முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் உள்நாட்டு போருக்கு ராணுவ தீர்வு: அதிபர் ஆசாத் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 4 பெப்ரவரி 2016      உலகம்
Image Unavailable

ஜெனீவா - சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர ராணுவ தீர்வை நாடுவதாக அதிபர் ஆசாத் மற்றும் ரஷ்யா மீது அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் கெர்ரி குற்றஞ்சாட்டியுள்ளார். சிரியாவில் ஆட்சியாளர்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தை திங்கள்கிழமை முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி நடைபெற்று வந்தது.  முன்னதாக, சிரியா அரசுப் பிரதிநிதிகள் ஐ.நா. மத்தியஸ்தர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை பூர்வாங்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்தப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்வதும், சிரியா விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் பங்கேற்கச் செய்வதுமே, தற்போதைய முதன்மையான நோக்கமாக உள்ளது.

இந்நிலையில், அமைதி பேச்சுவார்த்தை தொடங்கிய சில தினங்களிலேயே நேற்று முன்தினம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையில் இருதரப்பிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற்றதாகவோ அல்லது நின்று விட்டதாகவோ கருதக்கூடாது என்று ஐ.நா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர ராணுவ தீர்வை நாடுவதாக அதிபர் ஆசாத் மற்றும் ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் குற்றம்சாட்டியுள்ளது. 

இது குறித்து பேசிய அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஜான் கெர்ரி,  சிரிய மக்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பாதிப்புகளை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இந்த பேச்சுவார்த்தையின் போது உலகின் அனைத்து நாடுகளும் ஒரே திசையில் செல்ல வேண்டும். காலம் கடத்த தேவையில்லை என்று வலியுறுத்தினார்.  சிரியாவில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்று வரும் உள்நாட்டுச் சண்டையில் 2.5 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் லட்சக்கணக்கானோர் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேறித் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்