முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் வரலாற்றில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து மோதும் பகல்-இரவு போட்டி

வியாழக்கிழமை, 26 நவம்பர் 2015      விளையாட்டு
Image Unavailable

அடிலெய்டு : 138 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக இன்று பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. அடிலெய்டில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து நடுவே நடைபெற உள்ள இந்த போட்டிக்கு தான்  அந்த பெருமை கிடைக்கவுள்ளது. மேலும், சிவப்பு அல்லது, வெள்ளை பந்துகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த கிரிக்கெட் உலகில், இந்த ஆட்டத்தில்தான் முதல்முறையாக, பிங்க் எனப்படும் இளஞ்சிவப்பு வண்ண பந்து பயன்படுத்தப்பட உள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடிவரும், நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இன்று முதல் டிசம்பர் 1ம் தேதிவரை, அடிலெய்டில் நடைபெற உள்ள 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறது. ஆஸ்திரேலிய அணி முதல் டெஸ்ட்டில் வென்ற நிலையில், 2வது டெஸ்ட் டிரா ஆனது., எனவே இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானது.

டெஸ்ட் போட்டிகளுக்கு ரசிகர்கள் பெருமளவில் வருவதில்லை என்பது குறைபாடு. இதை நீக்க, பகல்-இரவு டெஸ்ட் போட்டியை அறிமுகம் செய்ய ஐசிசி முடிவு செய்தது. வேலைக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும் செல்வோர், மாலைக்கு பிறகு மைதானத்திற்கு வர வசதியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் பகல்-இரவு போட்டி அடிலெய்டில் இன்று தொடங்குகிறது.

பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்த 2012ம் ஆண்டு ஐசிசி சம்மதம் தெரிவித்திருந்தது. இறுப்பினும் இப்போதுதான் போட்டி நடத்த உள்ளனர். 1877ம் ஆண்டு, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதியதுதான், வரலாற்றின் முதல் டெஸ்ட் போட்டியாகும். அதில் ஆஸி. அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த டெஸ்ட் போட்டிக்கு பிறகு 138 வருடங்கள் கழித்து முதல் முறையாக ஒரு டெஸ்ட் போட்டி பகல்-இரவு போட்டியாக நடைபெற உள்ளது. இதுவரை 2189 டெஸ்ட் போட்டிகள் அதிகாரப்பூர்வமாக நடந்தேறியுள்ளன. ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் மோத உள்ள பகல்-இரவு டெஸ்ட் போட்டி, வரலாற்றின் 2190வது டெஸ்ட் போட்டியாகும்.

டெஸ்ட் போட்டிகளில் சிவப்பு பந்துகளும், ஒருநாள் போட்டிகளில் வெள்ளை பந்துகளும் பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆனால், இரவு நேரத்தில் சிவப்பு பந்து கண்களுக்கு பளிச்சென தெரியாது என்பதால் பிங்க் நிற பந்து வீச முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் உள்ளூர் போட்டிகளில் பிங்க் நிற பந்துகள் வீசப்பட்டு, அதில் திருப்தி ஏற்பட்டுள்ளதால் அந்த வண்ணத்துக்கு ஐசிசி ஓ.கே கூறியுள்ளது. குக்கும்பரா நிறுவனம், இதை தயாரிக்கிறது.

பகல்-இரவு போட்டிகளும் 90 ஓவர்கள் கொண்டதாக இருக்கும். ஆனால் பகல் போட்டிகளில் முதலில் உணவு இடைவேளையும், பிறகு டீ பிரேக்கும் விடப்படும். இந்த போட்டியில் முதலில் டீ பிரேக்கும், பிறகு இரவு உணவுக்கும் நேரம் ஒதுக்கப்படும். இன்று  வெள்ளிக்கிழமை பகல் 2 மணிக்கு (அடிலெய்டு நேரம்) போட்டி தொடங்குகிறது. மாலை 4 மணிக்கு டீ பிரேக். இரவு 6.20 மணிக்கு உணவு இடைவேளை விடப்படும். இந்தியாவின் ரவி, இங்கிலாந்தின் ரிச்சர்ட் இல்லிங்வொர்த், நிகல் லியோங்க் ஆகியோர் நடுவர்களாகவும், இலங்கையின் ரோஹன் மகனமா, ரெஃப்ரியாகவும் செயல்பட உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்