முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2018-ம் ஆண்டு முதல் பிஎஸ்என்எல் நிகர லாபம் ஈட்டும்: ரவிசங்கர் பிரசாத் தகவல்

சனிக்கிழமை, 28 நவம்பர் 2015      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி - 2018-ம் ஆண்டு முதல் பிஎஸ்என்எல் லாபம் ஈட்டும் என்று மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். முன்னதாக பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் 2014-15-ம் நிதி ஆண்டில் ரூ. 672 கோடியை செயல்பாட்டு லாபமாக ஈட்டியது. 9 ஆண்டுகளுக்கு பிறகு 2018-ம் ஆண்டு இந்த நிறுவனம் நிகர லாபம் ஈட்டும் என்று ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

நிறுவனத்தின் வருமானம் 4.16 சதவீதம் அதிகரித்து ரூ. 27,242 கோடியாக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர் கடந்த 5 ஆண்டுகளில் நிறுவனத்தின் வருமானம் இந்த அளவு அதிகரித்தது இதுவே முதல் முறை என்று குறிப்பிட்டார். இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் நிர்வாகச் செலவுகள் கணிசமாகக் குறைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த சமயத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 10 ஆயிரம் கோடி லாபம் ஈட்டும் நிறுவனமாக இருந்தது. தான் இத்துறையின் அமைச்சராக கடந்த ஆண்டு பொறுப்பேற்ற போது இந்நிறுவனம் ரூ. 8ஆயிரம் கோடி நஷ்டத்தில் இருந்தது. இந்நிறுவன செயல்பாடுகளை மேம்படுத்த அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த சில மாதங்களாக மொபைல் இணைப்பு அளிப்பதில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த மே மாதத்தில் 9 லட்சமாக இருந்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஜூலை மாதத்தில் 16 லட்சமாக உயர்ந்துள்ளது. ஜூலை மாதத்திலிருந்து தற்போது வரை 1,57,564 புதிய வாடிக்கையாளர்கள் சேரந்துள்ளனர்.நடப்பு நிதி ஆண்டில் நெட்வொர்க் இணைப்புக்காக ரூ. 7,700 கோடி முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டுக்குள் அரசு நிர்ணயித்த இலக்கை எட்டிவிடுவோம் என்று நிறுவனத்தின் தலைவர் அனுபம் வாஸ்தவா தெரிவித்தார். இது தொடர்பாக புதன்கிழமை பிஎஸ்என்எல் ஊழியர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தி, நிறுவனத்தை மீண்டும் பழைய நிலைக்கு அதாவது லாபமீட்டுவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

பிஎஸ்என்எல் நிறுவனம் தனியாக ஒரு இன்பிராஸ்ட்ரெக்சர் நிறுவனத்தை ஏற்படுத்தி செல்போன் டவர்களை நிர்வகிக்கத் திட்டமிட்டுள்ளது. நிறுவனத்துக்கு 64,500 செல்போன் கோபுரங்கள் உள்ளன. இதன் மூலம் அடுத்த 4 ஆண்டுகளில் ரூ. 2,200 கோடி வருமானம் ஈட்ட அரசு முடிவு செய்துள்ளது. நிறுவனத்துக்குச் சொந்தமான நிலங்கள் மூலம் ரூ. 2,500 கோடி வருமானம் ஈட்ட முடிவு செய்துள்ளதாக வாஸ்தவா கூறினார். வை-ஃபை இணைப்பு சேவை மூலம் வருமானத்தைப் பெருக்க பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நிறுவனம் 450 ஹாட்ஸ்பாட் எனப்படும் வை-ஃபை இணைப்பு மையங்களை 24 சுற்றுலா மையங்களில் அமைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்