முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் கமல்ஹாசனுக்கு ராமகோபாலன் கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 8 நவம்பர் 2015      சினிமா
Image Unavailable

சென்னை: தன்னை பாராட்டி அளித்த இறைவடிவ சிலையினால் எந்த விதப் பயனும் இல்லை என்று கமல்ஹாசன் கூறியதை இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் கண்டித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:

திரைப்பட கலைஞர் கமலஹாசனின் திறமையை பாராட்டுகிறோம். அவரது பிறந்தநாள் நிகழ்ச்சியில் அவர் பேசி இருப்பது குழந்தைத்தனமாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது. தான் கூறிய கருத்து தனக்கே உடன்பாடு இல்லாதது என்பதை அறியாதவர், தன்னை பகுத்தறிவுவாதி என்று கூறியிருப்பது வேடிக்கையானது.

தன்னை பாராட்டி அளித்த இறை வடிவ சிலையால் எந்த பயனும் இல்லை, அதனை உருக்கி பயன்படுத்துவதாக கூறியிருக்கிறார். ஒரு கலைஞருக்கு, அந்த சிலாரூபத்தில் உள்ள கலை வடிவத்தை ரசிக்க தெரிய வேண்டமா? பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டாமா? அதில் உள்ள தங்கத்தின் மதிப்பு மட்டும் தெரிந்தால் எப்படி?! எந்தவொரு கலையைப் போற்ற வேண்டும், கலையே தெய்வீகமானது இல்லையா?

இறைவன் பற்றிய அவரது கருத்தில் எத்தனை குழப்பம் ஏன்? உலகில் எத்தனை வேறுபாடு ஏன் என இறைவனைக் கேட்பேன் எனும் கமலஹாசன், தான் எப்படியிருக்கிறாரோ அப்படியே எல்லா படங்களிலும் நடித்தால்.. எப்படியிருக்கும்.. அவருக்கே சலித்துவிடாதா? பார்ப்பவர்கள் நிலை? இவர் தசாவதாரம் எடுத்து, பத்து மாறுபட்ட வேடத்தில் நடிக்கலாம், ஆனால் உலகில் எந்த வித்தியாசமும் இருக்கக்கூடாது என்பது வேடிக்கையானது. ஐந்து விரலும் ஒன்றுபோல் இருந்தால் எதுவும் செய்ய முடியாது. இவரது படத்தில் எல்லா பாத்திரங்களும் கதாநாயகர்களாகவே நடித்தால் எப்படியிருக்கும்?!

கடவுளுக்கு எல்லா மொழிகளும் தெரியும், மௌனமும் புரியும் என்பது ஆன்றோர்கள் வாக்கு. அப்படியிருக்க இறைவனுக்கு தமிழ் தெரியாது என்று இவராக புரிந்துகொண்டது சிறுப்பிள்ளைத்தனமானது. அதுமட்டுமல்ல இவர் வேற்று மொழியில் நடிக்கும்போது அந்த மொழியை அறிந்துகொள்வதில்லையா? அப்படி இறைவன் எல்லோருக்கும் பொதுவானவன். இறைவனுக்கு செய்யப்படும் வழிபாட்டு மொழியை வைத்து அரசியல்வாதிபோல பேசி குழப்புவானேன்?

இப்படி அவர் பேசிய ஒவ்வொரு கருத்தும் அவருக்கே உடன்பாடாக இருக்காது என்பது அனைவருக்கும் புரியும். பிறந்த நாளில் இப்படி பேசி, தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.  அவரது பிறந்த நாளில் அவருக்கு எல்லோரும் வாழ்த்து கூறும்போது, ஏன் இப்படி பேசி தனது ரசிகர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

விருதைத் திருப்பித் தரும் விஷயத்தில் தெளிவாக அவர் கருத்து கூறியிருப்பதை வரவேற்கிறோம். விருது அறிஞர்களால், கலைஞனின் திறமைக்கு தந்ததாக இருக்கும்போது அதனை திருப்பி அளிப்பது என்பது விருதிற்கு நம்மைத் தேர்ந்தெடுத்தவர்களை அவமதிப்பதாகும் என்று கமல்ஹாசன் கூறியிருப்பதை வரவேற்கிறோம், பாராட்டுகிறோம். இவ்வாறு ராம கோபாலன் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்