முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னைக்கு அருகே நடுக்கடலில் வீரர்களின் 4 மணி நேர வீரதீர சாகசம்

செவ்வாய்க்கிழமை, 13 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, டிசம்பர் 4–ந் தேதி கடற்படை தினத்தை முன்னிட்டு, இந்திய கடற்படையின் கிழக்கு மண்டலம் சார்பில் ‘கடலில் ஒரு நாள்’ நிகழ்ச்சி சென்னைக்கு அருகே நடுக்கடலில் நடைபெற்றது. இதில் 8 போர்க்கப்பல்கள் அணிவகுத்தன. இதில் பங்கேற்ற கடற்படை வீரர்கள் பல்வேறு சாகசங்களை செய்து காட்டினர்.

1971-ல் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போரில் இந்திய கடற்படை கராச்சி துறைமுகத்தைக் கைப்பற்றி வெற்றி கொண்டது. இந்திய வரலாற்றில் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும், இந்த வெற்றியை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4-–ந் தேதி கடற்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் இந்த ஆண்டும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதில் முதல் நிகழ்ச்சியாக ‘கடலில் ஒரு நாள்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கடற்படையினர் நடுக்கடலில் எவ்வாறு பணிபுரிகின்றனர் என்பதை விளக்குவதற்காகவும், இத்துறையில் சேர இளைஞர்களுக்கு ஆர்வம் ஏற்படுத்தும் வகையிலும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில், ஏவுகனைகளை ஏவும் வசதிகள் கொண்ட ஆயுதம் தாங்கிய அதிநவீன கப்பல்களான சிவாலிக், ரன்விஜய், சக்தி, பெட்வா, கோரா, விபுடி, நிசான்க் மற்றும் நீர்மூழ்கிக் கப்பலான சிந்துத்வஜ் ஆகிய 8 கப்பல்கள் அணிவகுத்துச் சென்றன.
ஓய்வு பெற்ற மத்திய, மாநில அரசு உயரதிகாரிகள், பள்ளி, கல்லுாரி என்.சி.சி., மாணவர்கள், முப்படை அதிகாரிகளின் குடும்பத்தார் மற்றும் பொதுமக்கள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், கப்பல்களில் பயணம் செய்தனர். காலை 9 முதல், மாலை 4 மணி வரை, கடலில் கப்பல்கள் சுற்றி வந்தன.

சென்னைக்கு அருகே நடுக்கடலில் சுமார் 4 மணிநேரம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஹெலிகாப்டரில் ரோந்து செல்வது, எதிரிக் கப்பல்களை எப்படி தாக்குவது, போர் நடக்கும் நேரத்தில் நடுக்கடலில் ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு எப்படி எரிபொருள் நிரப்புவது, கடற்படை ஹெலிகாப்டர்களின் சாகச நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சாகசங்களை கடற்படை வீரர்கள் செய்து காட்டினர்.

எதிரி இலக்கை குறி வைத்து…அப்போது கப்பல்கள் நீரைக் கிழித்துக் கொண்டு சீறிபாய்ந்து சென்றன கண் இமை கொட்டாமல் பார்க்கும்படி இருந்தது. அதன்பின்னர் எதிரி இலக்கை குறி வைத்து சரமாரியாக சுடும் சாகசம் நிகழ்த்திக் காட்டப்பட்டது. இதற்காக வெடிகுண்டை விண்ணில் ஏவி வெடிக்கச் செய்தனர். அந்த குண்டு வெடித்து பெரிய நட்சத்திரம் போல பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது. அதை நோக்கி கடற்படை வீரர்கள் குறிபார்த்து சரமாரியாக சுட்டனர். மின்னல் வேகத்தில் சீறிபாய்ந்த துப்பாக்கி குண்டுகள், ஒருகட்டத்தில் அந்த நட்சத்திரம் போன்ற எதிரி இலக்கை சுட்டு வீழ்த்தியது. இந்த சாகச நிகழ்ச்சிகளை கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பார்வையாளர்கள் ரசித்து பார்த்தனர்.

இதே போன்று கடற்படைக்கு பயன்படுத்தும் ஹெலிகாப்டர், இரண்டு போர் விமானங்கள், போர்க்கப்பல்களை வட்டமிட்டு சென்றன. சிந்துவாஜ் என்ற நீர்மூழ்கிக் கப்பல், கடலில் மூழ்கி திடீரென எழும்பிய காட்சி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த கப்பலில் பயணம் செய்த அனைவரும் குறிப்பாக பெண்களும், குழந்தைகளும் சாகச நிகழ்ச்சிகளை உற்சாகத்துடன் கண்டுகளித்தனர். ஒருவருக்கொருவர் மொபைலில் மாறி மாறி போட்டோக்கள் எடுத்துக் கொண்டும், அருகே வந்த கப்பல் கள், ஹெலிகாப்டர்களில் வந்த கடற்படை வீரர்களை நோக்கி கை அசைத்தும், உற்சாக குரல் எழுப்பினர்.

இதுகுறித்து கிழக்குப் பிராந்திய கடற்படை அதிகாரி பெக்காரே செய்தியாளர்களிடம் பேசியதாவது:–

கடற்படையில் மாணவர்கள் சேரவும், பெற்றோர் அவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில், இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. தமிழக கடலோர பகுதியை பாதுகாப்பாக வைத்துள்ளோம். நமது கப்பற்படை எப்போதும் உஷார் நிலையில் உள்ளது. நமது நாட்டின் பாதுகாப்பு, உள்ளகட்டமைப்பு வலுவாக உள்ளது. எவ்வித தாக்குதலையும் முறியடிக்கும் சக்தி நமது படையினருக்கு உண்டு என்பதை பொதுமக்களும் அறிந்து கொள்ள இந்த நிகழ்ச்சி வழிவகுக்கும். மேலும் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் கடற்படையின் கூட்டு பயிற்சி ஒத்திகை விரைவில் நடைபெற இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.இந்த சாகச நிகழ்ச்சியில் சென்னைத் துறைமுகத்தலைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் ஸ்ரீதர், கடற்படை உயர் அதிகாரி மகாதேவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்