் பதவியில் இருந்து அகமது கானை நீக்க முடிவு செய்தோம். லஞ்ச, ஊழல் விவகாரங்களை ஆம் ஆத்மி அரசு ஒருபோதும் சகித்துக் கொள்ளாது. எனது மகன் லஞ்சம் வாங்கினால்கூட பொறுத்துக்கொள்ள மாட்டேன். அவர் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன்.  துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஊழலில் ஈடுபட் டதாக தெரியவந்தால்கூட தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல நான் ஊழலில் ஈடுபட்டதாக நிரூபிக்கப் பட்டால் மணிஷ் சிசோடியா நடவடிக்கை எடுப்பார். லஞ்சப் புகாரில் சிக்குப வர்கள் யாராக இருந்தாலும் தப்பவிட மாட்டோம். அமைச்சர், எம்எல்ஏ ஆக இருந்தால்கூட ஆதாரம் கொடுத்தால் அவர்களை நீக்குவது உறுதி.

பதவி நீக்கம் செய்யப்பட்ட ஆசிம் அகமது கானுக்கு பதிலாக அமைச்சரவையில் பல்லிமாரன் தொகுதி எம்எல்ஏ இம்ரான் உசேன் சேர்க்கப்படுவார்.  லஞ்ச, ஊழல் தடுப்பு நடவடிக்கைகளில் ஆம் ஆத்மி முன்னோடியாகச் செயல்படுகிறது. இதை பாஜக உள்ளிட்ட கட்சிகளும் பின்பற்ற வேண்டும். அமைச்சர் ஆசிம் அகமது கானின் ஊழல் விவகாரத்தை பத்திரிகைகள்தான் முதலில் அம்பலப்படுத்தின. இதுகுறித்து விசாரித்து உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊழலில் விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கு இடமில்லை. மனவேதனையுடன்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க பரிந்துரை செய்துள்ளோம். விசாரணை முடியும் வரை கான் பதவியில் தொடரமாட்டார் , இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்