முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இதுவரை 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 7 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர் : தமிழக சுகாதாரத்துறை தகவல்

சனிக்கிழமை, 30 ஜனவரி 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை - தமிழகத்தில் இதுவரை 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் பயன் அடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு துறைகளின் மூலம் சிறப்பான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறையின் நலத்திட்டங்களில், மக்களின் உன்னத உயிர் காக்கும் அவசர கால ஊர்தி 108 திட்டமும் ஒன்றாகும். ‘108’ மத்திய அழைப்பு மையத்திற்கு சராசரியாக ஒரு நாளைக்கு 17 ஆயிரம் அழைப்புகள் பெறப்படுகின்றன. இவற்றில் மருத்துவ உதவி தேவைப்படும் நிலையிலுள்ள சுமார் 3000 நபர்கள் நாள்தோறும் பயன் பெறுகின்றனர்.

கட்டணமில்லா அவசர கால ஆம்புலன்ஸ் வாகனம் ஒரு நாளைக்கு குறைந்தது 4 முறைகள் சென்று மாதத்திற்கு ஏறத்தாழ 88 ஆயிரம் நபர்களுக்கு சேவையளித்து வருகிறது. பச்சிளங் குழந்தைகளுக்கான அவசர ஊர்தி இந்தியாவிலேயே முதன் முறையாக, குழந்தை பிறந்தது முதல் 28 நாட்கள் வரையிலான பச்சிளங் குழந்தைகளுக்கு, பிரத்யேகமாக அவசர சிகிச்சை அளிப்பதற்காக 2011 ஜூன் மாதம் முதல்வர் திட்டம் தொடங்கப்பட்டது. பச்சிளங் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த அவசரகால ஊர்தியில், பச்சிளங்குழந்தைகளின் உயிர்காக்கும் கருவிகளான இன்குபேட்டர், சிரஞ்ச் பம்ப் ஆகியவை பொருத்தப்பட்டு, குழந்தைகளுக்கான சிகிச்சை முறைகளில் பயிற்சி பெற்ற மருத்துவர் உதவியோடு மருத்துவகல்லூரி மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல இந்த ஊர்திகள் பயன்படுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களிலுள்ள 61 சிறப்பு ஊர்திகள் மூலம் குறை பிரசவம் குறைந்த எடை மற்றும் பிறவிக் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகள் இந்த சிறப்பு சேவையின் மூலம் கடந்த ஆண்டில் மட்டும் 17,736 குழந்தைகள் பயன் பெற்றுள்ளனர். தற்போது உள்ள பச்சிளங்குழந்தைகளுக்கான அவசர ஊர்திகளோடு மேலும் 5 சிறப்பு ஊர்திகள் பயன்பாட்டிற்கு விரைவில் வர உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் அவசரகால 108 ஆம்புலன்ஸ் திட்டத்தின் மூலம் 31,436 உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. 17,051 பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சையும், 1,80,281 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சிகிச்சையும், 23,656 மலைவாழ் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு சிகிச்சையும் என மொத்தம் 7,18,440 நபர்கள் இச்சேவையினால் பயனடைந்துள்ளனர். மேலும், மனித உயிர்களுக்கு மனித நேயத்தோடு சேவையாற்றும் இந்த அரசு, உயிரற்ற மனித உடலுக்கும் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றி வருகிறது. 24 மணிநேரமும் இயங்கும் இப்பிரிவில், 155377 என்ற தொலைபேசிக்கு இறந்தவர் குறித்து தகவல் தெரிவித்து சேவையினை பெறலாம்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அமரத்துவம் எய்தியவர்களின் குடும்பங்களுக்கு உதவிடும் வகையில், இறந்தவர்களின் குடும்பத்தினர் வேண்டுகோளின்படி அவர்களின் இல்லத்திற்கு அல்லது ஈமச்சடங்கு செய்யும் இடத்திற்கு எவ்வித கட்டணமும் இல்லாமல் உடல்களை கொண்டு செல்லும் உன்னதமான பணியில் ‘108’ சேவை மையம் பணியாற்றுகிறது. உயிர்காக்கும் உன்னத சேவையில் ஈடுபட்டு பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றி வரும் 108 என்ற அவசரகால சேவை வரும் காலங்களில் மேலும் செம்மைபடுத்தப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்