முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலால் வரி உயர்வை திரும்ப பெற மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 31 ஜனவரி 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி என்ற நீண்ட கால கண்ணோட்டத்தின் அடிப்படையில் இந்த கலால்வரி உயர்வுகளை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். அபரிமிதமாக கலால் வரி விதிக்கப்படுவதை எவராலும் ஏற்றுக்கொள்ள இயலாது
என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு:

உலக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகள் குறைந்து வரும் நிலையில், இந்த விலை குறைவின் பயன் மக்களுக்கு சென்றடைவதை தடுக்கும் வண்ணம், மத்திய பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரிகளை உயர்த்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. பெட்ரோலுக்கான கலால் வரியை லிட்டருக்கு 1 ரூபாய் வீதமும்,  டீசலுக்கான கலால் வரியை 1 ரூபாய் 50 காசுகள் என்ற வீதமும் தற்போது மத்திய அரசு உயர்த்தியுள்ளது கண்டனத்துக்குரியது ஆகும்.

இந்த மாதம் மட்டும் பெட்ரோலுக்கான கலால் வரியை லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் 12 காசுகள் வீதமும், டீசலுக்கான கலால் வரியை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் 50 காசுகள் வீதமும் மத்திய அரசு உயர்த்தியுள்ளது.  2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இது வரை பெட்ரோலுக்கான கலால் வரியை 11 ரூபாய் 77 காசுகள் என்ற அளவிலும், டீசலுக்கான கலால் வரியை 13 ரூபாய் 57 காசுகள் என்ற அளவிலும் மத்திய அரசு உயர்த்தியுள்ளது. மத்திய அரசின்வருவாய் பற்றாக்குறையை குறைக்கும் வகையில் இது போன்று பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை உயர்த்துவது நியாயமானது அல்ல.

16.1.2016 அன்றைய நிலவரப்படி பெட்ரோலுக்கான அடிப்படை விலையில் கலால் வரி 83.59 என்ற சதவீதத்திலும்,  டீசலுக்கான கலால் வரி 77.63 என்ற சதவீதத்திலும் உள்ளது. தற்போது உயர்த்தப்பட்ட கலால் வரி, அடிப்படை விலையில் குறைக்கப்பட வேண்டிய தொகையே என எடுத்துக் கொண்டால், பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரி  91 சதவீதம் என்ற அளவில் இருக்கும். இவ்வாறு அபரிமிதமாக கலால் வரி விதிக்கப்படுவது எவராலும் ஏற்றுக்கொள்ள இயலாது. முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு கடைபிடித்த தவறான பெட்ரோல் மற்றும் டீசல்விலை நிர்ணயக் கொள்கை மாற்றியமைக்கப்பட வேண்டும் என நான் பல முறை தெரிவித்துள்ளேன். அதைச் செய்வதன் மூலமும், கடந்த 13 மாதங்களில் பெட்ரோல் மீது 11 ரூபாய் 77 காசுகள் அளவிற்கும், டீசல் மீது 13 ரூபாய் 57 காசுகள் அளவிற்கும் உயர்த்தப்பட்டகலால் வரியை குறைப்பதன் மூலமும் மிக குறைந்த விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் மக்களுக்கு கிடைக்க ஏதுவாகும்.

மத்திய அரசைப் பின்பற்றி பல மாநிலங்கள் தங்களால் விதிக்கப்படும் விற்பனை வரியை உயர்த்தியுள்ள போதிலும், தமிழக மக்களின் நலன் மீது எப்போதும் தொடர்ந்து அக்கறை செலுத்தி வரும் எனது தலைமையிலான அரசு அவ்வாறு செய்யவில்லை. எனவே தான் பெட்ரோல் மற்றும்டீசலுக்கான விற்பனை வரி தென் மாநிலங்களிலேயே தமிழ்நாட்டில் தான் குறைவானது ஆகும். கடந்த 13 மாதங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றிற்கு உயர்த்தப்பட்ட கலால்வரியை குறைப்பதன் மூலம் இவை மிகக் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கவழிவகை ஏற்படும். அதன் மூலம் பொருளாதாரம் மலர்ச்சி அடையும். எனவே, மத்திய அரசின்வருவாய் பற்றாக்குறையை குறைக்க வேண்டும் என்ற குறுகிய கண்ணோட்டத்தை விடுத்து, ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி என்ற நீண்ட கால கண்ணோட்டத்தின் அடிப்படையில் இந்த கலால்வரி உயர்வுகளை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று நான் வலியுறுத்திக்கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்