முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

21-வது நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு: ஆசியான் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

சனிக்கிழமை, 21 நவம்பர் 2015      இந்தியா
Image Unavailable

கோலாலம்பூர்: 21-வது நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என்று ஆசியான் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு நேற்று முதல் 24ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நேற்று அவர் மலேசியா சென்றடைந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து ஏசியான் பொருளாதார உச்சி மாநாட்டில் மோடி பேசினார். அவர் கூறியாதாவது.,

உலக பொருளாதாரம் சிறப்பாக இல்லை. ஆனால் இந்தியா பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. தொடர்ச்சியாக கொண்டுவரப்பட்ட கொள்கை மாற்றங்கள்தான் இந்த வளர்ச்சிக்கு காரணம். இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்ந்து, விலைவாசி குறையத் தொடங்கியுள்ளது. என்னை பொருத்தளவில், சீர்திருத்தம் என்பது, ஒரு நீண்ட பயணத்தின் நடுவே வரும் நிறுத்தங்கள் போன்றது. ஆனால், பயண முடிவு என்பது, இந்தியாவை முற்றிலுமாக மாற்றிப்போடுவதாக இருக்க வேண்டும்.

21வது நூற்றாண்டு ஆசியாவுக்கான நூற்றாண்டு. ஆசிய நாடுகள் அனைத்துமே சிறப்பாக செயல்பட்டுவருவது ஏசியான் நடவடிக்கைகளை ஆய்வு செய்து பார்த்தால் தெரியும். இந்தியாவும், ஏசியான் நாடுகளும் இயல்பான கூட்டாளிகள். இந்த கூட்டாளித்துவம் தொடர வேண்டும்.உலக நாடுகளில் வர்த்தகம் குறைந்துவிட்டாலும், இந்தியாவின் முக்கிய துறைமுகங்கள் 4.65 சதவீத சராசரி வளர்ச்சியை அடைந்துள்ளன. துறைமுக போக்குவரத்து 11.2 சதவீதம் அதிகரித்துள்ளது. புதிய தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் வேகம் என்பது, 2013-14ம் ஆண்டில், நாள் ஒன்றுக்கு 9 கி.மீ என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதை நாங்கள் 23 கி.மீயாக உயர்த்தி துரிதப்படுத்தியுள்ளோம்.

மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்கள் மூலம் முதலீட்டாளர் நட்பு நாடாக இந்தியாவை மாற்றியுள்ளோம். இந்தியாவில் கண்டுபிடிக்கப்படும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு, அறிவுசார் சொத்துரிமை, உரிமம் வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.கடந்த 65 வருட பாரம்பரியத்தை மாற்றி, இந்தியாவிலுள்ள மாநிலங்களையும், நாட்டின் வெளியுறவு கொள்கையை வகுப்பதில் ஒரு பங்காளியாக சேர்த்துள்ளோம். ஒவ்வொரு கட்டத்திலும், இந்தியாவில் எங்கள் அரசு வந்த பிறகு வளர்ச்சி அதிகரித்துள்ளது.ஏசியான் அமைப்பிலுள்ள பல ஆசிய நாடுகள், இப்பிராந்திய பொருளாதார வளர்ச்சிக்கு தங்களால் ஆன பங்களிப்பை செய்துள்ளன. இப்போது இந்தியாவின் முறை. எங்களுக்கான காலம் வந்துள்ளதாக நாங்கள் உணர்கிறோம். இந்தியாவில் வீசும் காற்று மாறிவிட்டது. அதை பார்க்க உங்கள் எல்லோரையும் அழைக்கிறேன். காற்றானது, எல்லைகளை தாண்டிவீச சற்று காலம் பிடிக்கும். எனவேதான் உங்களை நான் அழைக்கிறேன் இவ்வாறு மோடி பேசினார்.

முன்னதாக மலேசிய சென்றடைந்த பிரதமர் மோடிக்கு தலைநகர் கோலாலம்பூரில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இந்தியர்கள் பெரும் திரளமாக திரண்டு பிரதமர் மோடியை வரவேற்றனர். மலேசியாவுக்கான இந்திய தூதர் டி.எஸ். திருமூர்த்தி பிரதமர் மோடியை வரவேற்றார். வழி நெடுகிலும் இந்திய வம்சாவளியினர் நீண்ட வரிசையில் நின்று இந்திய தேசிய கொடியை அசைத்த வண்ணம் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர். அதேபோல் வழியெங்கும் பிரமாண்ட பதாகைகள் அமைத்தும் பிரதமர் மோடியை இந்தியர்கள் வரவேற்றனர்.

ஆசியான் மாநாட்டில் மோடி பேச்சின் முக்கிய அம்சங்கள்:  வெளிப்படையான வரி நடைமுறையை ஏற்படுத்த வேண்டும் என்பதில் இந்திய அரசு உறுதியுடன் உள்ளது. வெளிப்படையான, முன் கூட்டியே கணிக்கக் கூடிய வரி நிர்வாக நடைமுறை அமலுக்கு வந்தால் முதலீட்டாளர்களும் வரி செலுத்துவோரும் உறுதியான முடிவுகளை எடுக்க முடியும்.  இந்தியாவில் கோடிக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதே எங்கள் லட்சியம்.  மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியாவில் தொழில் தொடங்குவது எளிதாக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் இந்தியாவை உற்பத்தி மையமாக்க வேண்டும்.

இயற்கை வளங்களை கையாள்வதில் எனது அரசு சட்டம் மற்றும் நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நிலக்கரி, அலைக்கற்றை என அனைத்து வளங்களையும் தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விடுவதில் வெளிப்படைத் தன்மை பின்பற்றப்படுகிறது.  இந்தியாவில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. இந்திய ஜனநாயக நெறிகளும், நீதித் துறையும் உங்கள் முதலீடு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும். இந்தியாவில் தொழில் முதலீட்டை எளிதாக்க தேவையான நடவடிக்கைகள் போர்க்கால வேகத்தில் எடுக்கப்பட்டு வருகிறது.

சர்வதேச அளவில் நிதி நெருக்கடி இருந்தாலும், இந்தியப் பொருளாதார வளர்ச்சி நன்றாக உள்ளது என உலக வங்கி கூறியுள்ளது. உலகம் முழுவதும் இந்தியா மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது.  பல்வேறு சமூக நலத்திட்டங்கள் இந்திய அரசு வகுத்துள்ளது. இன்சூரன்ஸ் திட்டம், அனைவருக்கும் வங்கிக் கணக்கு திட்டம், அனைவருக்கும் வீடு ஆகியனவற்றை அரசு செயல்படுத்துகிறது.  கடந்த 18 மாதங்களாக இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் பணவீக்கம் கணிசமாக குறைந்துள்ளதாகவும், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளார்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது, அந்நிய முதலீடு உயர்ந்துள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2016-ல் இச்சட்டம் அமலுக்கு வரும் என நம்புகிறோம். இது நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்பு சட்டம் நடைமுறைக்கு வரும்.  21–ம் நூற்றாண்டு ஆசியாவுக்கு சொந்தமானதாக இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்