முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

24 தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

செவ்வாய்க்கிழமை, 13 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: விதிகளை மீறி, இந்திய மீனவர்களை அடிக்கடி கைது செய்யும் சம்பவங்களைக் கண்டு மத்திய அரசு இனியும் மெளனமாக இருக்கக் கூடாது என்றும் இந்த பிரச்னையில் தூதரக ரீதியிலான உயர்மட்ட அரசியல் தலையீடும் தேவை என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த 20 நாட்களாக ஆறு வகையான சம்பவங்களில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்று சிறை வைத்துள்ளனர்.அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அக்டோபர் 12ம்தேதி இரவு ராமேசுவரம் மீன்பிடித் தளத்தில் இருந்து 24 மீனவர்கள் 4 படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர், அங்குள்ள தலைமன்னாருக்கு சிறைப்பிடித்து சென்றுள்ளனர். இதுவரை, தமிழகத்தைச் சேர்ந்த 78 மீனவர்களும், 38 படகுகளும் இலங்கையின் பிடியில் உள்ளன. இலங்கையில் ஆட்சி மாறியவுடன் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடிப்புப் பகுதிகளில் மீன் பிடிப்பதற்கான சாதகமான வாய்ப்பு ஏற்படும் என்று நம்பியிருந்தேன். ஆனால், துரதிருஷ்டவசமாக தமிழக மீனவர்களை கைதுசெய்யப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவங்கள் தமிழக மீனவர்கள் மத்தியில் மிகப்பெரிய, துன்பத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பிரச்னைகள் குறித்து தொடர்ச்சியாக தங்களுக்கு தெரிவித்தும் அதில், உறுதியான நடவடிக்கை ஏதுமில்லை. இலங்கை சிறைகளில் தமிழக மீனவர்கள் பல நாட்களாக தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். பிரச்னைகளுக்குரிய. தீர்வுகளை நான் முன்வைத்த நிலையில் மீனவர்களை கைது செய்வது ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதை தாங்கள் ஒப்புக் கொள்வீர்கள்.என்று கருதுகிறேன்.,

1974-75 ஆம் ஆண்டுகளில் அரசிமைப்புச் சட்டத்துக்கு எதிராக இந்தியா-இலங்கை இடையே செய்யப்பட்ட ஒப்பந்தங்களை செல்லாததாக அறிவிக்க வேண்டும், கச்சத்தீவை விரைவில் மீட்டு அதில் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை நிலை நாட்ட வேண்டும்.என்ற எனது நிலைப்பாடு தாங்கள் அறிந்ததே.  இந்தியா-இலங்கை இடையிலான ஒப்பந்தங்கள் மூலம், இருநாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லைப் பிரச்னை முடிந்து விட்டதாகக் கருதக் கூடாது. இந்த ஒப்பந்தங்களை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளேன். தமிழக அரசும் இந்த வழக்குடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.மீனவர் பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வுகளில் ஒன்றான ஆழ்கடல் மீன்பிடிப்பு-உட்கட்டமைப்பு வசதிகளுக்காக சிறப்பு நிதித் தொகுப்பாக ரூ.1,520 கோடியையும், ரூ.10 கோடியை ஆண்டு பராமரிப்புச் செலவாக அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளேன். . இதுகுறித்த கோரிக்கையை கடந்த ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி தங்களிடம் அளித்த மனுவில் வலியுறுத்தியுள்ளேன். எனவே, இதற்குரிய நிதியை எந்தத் தாமதமும் இன்றி உடனடியாக வழங்க வேண்டும்.

தமிழக மீனவர்களை துன்புறுத்துவதும், அவர்களை கைது செய்வதுமான சம்பவங்கள் பாரம்பரிய மீன்பிடிப்புப் பகுதிகளில் அவர்களின் மீன்பிடிப்பு உரிமையை ஒழித்துக் கட்டுவதாகும். இது, ஆயிரக்கணக்கான நமது மீனவர்களின் வாழ்வாதார பிரச்னையாகும். இதனை மிகப்பெரிய சமூக-அரசியல் பரிமாணத்துடன் பார்க்க வேண்டும். விதிகளை மீறி, இந்திய மீனவர்களை அடிக்கடி கைது செய்யும் சம்பவங்களைக் கண்டு மத்திய அரசு இனியும் மெளனமாக இருக்கக் கூடாது. இந்தப் பிரச்னையில் தூதரக ரீதியிலான தலையீடு மட்டுமின்றி உயர் நிலை அளவிலான அரசியல் தலையீடும் உடனடியாகத் தேவை. இப்போதைய சூழலில், இலங்கையுடனான எந்த கலந்துரையாடலின் போதும் மீனவர்கள் பிரச்னையை தலையாய பிரச்னையாக வைத்து விவாதிக்க வேண்டும் என்பதை தாங்கள் ஏற்றுக் கொள்வீர்கள். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

எனவே, கடந்த 12 ம்தேதி இலங்கை கடற்படையில் சிறைபிடித்து செல்லப்பட்ட 24 பேர், அவர்களின் 4 படகுகள் உள்பட இதுவரை சிறையிலுள்ள 78 தமிழக மீனவர்களையும், 38 படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்