முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: தென் ஆப்பிரிக்க பந்து வீச்சில் மாற்றம்

சனிக்கிழமை, 21 நவம்பர் 2015      விளையாட்டு
Image Unavailable

நாக்பூர்: இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் பந்து வீச்சில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தெ.ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மெர்சன்ட் டி லாங்கே புதிதாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர பந்து வீச்சாளர் ஸ்டெயின் இந்தியாவுக்கு எதிராக மொகாலியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் காயம் அடைந்தார். இதனால் அவர் 2வது இன்னிங்ஸில் பந்து வீசவில்லை. இதற்கிடையே 2வது டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியின் போது அந்த அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் பிலாண்டருக்கு கணுக்கால் காயம் ஏற்பட்டது. அவரை 6 வார காலம் மருத்துவர்கள் ஓய்வில் இருக்க அறிவுறுத்தியால் தாயகம் புறப்பட்டு சென்றார். அவருக்கு பதிலாக 2வது டெஸ்டில் கைல் அபோட் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் ஸ்டெயின் முழு உடல்தகுதியை பெறாததால் நாக்பூரில் வரும் 25ம் தேதி இந்தியாவுக்கு எதிராக தொடங்கும் 3வது டெஸ்டில் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் கடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான அணியில் மெர்சன்ட் டி லாங்கே சேர்க்கப்பட்டுள்ளதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

டி லாங்கே இரு டெஸ்டில் தான் பங்கேற்றுள்ளார். கடைசியாக 2012ம் ஆண்டு வெலிங்டனில் நியூஸிலாந்துக்கு எதிராக விளையாடியிருந்தார். சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற டி 20 தொடரில் டி லாங்கே இடம் பெற்றிருந்தார். டி லாங்கே அணியில் சேர்க்கப்பட்டது குறித்து தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் ரஸல் டோமிங்கோ கூறும்போது,

தற்போதைய சூழ்நிலையில் மோர்ன் மோர்கல், கைல் அபோட், ரபாடா ஆகிய 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே உடல் தகுதியுடன் உள்ளனர். ஸ்டெயின் இடுப்பு வலியால் அவதிப்பட்டு வருகிறார். உடல் தகுதியுடன் உள்ள 3 பேரில் யாரும் காயம் அடைந்தால் டி லாங்கேவை பயன்படுத்திக்கொள்வோம். டி லாங்கேவின் பலமே வேகம் தான். அவர் 150 கி.மீ. வேகத்தில் வீசக்கூடியவர் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்