முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுஷ்மா சுவராஜ் இன்று முதல் 2 நாட்களுக்கு இலங்கை பயணம்

வியாழக்கிழமை, 4 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று முதல் இலங்கை தலைநகர் கொழும்பிற்கு 2நாள் பயணமாக செல்கிறார். இந்த பயணத்தின்போது அவர் இலங்கையின் உயர் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார். அவர் 9வது இந்தியா-இலங்கை கூட்டு கமிஷன் கூட்டத்திலும கலந்து கொண்டு இரு தரப்பு மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து பேசுகிறார். இந்த ஆண்டில் இலங்கைக்கு இரண்டாவது முறையாக அவர் தற்போது செல்கிறார். இந்தியா-இலங்கை கூட்டு கமிஷன் கூட்டத்தில் அவர்  இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீராவுடன் இன்றுகொழும்புவில் பேசுகிறார்.

இந்த கூட்டு கூட்டத்தில் பொருளாதாரம், மின்சாரம், எரிசக்தி, தொழில் நுட்பம், மற்றும் கடல் சார் ஒத்துழைப்பு, சமூக, கலாச்சார மற்றும் கல்வி விவகாரம், அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் பாதுகாப்பு ஒத்துழைப்பு, சுகாதாரம்,  மக்கள் விமான போக்குவரத்து,சுற்றுலா, இரு நாட்டு மக்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொண்டு உரையாடுதல் போன்ற விஷயங்கள் குறித்து இரு நாட்டு அமைச்சர்களும் விவாதிக்கிறார்கள். இரு நாடுகள் இடையேயான கடைசி கூட்டு கூட்டம் கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் புதுடெல்லியில் நடைபெற்றது. கூட்டு கமிஷன் கடந்த 1992ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இரு நாட்டு ஒத்துழைப்பில் உள்ள விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக இந்த கூட்டுகமிஷன் அமைக்கப்பட்டது.

சுஷ்மா சுவராஜ் இலங்கை ஜனாதிபதி மைத்ரி பாலா சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரம சிங்கே மற்றும் உயர் இலங்கை தலைவர்கள் ஆகியோரை சந்தித்து விரிவாக உரையாடுகிறார். இந்த விவாதத்தின் போது மீனவர்கள் பிரச்சினை குறித்தும் விவாதிக்கப்படுகிறது.  இந்தியா-இலங்கை உறவு கடந்த சில ஆண்டுகளாக பின்னடைவு பெற்றுள்ளது.

இலங்கை ஜனாதிபதியாக மகிந்தா ராஜபக்ஷே இருந்தபோது இருநாடுகளின் உறவில் தொய்வு ஏற்பட்டது. அவர் தற்போதைய தேர்தலில் தோல்வியை தழுவினார். இலங்கையில் ,சீனா  துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், மற்றும் இதர உள்கட்டமைப்பு திட்டங்களில் பங்கேற்று தனது இருப் பை உறுதி படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் மோடி இலங்கைக்கு பயணம் மேற் கொண்டார். இந்த பயணத்திற்கு பின்னர் இருநாடுகளின் உறவு சீரடைய தொடங்கியது. 25ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கைக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்