முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவிலில் தரிசனங்களுக்கான டிக்கெட் விலை உயருகிறது

சனிக்கிழமை, 30 ஜனவரி 2016      ஆன்மிகம்
Image Unavailable

நகரி - திருப்பதி கோவிலில் பல்வேறு தரிசனங்களுக்கான டிக்கெட் விலை உயருகிறது. மேலும் சிறப்பு கட்டண சேவைக்கு வழங்கப்படும் 2 இலவச லட்டு பிரசாதத்தை நிறுத்த சிறப்புக்குழு தெரிவித்த யோசனையை திருப்பதி தேவஸ்தானம் அமல்படுத்தவுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். பக்தர்களின் உண்டியல் காணிக்கை மூலமே தினமும் 2 கோடிக்கு அதிகமான வருமானம் வருகிறது. இந்த நிலையில் கோவிலில் செலவை குறைத்து வருமானத்தை பெருக்குவது குறித்த ஆலோசனை வழங்க சிறப்பு குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு அளிக்கும் பரிந்துரைபடி இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கப்படும். இந்த சிறப்பு குழு தனது பரிந்துரை அறிக்கையை தேவஸ்தான முதன்மை நிர்வாக அதிகாரி சாம்பசிவராவிடம் நேற்று முன்தினம் இரவு வழங்கியது. இந்த சிறப்பு குழு 300 ரூபாய் தரிசன டிக்கெட் கட்டணத்தை ரூ.500 ஆக உயர்த்த பரிந்துரை செய்தது. இதற்கு சில உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ரூ.400 ஆக குறைக்கப்பட்டது. மேலும் ஒரு டிக்கெட்டுக்கு இலவசமாக வழங்கும் லட்டு பிரசாதத்தையும், சிறப்பு கட்டண சேவைக்கு வழங்கப்படும் 2 இலவச லட்டு பிரசாதத்தை நிறுத்தவும் யோசனை தெரிவித்து உள்ளது.

இதற்கு பதிலாக ரூ.25 விலையில் கூடுதல் லட்டு கொடுக்க முடிவு செய்து உள்ளது. வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டை ரூ.500–ல் இருந்து ரூ.800 ஆக உயர்த்தவும், சுப்ரபாத சேவை டிக்கெட்டை ரூ.240–ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தவும், தோமாலை அர்ச்சனை டிக்கெட் ரூ.440–ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தவும் முடிவு செய்து உள்ளது. புதிதாக உதயம் அஸ்தமய சேவையை அறிமுகப்படுத்த யோசனை கூறியுள்ளது. இந்த குழு தெரிவித்த யோசனையில் இலவச லட்டு பிரசாதம் நிறுத்தம், ரூ.300 தரிசன டிக்கெட் உயர்வு போன்றவை உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு நிலவி உள்ளது. சிறப்பு குழுவின் பரிந்துரைகள் குறித்து திருமலையில் நேற்று நடைபெற உள்ள அறங்காவலர் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. அதன் பிறகே இதில் தேவஸ்தானம் ஒரு முடிவுக்கு வரும். இதற்கிடையே ஆர்ஜித சேவைக்கான கரண்டு புக்கிங் திட்டத்தை தொடர்ந்து அமுல்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்