முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நகைச்சுவை அரசி மனோரமாவுக்கு திரையுலகமே திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி

ஞாயிற்றுக்கிழமை, 11 அக்டோபர் 2015      சினிமா
Image Unavailable

சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் இரவு காலமான பழம்பெரும் நடிகை ‘ஆச்சி’ மனோரமாவின் உடல் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது.  திரையுலக பிரபலங்களும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர். நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் மனோரமாவின் உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

தொடர்ந்து, நடிகர்கள் கவுண்டமணி, சிவகுமார், நாசர், பொன்வண்ணன், விஷால், கார்த்தி, டி.ராஜேந்தர், பாக்யராஜ், ராகவா லாரன்ஸ், பாண்டியராஜன், தியாகு, ராமராஜன், ஸ்ரீமன், எம்.எஸ்.பாஸ்கர், நிழல்கள் ரவி, சரத்பாபு, பார்த்திபன், இயக்குனர் வசந்த், நடிகைகள் சச்சு, கோவை சரளா, விந்தியா, சுகன்யா உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.  மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், திராவிட கழக தலைவர் கி.வீரமணி போன்ற அரசியல் தலைவர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

திமுக தலைவர் கருணாநிதி, மனோரமாவின் உடலுக்கு நேரில் சென்று மலர் அஞ்சலி செலுத்தினார். அவருடன் கட்சி நிர்வாகிகள் ஜெ.அன்பழகன், எ.வ.வேலு, டி.ஆர்.பாலு ஆகியோரும் வந்திருந்தனர்.  மனோரமாவின் மரணச் செய்தி குறித்து கேள்விப்பட்ட நடிகர் சங்க தலைவர் சரத்குமார் நேற்று முன்தினம் இரவே உடனடியாக அவரது இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன், நடிகை ராதிகா, நடிகர் விஜயகுமார் ஆகியோரும் நேரடியாக சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், நேற்று காலை முதல் திரையுலகை சேர்ந்த பல்வேறு கலைஞர்களும் மறைந்த மனோரமாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். நடிகர்கள் பிரசன்னா, தலைவாசல் விஜய், மனோபாலா, மன்சூர் அலிகான், நடிகைகள் குஷ்பூ, சினேகா, தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் உள்ளிட்டோர் மனோரமாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.  நடிகர் விஜய்யும் மனோரமாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வந்து மனோரமாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இவர்களைத் தொடர்ந்து இயக்குனர் பாலா, ராதாரவி. சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும் மனோரமாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து நேற்று மாலை 4 மணிக்கு மேல் மனோரமாவின் உடல் இறுதிச் சடங்குக்காக மயானத்திற்கு எடுத்து வரப்பட்டது. தி.நகர் இல்லத்திலிருந்து திரைத் துறையினர், பல்துறையினர், ரசிகர்கள் சூழ இறுதி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது மனோரமாவின் உடல். இறுதி ஊர்வலம் நெடுகிலும் ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் மனோரமாவின் உடல் எடுத்துச் வரப்பட்டது. ஊர்தியில் நடிகர்கள் வடிவேலு, மனோபாலா, கோவை சரளா, பொன் வண்ணன் உள்ளிட்டோர் உடன் சென்றனர். வழியெங்கும் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி தங்களை இத்தனை காலமாக சிரிக்க வைத்த அந்த நகைச்சுவை அரசிக்கு கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்தனர்.

இறுதியில், டிஜிபி அலுவலகம் பின்புறம் உள்ள இடுகாட்டுக்கு உடல் வந்து சேர்ந்தது. அங்கு மனோரமாவின் குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளை மேற்கொண்டனர். மனோரமாவின் ஒரே மகன் பூபதி சடங்குகளைச் செய்தார். அதைத் தொடர்ந்து மனோரமாவின் சிதைக்கு பூபதி தீ மூட்டினார். மனோரமாவின் மறைவையொட்டி தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்தும் நேற்று ரத்து செய்யப்பட்டிருந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்