முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரமாகும் ஜிகா வைரஸ் நோய்: அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அவசரநிலை பிரகடனம்

வெள்ளிக்கிழமை, 5 பெப்ரவரி 2016      உலகம்
Image Unavailable

நியூயார்க் - தீவிரமாக பரவி வரும் ஜிகா வைரஸ் நோயால் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அவசரநிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் தோன்றிய ஜிகா நோயானது ரியோ டி ஜெனிரோ உள்ளிட்ட 24 அமெரிக்க நாடுகளிலும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள சில நாடுகளிலும் படுவேகமாக பரவி வருகின்றது.   தாயின் கருவில் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை இந்த நோய் பாதிப்படையச் செய்கிறது. இதனால், ஜிகா பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகள் சிறிய தலைகளுடன் காணப்படுகின்றன. இந்நோயானது, சிக்குன் குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்களை பரப்பும் ‘ஏடிஸ்’ கொசுக்களால் பரவுவதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், செக்ஸ் மூலமாகவும் ஜிகா பரவுவதாக சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

  அமெரிக்க நாடுகளை கடந்து ஐரோப்பிய நாடுகளிலும் ஜிகா நோய் வேகமாக பரவி வருகின்றது. அமெரிக்காவில் பெரும்பாலான மாகாணங்களில் இந்நோயின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அமெரிக்காவின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான டெக்ஸாஸ் மாகாணத்துக்கும் பலருக்கு இந்நோயின் அறிகுறிகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஜிகாவால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியுடன் உடலுறவு வைத்துகொண்டதன் மூலம் தற்போது இங்குள்ள ஒரு ஆணுக்கும் ஜிகா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளது.  நியூயார்க் நகரில் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஜிகா தாக்கம் உள்ளதா? என்பதை கண்டறிவதற்கான பரிசோதனைகளை இலவசமாக நடத்த வேண்டும் என அம்மாநில கவர்னர் உத்தரவிட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் வெப்பப் பிரதேசமாக கருதப்படும் புளோரிடா மாநிலத்தில் ஜிகா வைரஸ் வேகமாக பரவிவருகிறது.

அங்குள்ள தட்பவெப்ப நிலை ஜிகா வைரஸை பரப்பும் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாக சாதகமாக அமைந்துள்ளதால், புளோரிடா மாநிலம் முழுவதும் சுகாதார அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில கவர்னர் ரிக் ஸ்காட் அறிவித்துள்ளார். குறிப்பாக, தெற்கு புளோரிடாவில் உள்ள ப்ரோவார்ட், மியாமி-டாடே, டம்பா பிராந்தியத்தில் உள்ள ஹில்ஸ்பரோ, தென்மேற்கில் உள்ள லீ கவுன்ட்டி மற்றும் சான்ட்டாரோஸா கவுன்ட்டியில் கொசுக்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கும்படி சுகாதாரத்துறை பணியாளர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். புயலைப்போல இந்த நோயில் இருந்தும் மக்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜிகா வைரஸ் பரவுவதையடுத்து சுகாதார அவசரநிலையை பிரகடனப்படுத்திய ஐந்தாவது மாநிலம் புளோரிடா என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்