முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய ஓபன்: இறுதிச்சுற்றுக்கு ஜோகோவிச் - செரீனா முன்னேற்றம்

வியாழக்கிழமை, 28 ஜனவரி 2016      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் - ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு ஜோகோவிச் மற்றும் செரீனா வில்லியம்ஸ் முன்னேறியுள்ளனர் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் செரீனா வில்லியம்ஸ், மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் 4-ம் தரநிலை வீராங்கனை அக்னியேஸ்கா ரத்வன்ஸ்காவை  6-0, 6-4 என்ற நேர்செட்களில் வீழ்த்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய ஓபனில் இவர் 7-வது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். செரீனா இதுகுறித்து தெரிவிக்கையில், இறுதிச்சுற்றுக்கு இவ்வளவு விரைவில் முன்னேறியதை தன்னால் நம்ப முடியவில்லை என்று தெரிவித்தார். மேலும், இறுதிச்சுற்றில் சிறப்பான ஆட்டத்தை தன்னால் வெளிப்படுத்த முடியும் என்றும் கூறினார்.

இறுதிச்சுற்றில் 7-ம் தரநிலை வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் அல்லது தரநிலையில் பின்தங்கிய நிலையில் இருக்கும் ஜோகன்னா கோன்டாவை செரீனா எதிர்கொள்வார். இதில் செரீனா வெற்றி பெற்றால் அவர் வெல்லும் 22-வது கிராண்ட் ஸ்லாம் டைட்டிலாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்களுக்கான ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் முன்னணி வீரரான ஜோகோவிச் - ரோஜர் பெடரர் பலப்பரீட்சை நடத்தினார்கள். தொடக்கம் முதலே ஜோகோவிச் அதிரடியாக விளையாடினார். ஜோகோவிச் ஆட்டத்திற்கு பெடரரால் ஈடுகொடுத்து ஆட முடியவில்லை.

இதனால் முதல் இரண்டு செட்டுகளையும் ஜோகோவிச் 6-1, 6-2 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றினார். ஆனால், 3-வது செட்டை 3-6 என்ற கணக்கில் இழந்தார். இருந்தாலும், சுதாரித்துக்கொண்டு விளையாடி 4-வது செட்டை 6-3 என கைப்பற்றி 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு ஜோகோவிச் முன்னேறினார். இன்று நடைபெறும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஆண்டி முர்ரே- ரயோனிக் ஆகியோர் மோதுகிறார்கள். இதில் வெற்றி பெறும் வீரர் ஜோகோவிச் உடன் இறுதிப்போட்டியில் மோதுவார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்