முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சகிப்பின்மையால் அதிகம் பாதிக்கப்பட்டவர் மோடிதான்: ராஜ்நாத்சிங் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 1 டிசம்பர் 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - சகிப்பின்மையால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு நபர் என்றால் அது பிரதமர் மோடிதான் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மக்களவையில் தெரிவித்தார். சகிப்பின்மை குறித்து மக்களவையில் நேற்று நடந்த விவாதத்திற்கு பதிலளித்து ராஜ்நாத்சிங் பேசியதாவது., சகிப்பின்மை தலைப்பில் பேசிய அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் சகிப்புத்தன்மை என்றால் என்ன என்பது பற்றி அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.

ஒரு விஷயத்தில் நமக்கு ஏற்பு இல்லாவிட்டாலும், அந்த விஷயத்தை ஏற்றுக்கொள்வதே சகிப்புத்தன்மை. இந்தியர்களுக்கு அது இயல்பிலேயே உள்ளது. நெருக்கடி கொடுத்து சகிப்புத்தன்மை வர வேண்டிய நிலையில், இந்தியர்கள் கிடையாது.இந்த நாட்டில் சகிப்புத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டு மிகவும் சீரியசானது. இந்த நாட்டில் யாருமே வாழ முடியாதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும் குற்றச்சாட்டு இது. ஆனால், உண்மை அப்படி கிடையாது.

சகிப்புத்தன்மையைவிட எதற்காக, சகிப்பின்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.உண்மையை சொல்லப்போனால், சகிப்பின்மையால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு நபர் நமது பிரதமர் நரேந்திர மோடிதான். அவர் பிரதமராக வந்ததைத்தான், சிலரால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. சகிப்பின்மையால் அதிகம் பாதிக்கப்பட்ட கட்சி பாஜகதான். நாங்கள் ஆட்சிக்கு வந்ததை சிலரால் பொறுக்க முடியவில்லை.நரேந்திர மோடி, இந்த நாட்டை ஆள தகுதியில்லாதவர் என்று விருதை திருப்பிக்கொடுத்த ஒருவர், முன்பே ஒருமுறை கூறினார். அப்படியானால், இவர்கள் நோக்கம் என்ன? மக்களின் தீர்ப்பை கூட மதிக்க அவர்கள் தயாராக இல்லை என்பது தெளிவாகிறது.

நமது நாடு சகிப்புத்தன்மைக்கு பெயர் பெற்ற நாடு. அதைப்பற்றி பேசாமல், ஏன் சகிப்பின்மை என்பது வேண்டுமென்றே விவாதப்பொருளாக்கப்படுகிறது? உலகிலேயே சகிப்புத்தன்மை அதிகம் உள்ள நாடு இந்தியா. சகிப்புத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த யார் முயன்றாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மக்களுக்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன்.இந்த நாட்டில் பேச்சுரிமை இல்லை என்று இங்கு பேசிய எம்.பிக்கள் கூறினர். ஒரு இஸ்லாமிய தலைவர், பகவான் ராமர், பாகிஸ்தானில் பிறந்தார் என்று கூறினார். ஆனால், பெரும்பான்மையாக உள்ள இந்துக்கள், அதற்கு எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை.

இதுவே இஸ்லாமிய கடவுளை பற்றி ஒருவர் கூறியிருந்தால் என்ன ஆயிருக்கும் என்று சிந்தித்து பாருங்கள். பேச்சுரிமைக்கு இதைவிட எடுத்துக்காட்டு எந்த நாட்டிலாவது உள்ளதா?தாத்ரியில் நடந்த கொலை பற்றி பேசவும் நான் தயார். ஆனால், அதை கேட்கும் சகிப்புத்தன்மை எதிர்க்கட்சிகளுக்கு கிடையாது. உடனே கூச்சல், குழப்பம் செய்வார்கள். உ.பி. அரசு மத்திய அரசுக்கு அனுப்பிய அறிக்கையில், மாட்டிறைச்சி கொலை என்றோ, மதக் கலவரம் என்றோ குறிப்பிடவேயில்லை. உ.பி அரசு கேட்டிருந்தால் மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கும்விட தயார். ஆனால் உ.பி அமைச்சர் ஒருவர் இதை இங்கிலாந்தில் பேசியுள்ளார்.

மகாராஷ்டிராவில் நடந்த பன்சாரே கொலை தொடர்பாக பலரை கைது செய்துள்ளோம். கல்புர்கி கொலை தொடர்பாக எந்த உதவியை கர்நாடக அரசு கேட்டாலும் செய்து கொடுக்க தயாராக உள்ளோம். அமைச்சர் வி.கே.சிங் தலித்துகளை நாயோடு ஒப்பிட்டதாக அவரது பேச்சு மடைமாற்றம் செய்யப்பட்டது. எனவேதான், மடைமாற்றம் செய்துவிட வாய்ப்புள்ள வகையில் எந்த கருத்தையும் கூறாதீர்கள் என அமைச்சர்களுக்கும், எம்.பிக்களுக்கும் உத்தரவிட்டுள்ளோம். இதற்கு மேல் எதிர்க்கட்சிகளுக்கு என்ன வேண்டும்? இதற்கு முன்பு இருந்த பிரதமர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் கருத்து கூறினார்களா? இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்