முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை மாநகராட்சி குடிநீர் வாரியம் மற்றும் மின்சார வாரியம் கட்டணங்களை ஒரே இடத்தில் செலுத்தலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சனிக்கிழமை, 30 ஜனவரி 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை - சென்னை மாநகராட்சி குடிநீர் வாரியம் மற்றும் மின்சார வாரியம் கட்டணங்களை ஒரே இடத்தில் செலுத்தலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:– முதல்–அமைச்சரின் உத்தரவின் பேரில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தமிழகம் முழுவதும் அரசு இ–சேவை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது.தலைமைச் செயலகம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டல அலுவலகங்கள், அனைத்து பகுதி அலுவலகங்கள் மற்றும் அனைத்து கோட்ட அலுவலகங்கள், சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி ஆகிய நான்கு மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் என மொத்தம் 470 இடங்களில் அரசு இ–சேவை மையங்களை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் அமைத்து நிர்வகித்து வருகிறது.

தலைமைச் செயலகம், சென்னை மாநகராட்சிப் பகுதிக்கு உட்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டல அலுவலகங்கள், அனைத்து பகுதி அலுவலகங்கள் மற்றும் அனைத்து கோட்ட அலுவலகங்கள், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் அரசு இ–சேவை மையங்களில் பொதுமக்கள் சென்னை பெருநகர குடிநீர் வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய குடிநீர் வரி மற்றும் குடிநீர் கட்டணம் ஆகியவற்றை ரொக்கமாக செலுத்தி அதற்குண்டான ரசீதுச் சீட்டினை பெற்றுக் கொள்ளலாம்.சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி மற்றும் கம்பெனி வரி ஆகியவற்றை வங்கி வரைவோலையாகவோ அல்லது காசோலையாகவோ செலுத்தலாம்.இதுமட்டு மின்றி தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணத்தையும் இம்மையங்களில் ரொக்கமாகச் செலுத்தலாம்.

இதற்கான சேவைக் கட்டணம், செலுத்த வேண்டிய தொகை ரூ.1லிருந்து ரூ. 1000–க்குள் இருந்தால் ரூ. 10–ஆகவும்; ரூ. 1001–லிருந்து ரூ. 3,000–க்குள் இருந்தால் ரூ.20–ஆகவும்; ரூ.3001–லிருந்து ரூ.5,000–க்குள் இருந்தால் ரூ. 30–ஆகவும்; ரூ.5001–லிருந்து ரூ.10,000–க்குள் இருந்தால் ரூ.50–ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.எனவே, சென்னை நகர பொது மக்கள் சென்னை மாநகராட்சிக்குண்டான வரிகள் மற்றும் கட்டணங்கள், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கான கட்டணங்கள் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வாரியத்திற்கான குடிநீர் வரி மற்றும் குடிநீர் கட்டணங்கள் ஆகியவற்றை ஒரே இடத்தில் செலுத்தும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த வசதியினை பயன்படுத்திப் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்