முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீத்தேன் வாயு எடுக்க தமிழக அரசு தடை முதல்வர் ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் வரவேற்பு

திங்கட்கிழமை, 12 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்திருப்பதை பல்வேறு விவசாய சங்கங்கள் வரவேற்று பாராட்டியுள்ளன.  தமிழகத்தில், திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்காக ஒரு தனியார் நிறுவனத்துக்கு முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு அனுமதி அளித்தது. அதனை பரிசீலித்த முந்தைய தி.மு.க. அரசு இத்திட்டத்திற்கு அனுமதி அளித்து ஆணை பிறப்பித்தது. தமிழகத்தின் நெற்களஞ்சியத்திற்கு இது பேராபத்து விளைவிக்கும் என விவசாயிகள் கொந்தளித்தனர். இந்த நிலையில், தமிழக முதலமைச்சராக மீண்டும் பொறுப்பேற்ற முதலமைச்சர் ஜெயலலிதா, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, மீத்தேன் திட்டத்தால் டெல்டா பகுதியில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள வல்லுநர் குழு அமைக்க உத்தரவிட்டார்.

தற்போது, தொழில்நுட்ப வல்லுநர் குழு தெரிவித்த பரிந்துரைகளின் அடிப்படையில், காவிரி டெல்டா பகுதியில் சுமார் 700 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு, உத்தேசிக்கப்பட்டுள்ள மீத்தேன் திட்டத்திற்கு தமிழக அரசு எந்தவொரு அனுமதியும் வழங்காது என தடை விதித்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்கான அரசாணைகளை தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர்.

காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எரிவாயு உற்பத்தி தொடர்பான செயல்பாடுகளை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும், எதிர் காலத்தில் இதுதொடர்பான முயற்சிகளை தொடங்குவதற்கு முன்பு தமிழக அரசை கலந்தாலோசிக்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொள்வது என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலன் சார்ந்த தமிழக அரசின் இந்த நடவடிக்கையை, டெல்டா பகுதி விவசாய சங்கங்கள் வரவேற்று பாராட்டியுள்ளனர்.  மீத்தேன் எரிவாயு திட்டத்தை தமிழக அரசு தடை செய்திருப்பதை விவசாயிகள் மற்றும் டெல்டா பகுதி மக்களும் வரவேற்று, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்