முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐதராபாத் மாணவர் தற்கொலை விவகாரத்தில் காங்கிரஸ் முதலைக்கண்ணீர் வடிக்கிறது: பா.ஜ.க குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 30 ஜனவரி 2016      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி - ஐதராபாத் பல்கலைக் கழக தலித் மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை விவகாரத்தில் காங்கிரஸ் முதலைக்கண்ணீர் வடிப்பதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு குற்றஞ்சாட்டியுள்ளார். ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த தலித் மாணவர் ரோகித் வெமுலா உள்பட 5 மாணவர்களை பல்கலைக்கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்தது. இதனால் அவர் கடந்த 17-ந்தேதி விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நாடு முழுவதும் மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, பல்கலைக்கழக துணைவேந்தர் அப்பாராவ் பொடில் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து துணைவேந்தர் அப்பாராவ் பல்கலைக்கழகத்தில் இருந்து விடுப்பில் சென்றார். அவருக்கு பதிலாக மூத்த பேராசிரியர் விபின் ஸ்ரீவஸ்தவா இடைக்கால துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.

ஆனால் மாணவர் ரோகித் சாவுக்கு நீதி வேண்டும், துணைவேந்தர் அப்பாராவ் பொடிலை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள் நேற்று உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில்,  நேற்று நள்ளிரவு 12.10 மணியளவில்  ஐதராபாத் வந்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். நேற்று காலை மாணவர்களுடன் இணைந்து  உண்ணாவிரத போராட்டத்திலும் ராகுல் காந்தி கலந்து கொண்டுள்ளார்.  ஆனால், இப்பிரச்சினைய பயன்படுத்தி, மாணவர்களை தனது அரசியல் கருவியாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பயன்படுத்துவதாக பாஜக கடுமையாக சாடியுள்ளது.

டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு கூறியதாவது:- தனது சுய இலாபத்திற்காகவே காங்கிரஸ் இப்பிர்ச்சினையில் முதலைக்கண்ணீர் வடிக்கிறது. காங்கிரசும், கம்யூனிஸ்டும் இப்பிரச்சினையை அரசியல் பிரச்சினையாக்க முற்பட்டு பல்கலைகழகத்தை மொய்க்க தொடங்கியுள்ளன. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் இது போன்ற 9 சம்பவங்கள் நடைபெற்றதை அக்கட்சிகள் மறந்துவிட்டன.  மாணவர்கள் கல்வி கற்க செல்லும் இடத்திற்கு சென்று ராகுல் காந்தி சூழலை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மாணவர் மரணத்தை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்வதை பார்க்கும் போது  எந்த அளவுக்கு அக்கட்சி விரக்தியடைந்துள்ளது என்பதை காட்டுகிறது. இது போன்ற பிரித்தாளும் அரசியல் விஷம் போன்றது. இதை பாரதீய ஜனதா வன்மையாக கண்டிக்கிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்