முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் 19 நாட்களுக்கு பிறகு பள்ளி - கல்லூரிகள் திறப்பு

வியாழக்கிழமை, 26 நவம்பர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 19 நாட்களுக்கு பிறகு நேற்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன.  வடகிழக்கு பருவமழை காரணமாக பெய்த கனமழையால ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் நேற்று பள்ளிகள் - கல்லூரிகள் திறக்கப்பட்டன. மேலும், அங்கு பாதிக்கப்பட்ட மாணவ–மாணவிகளுக்கு புதிதாக பாடப்புத்தகம், நோட்டு, சீருடை போன்றவை வழங்கப்பட்டன.

வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டது. தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பு தொடங்கிய கனமழை தொடர்ந்து பெய்து வந்ததால் வீடுகளில் வெள்ளம் புகுந்தது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், வேலூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அடுத்தடுத்து இடைவிடாது மழை பெய்து வந்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் மழை வெள்ளம் வடியாததால் பள்ளிகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. மழை நின்ற பிறகும் கூட பள்ளிகளை திறப்பதில் சிரமம் ஏற்பட்டது.

மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி–கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. தீபாவளி பண்டிகைக்கு கடந்த 7–ம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. அது முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படவில்லை. தீபாவளிக்கு மறுநாள் (11–ம் தேதி) அரசு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும் அன்றைய தினமும் பலத்தமழை பெய்ததால் தனியார் பள்ளிகள் திறக்கப்படவில்லை. பெரும்பாலான அரசு பள்ளி மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்லவில்லை.

இந்த நிலையில் மழைநீர் தேங்கிய பகுதியில் இருந்து படிப்படியாக தண்ணீர் வற்றியது. வடியாத இடங்களில் மோட்டார் பம்ப்செட் மூலம் வெளியேற்றப்பட்டது. இதனால் நேற்று (26–ம் தேதி) பெரும்பாலான அரசு பள்ளிகள் திறக்கப்பட்டன.  ன்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில பள்ளிகளில் இன்னும் மழைநீர் தேங்கி நிற்பதால் வகுப்புகள் நடத்த முடியாத நிலை காணப்பட்டது. அது போன்ற பாதிப்புகள் உள்ள பள்ளிகள் தவிர ஏனைய தனியார், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டன.

சென்னை மாவட்டத்தில் 24 பள்ளிகள் தவிர மற்ற பள்ளிக்கூடங்கள் நேற்று வழக்கம்போல் செயல்பட்டன. இதில் 5 மாநகராட்சி பள்ளிகளும் 19 அரசு பள்ளிகளிலும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருப்பதால் திறக்கப்படவில்லை. வகுப்பறைகள், கழிவறைகள் அடைக்கப்பட்டு இருப்பதாலும், சேறும் சகதியுமாக காணப்படுவதால் பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மேற்கு மாம்பலம், வேளச்சேரி, ஆசிர்வாதபுரம், வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, ராஜா அண்ணாமலைபுரம், எழும்பூர், ஓட்டேரி, சாலிகிராமம், சின்னமலை, ஆயிரம்விளக்கு, அரும்பாக்கம், கோயம்பேடு, எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இன்னும் விடுமுறை நீடிக்கிறது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் 9 பள்ளிகள் தவிர மற்ற பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன. மவுலிவாக்கம், செம்மஞ்சேரி, மாங்காடு, கீழ்ஒட்டிவாக்கம், சிறுமுடிவாக்கம், கோவளம், இடை பாத்தூர், இரும்புலிச்சேரி ஆகிய பகுதிகளில் அரசு பள்ளிகள் திறக்கப்படவில்லை.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி, மணவாளன்நகர், அயனம்பாக்கம், முகப்பேர் மேற்கு, திருவொற்றியூர், முகப்பேர் கிழக்கு, சுபரெட்டி பாளையம், நாபாளையம், திருவள்ளூர் புங்கத்தூர் ஆதி திராவிடர் பள்ளி உள்பட 9 பள்ளிகள் தவிர மற்ற பள்ளி, கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. 19 நாட்களுக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டதால் மாணவ– மாணவிகள் உற்சாகத்துடன் வகுப்பறைக்கு சென்றார்கள்.

மழைக்கு பிறகு நேற்று பள்ளிகள் திறந்ததும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாணவ–மாணவிகளுக்கு புதிதாக பாடப்புத்தகம், நோட்டு புத்தகம், சீருடை போன்றவை கல்வித்துறை சார்பில் மீண்டும் வழங்கப்பட்டன. மழை வெள்ளத்தில் பாடப்புத்தகங்களை இழந்த அனைவருக்கும் குறிப்பாக எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 மாணவ–மாணவிகளுக்கு உடனடியாக புத்தகங்கள் வழங்கப்பட்டன.

மழை பாதிப்பால் நேற்று திறக்காமல் உள்ள பள்ளிகள் இன்று (27–ம் தேதி) திறப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சில பள்ளி மைதானத்தில் மழை நீர் தேங்கி நின்றதால் தான் நேற்று திறக்கப்படவில்லை. மாணவர்களின் பாதுகாப்பை அதிகாரிகள் ஆய்வு செய்து அதன் பின்னரே பள்ளிகள் திறக்கப்படும். பெரும்பாலும் நாளை அனைத்து பள்ளிகளும் முழுமையாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்