முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நினைத்ததை நிறைவேற்றும் விஜயதசமி

செவ்வாய்க்கிழமை, 20 அக்டோபர் 2015      ஆன்மிகம்
Image Unavailable

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அம்மனை சிறப்பித்து வழிபாடு செய்கின்றனர். அதைத் தொடர்ந்து 10வது நாளில், மகிஷாகரனை அம்மன் போரிட்டு வெற்றி கொண்டதை குறிக்கும் வகையில் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. பிரம்மதேவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான் மகிஷன் என்னும் அகரன். அவனது தவத்தைக் கண்டு மனம் இரங்கிய பிரம்மதேவர், அகரனின் முன்பு தோன்றினார். அவரைக் கண்டதும் மகிஷன் மகிழ்ச்சியில் திளைத்தான். பின்னர் தனக்கு மரணமில்லாத வரத்தைத் தருமாறு பிரம்மதேவரிடம் கேட்டான். ஆனால் பிறந்த அனைவருக்கும் இறப்பு நிச்சயம். எனவே வேறு வரம் கேட்கும்படி பிரம்மதேவர் கூறினார்.

இதையடுத்து, தனக்கு அழிவு என்று ஒன்று வந்தால், அது பெண்ணாலேயே வர வேண்டும் என்ற வரத்தை மகிஷன் கேட்டான். பிரம்மதேவரும் அவன் கேட்டபடியே வரம் அருளி மறைந்தார். மகிஷனின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. பெண்கள் மென்மையானவர்கள். அவர்களால் நமக்கு ஆபத்து வர வாய்ப்பில்லை என்பது மகிஷனின் எண்ணமாக இருந்தது. அந்த தைரியத்தில் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என அனைவரையும் கொடுமைப்படுத்தினான். மகிஷனின் தொல்லையால், தேவர்கள் அனைவரும் துன்பத்தில் ஆழ்ந்தனர். துன்பம் எல்லை கடந்ததால் அவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று மகிஷனிடம் இருந்து தங்களைக் காத்தருளும்படி வேண்டி நின்றனர்.

மகிஷனுக்கு பெண்ணால்தான் மரணம் என்று உள்ளது. எனவே நீங்கள் அன்னை பராசக்தியிடம் சென்று வேண்டுங்கள் என்று கூறி தேவர்களை அனுப்பிவைத்தார் மகாவிஷ்ணு. தேவர்கள் சக்தியை நோக்கி வழிபட்டனர். அதன் பயனாக அவர்கள் முன்பு மகாலட்சுமி தோன்றினாள், மகாலட்சுமி என்பதற்கு எல்லாவிதமான லட்சணங்களையும் கொண்டவள் என்பது பொருளாகும். அவரிடம் தேவர்கள் வைத்த வேண்டுகோளுக்கு இணங்க, தேவர்களை காக்கும் பொருட்டு தேவியானவள் போருக்கு ஆயத்தம் ஆனார்.

சிவபெருமான், அன்னைக்கு சூலத்தை வழங்க, விஷ்ணு பகவான் சக்கரத்தைக் கொடுத்தார். அக்னி தனது சக்தியையும், வாயு வில்லாயுதத்தையும் வழங்கினர். இப்படியாக ஒவ்வொருவரும் அவரவர் ஆயுதத்தை வழங்கினர். அவற்றைப் பெற்றுக் கொண்ட அன்னை, மகிஷாகரனை அழிப்பதற்காக புறப்பட்டுச் சென்றாள். போர்க்களம் புகுந்ததும் தன் முன் நின்ற மகிஷனைப் பார்த்து அன்னைக்கு இரக்கம் ஏற்பட்டது. அவனைக் கொல்வதை விடுத்து முதலில் பாசத்தை வீசி தன் வசப்படுத்த நினைத்தாள். ஆனால் அது முடியாமல் போனது.

ஏனெனில் தீயவை எதுவும் நல்லதை விரும்பாது. என்ன செய்தாலும் அது தீவினையை மட்டுமே சார்ந்திருக்கும். அதற்கு அழிவு மட்டுமே முடிவு என்பதை உணர்ந்து கொண்ட அன்னை, 9 நாட்கள் போரிட்டு 10ம் நாளில் மகிஷாகரனை அழித்தாள். அப்போது தேவர்கள் அனைவரும் மேலுலகில் நின்று பொம்மை போல் பார்த்துக் கொண்டிருந்தனர். அதில் இருந்துதான் கொலு வைக்கும் வழக்கம் ஏற்பட்டதாகவும் ஒரு கூற்று நிலவுகிறது. கொடியவனான மகிஷாகரன் அழிந்ததால் தேவர்கள் அனைவரும் மகிழ்ந்தார்கள். மகிஷாகரன் அழிந்து தினத்தை, அன்னை வெற்றிபெற்ற நாளை விஜயதசமியாக கொண்டாடி வருகிறோம்.

இந்தியாவில் தசரா என்ற பெயரில் இந்த விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. எந்தச் செயலைச் செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்றே அனைவரும் விரும்புவார்கள். அந்த வெற்றியை தந்தருளும் நாளாக விஜயதசமி தினம் திகழ்கிறது. கல்வி, கலைகளை கற்க விரும்புபவர்கள் இந்நாளில் தொடங்குவது வழக்கம். இந்நாளில், குழந்தைகளுக்கு எழுத்துப்பயிற்சி தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவர் என்பது அனைவரது நம்பிக்கை. படிப்பு மட்டுமில்லாமல் சுப விஷயங்களையும் இன்றைய தினம் தொடங்கினால், எளிதில் வெற்றி பெறலாம். பொதுவாக கோவில்களில் வில்வம், வேம்பு, அரச மரங்களைப் பார்க்கலாம். இதில் அரசமரத்தை மட்டுமே வலம் வருவது வழக்கம்.

ஆனால், விஜயதசமியன்று வன்னி மரத்தை வலம் வந்தால் சிறந்த பலன் கிடைக்கும். பாண்டவர்கள் காட்டில் மறைந்து வாழும்போது, நவராத்திரி காலம் வந்தது. அவர்கள் தங்களது ஆயுதங்களை வன்னி மரம் ஒன்றின் கீழ் ஒளித்து வைத்தனர். பத்தாம் நாள் பராசக்தியை வழிபட்ட பிறகு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு போருக்கு புறப்பட்டனர். அந்த நாளே விஜயதசமி. இந்த நாளில் வன்னி மரத்தை 21 முறை வலம் வந்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது நிச்சயம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago