முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி - இந்தியா அபார வெற்றி

சனிக்கிழமை, 23 ஜனவரி 2016      விளையாட்டு
Image Unavailable

சிட்னி : ஆஸ்திரேலியாவுடனான  5-வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில், மணீஷ் பாண்டேவின் அபார சதத்தால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி, சிட்னி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச் 6 ரன்களிலும், கேப்டன் ஸ்மித் 28 ரன்களிலும், ஜார்ஜ் பெய்லி 6 ரன்களிலும், ஷான் மார்ஷ் 7 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.

இதனால், ஆஸ்திரேலியா அணி 117 ரன்கள் குவிப்பதற்குள் முக்கிய 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. ஆனாலும் மருமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் 4-வது சதத்தை நிறைவு செய்தார். பின்னர், 113 பந்துகளில் [9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்] 122 ரன்கள் குவித்து வெளியேறினார். அவருக்கு உறுதுணையாக மிட்செல் மார்ஷ் இந்திய வீரர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். இருவரும் இணைந்து 5-வது விக்கெட்டுக்கு 118 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல் மார்ஷ் 83 பந்துகளில் [9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்] தனது முதல் ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். இதனால், ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் குவித்துள்ளது.

இந்திய அணி தரப்பில் இஷாந்த் சர்மா, ஜாஸ்பிரிட் பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ், ரிஷி தவான் தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.  பின்னர் 331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 56 பந்துகளில் [7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்] 78 ரன்கள் குவித்து வெளியேறினார். அப்போது ரோஹித் சர்மா 45 ரன்கள் எடுத்திருந்தார். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 123 ரன்கள் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் களமிறங்கிய விராட் கோலி 8 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து மணீஷ் பாண்டே களமிறங்கினார்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரோஹித் சர்மா 99 ரன்கள் குவித்து 1 ரன்னில் சதத்தை தவறவிட்ட நிலையில் வெளியேறினார். கேப்டன் தோனியும், மணீஷ் பாண்டேவும் இணைந்தனர்.  ஒருபக்கம் பக்கம் மணீஷ் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை நொறுக்க, மற்றொரு பக்கம் தோனி பொறுமையாகி ஆடி ரசிகர்களை வெறுப்பேற்றினார். இதனால், ஒருபக்கம் தேவையான ரன்ரேட் அதிகரித்துக்கொண்டே சென்றது. கடைசி 3 ஓவர்களில் 35 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 48-வது ஓவரில் மணீஷ் பாண்டே, தோனி தலா 1 பவுண்டரிகள் உட்பட 13 ரன்கள் விளாசப்பட்டது.

கடைசி 2 ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டது. 49-வது ஓவரில் 9 ரன்கள் எடுக்கப்பட்டது. இதனால், கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. இதனால், ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. முதல் பந்து அகலப்பந்தாக வீசப்பட்டதால் 1 ரன்னும், அதே பந்தில் தோனி 1 சிக்ஸர் விளாச 7 ரன்கள் கிடைத்தது.  இரண்டாவது பந்தில் தோனி அவுட்டானார். இதனால் 4 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டது. 3-வது பந்தில் மணீஷ் பாண்டே பவுண்டரி விளாசினார். இதன் மூலம் தனது முதல் சதத்தையும் பாண்டே பதிவு செய்தார். அவர், 80 பந்துகளில் [8 பவுண்டரிகள், 1 சிக்ஸர்] 100 ரன்கள் குவித்தார். அடுத்த பந்தில் 2 ரன்கள் எடுக்க இந்திய 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலிய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.  ஆட்ட நாயகன் விருது மணீஷ் பாண்டேவிற்கும், தொடர் நாயகன் விருது ரோஹித் சர்மாவிற்கும் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்