முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல், டீசல் விலை கடுகளவு குறைப்பு

செவ்வாய்க்கிழமை, 2 பெப்ரவரி 2016      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி : பெட்ரோல் டீசல் விலையை கடுகளவு குறைத்துள்ளன எண்ணெய் நிறுவனங்கள். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை எவ்வளவுதான் அடிமட்டத்திற்கு இறங்கிப் போனாலும் நாங்கள் மட்டும் விலையைக் குறைப்பதில் கருமியாகத்தான நடப்போம் என்று எண்ணெய் நிறுவனங்கள் பிடிவாதமாக உள்ளன.

வரலாறு காணாத வகையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் பைசாக் கணக்கில்தான் நமது எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்து வருகின்றன. இது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஒருபக்கம் பெட்ரோல், டீசல் விலையை பைசாக் கணக்கில் எண்ணெய் நிறுவனங்கள் குறைத்து வரும் நிலையில் மறுபக்கம் சமீபத்தில் கலால் வரியை உயர்த்தியது மத்திய அரசு.

இதனால் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்த சிறிதளவு பலனைக் கூட மக்களால் அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. கடந்த 15 நாட்களில் கச்சா எண்ணெய் விலையானது பேரல் ஒன்றுக்கு 4 டாலர் வரை இறங்கியது. இதனால் பெட்ரோல் விலை ரூ. 1.04ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 1.53 என்றும் குறைந்திருக்க வேண்டும். அதாவது ஞாயிற்றுக்கிழமை இது குறைந்திருக்க வேண்டும்.

ஆனால் கலால் வரியை மத்திய அரசு பெட்ரோலுக்கு ரூ. 1 என்றும், டீசலுக்கு ரூ. 1.50 என்றும் உயர்த்தியதால் அதில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த கலால் வரி உயர்வு குறுக்கே வந்து சேர்ந்ததால் பெட்ரோல் விலை 4 பைசாவும், டீசல் விலை 3 காசும் மட்டுமே குறைந்துள்ளது.

கடந்த 3 மாதத்தில் கலால் வரி உயர்த்தப்படுவது இது 3வது முறையாகும். தற்போதைய கலால் வரி உயர்வின் மூலம் ரூ. 3200 கோடி கூடுதல் வருவாய் கிடைக்குமாம். 3 உயர்வுகளையும் சேர்த்தால் ரூ. 17,000 கோடி கிடைக்குமாம். முன்னதாக உயர்த்தப்பட்ட கலால்வரியை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும் அபரிமிதமான கலால் வரி உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தனது அறிக்கையில் கூறியிருந்தார். இந்த நிலையில் தான் பெட்ரோல், டீசல் விலையை கடுகளவு குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்