முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.6,376 கோடி மதிப்பீட்டில் நிலக்கரியில் இயங்கும் 800 மெகாவாட் திறனுள்ள அனல் மின்திட்டம் : முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்

ஞாயிற்றுக்கிழமை, 31 ஜனவரி 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக, திருவள்ளூர் மாவட்டம் - அத்திப்பட்டில் 6 ஆயிரத்து 376 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படவுள்ள,  நிலக்கரியில் இயங்கும் 800 மெகாவாட் திறனுடைய அலகினை, வடசென்னை மிகஉய்ய அனல்மின்திட்டம் III-க்காக, முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் அடிக்கல் நாட்டினார். இத்திட்டம் ஆகஸ்டு 2019-ல் நிறைவுபெறும்போது, நாளொன்றுக்கு 19 புள்ளி 2 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றும், அதன்மூலம் தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு சுமார் 6 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்சாரம் கூடுதலாக கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிசக்தித் துறையின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம் - அத்திப்பட்டில் 6 ஆயிரத்து 376 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படவுள்ள, நிலக்கரியில் இயங்கும் 800 மெகாவாட் திறனுள்ள அலகினை, வட சென்னை மிகஉய்ய அனல்மின்திட்டம் நிலை III-க்கு அடிக்கல் நாட்டி, இந்த மிகஉய்ய அனல் மின் திட்டத்தினை செயல்படுத்திட 2 ஆயிரத்து 759 கோடி ரூபாய் ஒப்பந்த ஆணையினை முதல்வர் ஜெயலலிதா  பாரத மிகுமின் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அதுல் சோப்தியிடம் தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

வேளாண் வளர்ச்சிக்கும், தொழில் மேம்பாட்டிற்கும், முக்கிய காரணியாக விளங்கும் மின்சாரத்தின் தேவை தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டே செல்வதை கருத்தில் கொண்டு, தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றிட வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன், மின் உற்பத்தியைப் பெருக்குதல், மின் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், மின் தொடரமைப்புகளை நிறுவுதல், மின் அனுப்புகை மற்றும் மின் பகிர்மானத்தை விரிவாக்குதல் போன்ற பணிகளை முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் - அத்திப்பட்டில், வடசென்னை அனல்மின் நிலையம் I மற்றும் II அமைந்துள்ள வளாகத்தில் 250 ஏக்கர் நிலப் பரப்பளவில், 6 ஆயிரத்து 376 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படவுள்ள நிலக்கரியில் இயங்கும் 800 மெகாவாட் திறனுள்ள அலகினை, வடசென்னை மிகஉய்ய அனல்மின்திட்டம் நிலை III-க்கு முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.

மிகஉய்ய அனல் மின் தொழில்நுட்பத்தில் 800 மெகாவாட் திறனுடைய அலகு தமிழ்நாட்டில் அமைப்பது இதுவே முதன் முறையாகும். இத்திட்டம் ஆகஸ்டு 2019-ல் நிறைவு பெற்று, நாளொன்றுக்கு 19 புள்ளி 2 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு சுமார் 6 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்சாரம் தமிழ்நாட்டிற்கு கூடுதலாக கிடைக்கும்.

முதற்கட்டமாக, 800 மெகாவாட் திறனுள்ள அலகினை, வட சென்னை மிகஉய்ய அனல்மின்திட்டம் நிலை-III திட்டத்திற்கான கொதிகலன், சுழலி, மின்னாக்கி, தொகுப்பு மற்றும் அதன் சார்ந்த பொதுவியல் பணிகளுடன், பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானப் பணிகளான வடிவமைத்தல், உற்பத்தி, விநியோகம், நிறுவுதல், தேர்வாய்வுக்குப்பின் செயல்படவைத்தல், ஆகிய பணிகளுக்கு 2 ஆயிரத்து 759 கோடி ரூபாய்க்கான ஒப்பந்த ஆணையினை பாரத மிகுமின் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர்.அதுல் சோப்தியிடம், முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் . நத்தம் ஆர். விசுவநாதன், தலைமைச் செயலாளர். ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், எரிசக்தித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்பழனியப்பன், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் முனைவர் எம். சாய் குமார், பாரத மிகுமின் நிறுவனத்தின் செயல் இயக்குநர்.ஜி.கே. ஹெடா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்