முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ள நிவாரணம்-சீரமைப்பு பணிகளுக்கு தமிழகத்திற்கு ரூ.8,481 கோடி நிதி உடனடியாக ரூ.2000 கோடி வழங்க பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

திங்கட்கிழமை, 23 நவம்பர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: தமிழகத்தில் உடனடி வெள்ள நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், உட்கட்டமைப்புகளை நிரந்தரமாக சீரமைக்கவும், 8 ஆயிரத்து 481 கோடி ரூபாய் தேவைப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது என முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

சேத விவரங்கள் அடங்கிய பட்டியல், கடிதத்துடன் அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இடைக்கால ஏற்பாடாக 2 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.மேலும், சேத நிலைமையை உடனடியாக பார்வையிடவும், தாமதமின்றி நிதியுதவி வழங்கவும் ஏதுவாக மத்தியக்குழுவை தமிழகத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திரமோடிக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது., தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இம்மாதம் பெய்துள்ள பலத்த மழை காரணமாக ஏற்பட்ட விரிவான சேதங்களை சீரமைக்கும் பணிக்காக தேவைப்படும் நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், பிற மத்திய அரசு நிதியிலிருந்தும் உதவிடக்கோரி, தமிழக அரசின் விரிவான கோரிக்கை மனுவை இணைத்து இக்கடிதத்தை எழுதுவதாக தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 10-ம் தேதியன்று மரக்காணம் அருகே தமிழ்நாடு கடற்கரையை தாக்கியதில், வட கடலோரம் உள்ள கடலூர், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக பலத்தமழை பெய்தது.- இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முன்னெச்சரிக்கைகளையும், தேசிய பேரிடர் நிர்வாக அமைப்பிடமிருந்து பெற்ற எச்சரிக்கைகளையும் கருத்தில் கொண்டு, உயிர்ச் சேதங்களையும், சொத்து சேதங்களையும் குறைந்தபட்ச அளவிற்கு குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மாநில அரசின் அமைப்புகளும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் நிர்வாகங்களும், உச்சபட்ச உஷார் நிலையில் வைக்கப்பட்டன. – அமைச்சர்கள் மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழுக்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்பார்வையிட உத்தரவிடப்பட்டது – தமிழக அரசு மற்றும் வருவாய் துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த பல்வேறு குழுக்கள் முழுமையாக பணியில் ஈடுபடுத்தப்பட்டன .

இதுதவிர தேசிய பேரிடர் மீட்புப் படையினர், ராணுவம், விமானப்படை, கடற்படை மற்றும் கடலோர காவல்படை ஆகியவற்றின் உதவியும், தேவையான இடங்களில் கோரி பெறப்பட்டன – இப்படைகளை உடனடியாக அனுப்பி வைத்ததற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் நிவாரண முகாம்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கு அவர்களுக்கு உணவும், தங்குமிடமும் வழங்கப்பட்டன – போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன – கடினமான சூழ்நிலையில் ஓய்ச்சல், ஒழிவின்றி உடனடியாக மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளை அனைவரும் பாராட்டியுள்ளனர் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.மிக பலத்த மழை பெய்ததாலும், பல நாட்களுக்கு இந்த மழை நீடித்ததாலும் தமிழ்நாடு அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்தபோதிலும், பல்வேறு பகுதிகளில் சேதங்களும், அழிவுகளும் ஏற்பட்டன. – உதாரணமாக நெய்வேலியில் கடந்த 9-ம் தேதியன்று 437 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது – இதேபோன்று, சென்னையில் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இல்லாத வகையில், நவம்பர் மாதம் முதல் 20 நாட்களில் 2-வது மிக கனமான மழை பதிவாகியுள்ளது – ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலையைத் தொடர்ந்து, மேலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டதால், மழை தொடர்ந்து பல நாட்களுக்கு நீடித்தது – இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து மிக மோசமாக பாதிக்கப்பட்டது.

கடந்த அக்டோபர் மாதம் 1-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழையால் 169 பேர் உயிரிழந்துள்ளனர் – வீடுகள், பயிர்கள் என பரவலாக சேதங்கள் ஏற்பட்டுள்ளன – சாலைகள், பாலங்கள், வெள்ள வடிகால்கள், குடிநீர் வழங்கும் குழாய்கள், கழிவுநீர் குழாய்கள் என உட்கட்டமைப்புகளும், மின்சார விநியோகமும் பல பகுதிகளில் கடுமையாக பாதிக்கப்பட்டன. நிவாரணம் மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகளை உடனடியாக எதிர்கொள்ள 500 கோடி ரூபாய் நிதியை தாம் ஏற்கெனவே ஒதுக்கீடு செய்ததாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

என்றாலும், கட்டமைப்புகள் சீரமைப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் உடனடியாக விரைந்து மேற்கொள்ளப்பட்டதில், அதிக நிதி தேவைப்படுவது, மாநில அரசின் மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது. உடனடி மீட்பு மற்றும் நிவாரணத்திற்கு தேவைப்படும் நிதி, தற்காலிகமானதுதான்- கட்டமைப்புகளை நிரந்தரமாக சீரமைக்க 8 ஆயிரத்து 481 கோடி ரூபாய் ஒட்டுமொத்தமாக தேவை என கணக்கிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்பட்ட சேத மதிப்பீடுகள் மற்றும் தேவைப்படும் நிதி ஆகியவற்றை உள்ளடக்கிய கோரிக்கை மனு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்பட்ட மிக மோசமான இயற்கை சீற்றத்தினால் நிகழ்ந்த இழப்பீடுகளை எதிர்கொள்வதற்கு, மத்திய அரசிடமிருந்து தமிழக அரசுக்கு நிதியுதவி தேவைப்படுவதால், உடனடியாக சேதமதிப்பீடு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசின் பேரிடர் நிவாரண நிதியில் உள்ள இருப்பைக் காட்டிலும், அதிக அளவு நிதி தேவைப்படுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள சேதங்கள் முழுமையாக முடிந்துவிடவில்லை என்பதையும், வடகிழக்குப் பருவமழை சில வாரங்கள் நீடிக்கும் என்பதால், மேலும் சேதங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது என்பதையும் தாம் நன்கு அறிந்துள்ள போதிலும், மத்திய அரசிடமிருந்து நிதியுதவி தேவை என்பதால், சேத மதிப்பீட்டு அறிக்கையை விரைந்து தயாரிக்க அதிகாரிகளை தாம் கேட்டுக் கொண்டிருந்ததாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெருமளவு கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவைகளை உடனடியாக முழுமையாக சீரமைக்க வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டும், தீவிர நிவாரண நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ள தமிழக அரசின் நிதி நிலைமைக்கு வலு சேர்க்கும் வகையிலும், மத்திய அரசின் நிதியுதவியை விரைந்து வழங்க ஏதுவாகவும், சேத மதிப்பீடுகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்ய, தமிழகத்திற்கு மத்தியக் குழுவை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனிடையே, தமிழக அரசின் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் இதே அளவு வேகத்தில் விரைந்து மேற்கொள்ள, இடைக்காலமாக 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்