முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட நிதியை குறைக்கவில்லை அருண் ஜெட்லி

செவ்வாய்க்கிழமை, 2 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கான நிதியை குறைக்கவில்லை என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் படி ஆண்டிற்கு 100நாட்கள் வேலை அளிக்கப்பட்டது. விவசாயம் அல்லாத காலகட்டங்களில் கிராம மக்கள் வறுமையில் வாடாமல் இருக்க இந்த தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தை பாஜக அரசும் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யும் நிதியை குறைப்பதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் இதனை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறுத்தார். இந்த திட்டத்திற்கான நிதியை இந்த ஆண்டும் ஒதுக்கீடு செய்கிறோம் என்று அவர் தெரிவித்தார். பட்ஜெட் நிதியை விட குறைந்த அளவிலேயே கடந்த ஆண்டுகளில் இந்த திட்டத்திற்கு செலவிடப்பட்டது. இந்த நிதியாண்டில் இந்த திட்டத்திற்கு ஆகும் செலவினத்தை குறைக்கவில்லை. கிராமப்புறங்களில் வளர்ச்சியை மேம்படுத்தும் விதத்தில் அதனை செயல்படுத்துகிறோம் என்றும் தெரிவித்தார்.

தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் துவங்கப்பட்டு 10ஆண்டுகள் ஆகின்றன. இதனை யொட்டி டெல்லியில் நேற்று நடந்த மாநாட்டில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, திட்டத்தை நிறைவு செய்து அல்லது புதிய திட்டத்தை பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி கொண்டுவருவதற்கு தடைகள் உள்ளன. ஆனால் இந்த புதிய அரசு தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்வதுடன் அதற்கான நிதியையும் அதிகரிக்கிறது என்றார்.

எந்த திட்டத்திற்கும் நிதியை குறைக்கும் எண்ணம் இந்த அரசுக்கு இல்லை. இந்த திட்டத்திற்கு செலவழித்த தொகை மிக அதிகமாக இருக்கும். தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புதிட்டத்திற்கு இந்த ஆண்டு ரூ34ஆயிரம் முதல் ரூ35ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பபட்டிருக்கிறது. அந்த தொகை முழுவதும் செலவழிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கு மேலும் பல ஆதார வளங்கள் தரப்படுகின்றன.

2015-16ம் நிதியாண்டில் எந்த வளர்ச்சி பணிக்கும் நிதி ஒதுக்கீடு குறைக்கப்படவில்லை.பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை விட கூடுதலாக செலவழிக்கப்பட்டு இருக்கிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமையன்று காங்கிரஸ் கூறுகையில், எப்போதும் இல்லை என்பதைக்காட்டிலும் தாமதமாக வருவது நல்லதுதான் என்று தெரிவித்தது . தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை மோடி அரசு பாராட்டியுள்ளது. இதன் மூலம் எவ்வாறு கிராம மக்களின் வாழ்வாதாரத்தை தேசிய ஊரக வேலை உறுதியளிப்புதிட்டம் மாற்றியுள்ளது என காங்கிரஸ் தெரிவித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்