முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கெயில் எரிவாயு திட்டம் : பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

திங்கட்கிழமை, 8 பெப்ரவரி 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : விவசாயிகளை பாதிக்காத வகையில் விளைநிலங்களுக்கு பதிலாக தேசிய நெடுஞ்சாலையையொட்டி எரிவாயு குழாய் பதிக்கும் வாய்ப்புகளைக் கண்டறிய, தமிழக அரசு நியமித்துள்ள நிபுணர் குழுவுடன் இணைந்து, ஒத்துழைக்குமாறு கெய்ல் நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதம் வருமாறு:-

திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களின் வழியாக, கெய்ல் நிறுவனம், கொச்சி, கூட்டநாடு, மங்களூரு, பெங்களூருக்கு இடையே எரிவாயு குழாய் பதிக்கும், மிக முக்கியத்துவம் வாய்ந்ததும், துரித நடவடிக்கைக்கு உரியதுமான உடனடிப் பிரச்னையை தங்களின் கவனத்திற்கு நான் கொண்டு வருகிறேன். எரிவாயு குழாய் பதிக்கும் தற்போதைய திட்டம், சம்பந்தப்பட்ட 7 மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளின் விளை நிலங்களுக்கும், சொத்துகளுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தக்கூடியது. இத்திட்டத்தில் உள்ள இடையூறுகள் மற்றும் ஆபத்துகள், மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க அளவுக்கு எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவினைத் தொடர்ந்து, கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் பொதுமக்களிடம் பல்வேறு கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தினார். அந்தக் கூட்டங்களில் கலந்து கொண்ட 7 மாவட்ட விவசாயிகளும், தங்களது விளை நிலங்களின் வழியே எரிவாயுக் குழாய் பதிக்கப்படும் தற்போதைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் தெரிவித்த எதிர்ப்பினை அடுத்து, மாநில அரசால் திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில், இத்திட்டத்தால் எழக்கூடிய பிரச்னைகளை மாநில அரசு கவனமாக ஆய்வு செய்தது. 310 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்தத் திட்டம், 20 மீட்டர் அகலமும் கொண்டது. இதன் காரணமாக, இந்த அளவிற்குள் அடங்கக்கூடிய பகுதிகளில், லட்சக்கணக்கான மாமரங்கள், பலா மரங்கள் மற்றும் தென்னை மரங்கள் பாதிக்கப்படுகின்றன. இதன் வழியில் உள்ள சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பழ மரங்கள் வெட்டப்பட வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, ஏற்கெனவே ஒரு மரம் வெட்டப்பட்டால், அந்த இடத்தில் குறைந்தபட்சம் 10 மரங்களாவது நடப்பட வேண்டும் என்று தமிழக அரசும் உத்தரவு பிறப்பித்துள்ளது.  அதன்படி பார்த்தால், சுமார் 12 லட்சம் மரங்கள் நடப்பட வேண்டும். இது கெய்ல் நிறுவனத்தால் இயலாதது. மேலும், இப்பாதையில் கிணறுகள், குளங்கள் தோண்டப்பட்டால், அவை விவசாயத்திற்கும், தோட்டக்கலைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இந்தப் பாதையில் பயன்படுத்தப்படாமல் விடப்படும் தரிசு நிலங்களால் பொருளாதார வரவு சாத்தியமற்றதாகிவிடும்.

பெட்ரோலியம் மற்றும் தாதுப் பொருட்களுக்கான குழாய்கள் பதிக்கப்படுவது குறித்த 1962-ம் ஆண்டு சட்டத்தின்படி, குடியிருப்புகள், அதற்கு அருகாமையில் இருக்க வேண்டிய இடங்கள் அல்லது நிலையான கட்டடங்களுக்குப் பயன்படக்கூடிய நிலத்தைத் தோண்டி, குழாய்கள் பதிக்கக்கூடாது. இதுபோன்றே ஆந்திரப் பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட கெய்ல் எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டத்தினால் விவசாயம் மற்றும் தோட்டக்கலைக்கு எதிராக நிகழ்ந்த விளைவுகளை தமிழக அரசு கவனத்தில் கொண்டுள்ளது. மேலும், தனியார் நிலங்களில் அல்லாமல், கெய்ல் நிறுவனத்தின் எரிவாயு குழாய்கள், கேரளாவில் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அருகில் பதிக்கப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான், விளைநிலங்களின் வழியே எரிவாயுக் குழாய் பதிக்கப்படும் தற்போதைய திட்டத்தை உடனடியாக நிறுத்திவிட்டு, தேசிய நெடுஞ்சாலையையொட்டி எரிவாயுக் குழாய்களை பதிக்கக்கூடிய பிற வழிகளை கண்டறியுமாறு கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2-ம் தேதி, கெய்ல் நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு ஆலோசனை வழங்கியது.

இந்த சூழ்நிலையில், உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட நிலத்தை விவசாயிகள் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது. மேலும் மத்திய அரசின் சட்டப்படி, குழாய்கள் அமைக்கும் பாதையை தேர்வு செய்வதற்கு மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் அளிக்கப்படவில்லை. ஆனாலும், உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு தமிழக அரசு மிகுந்த மதிப்பு அளிக்கிறது. அதேநேரத்தில் இதுதொடர்பாக மறுசீராய்வு மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான ஆயத்த பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 13 மத்திய சட்டங்களில் ஒன்றான நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு சட்டம் 2013, பெட்ரோலியம் மற்றும் கனிம குழாய்கள் சட்டம் 1962-ன் திருத்தமாகும். இச்சட்டம் சமூக பாதிப்பு மதிப்பீட்டிற்கு விலக்கு அளிக்க வழிவகை செய்கிறது. பெட்ரோலியம் மற்றும் கனிம குழாய்கள் சட்டம் என்பது நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் கீழ் வருவதல்ல. ஆனால், கையகப்படுத்தப்பட்ட நிலம் பெட்ரோலிய பொருட்களை கொண்டு செல்வதற்கான குழாய்களை பதிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்ற தொழில்நுட்ப வார்த்தை இச்சட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு மிகக் குறைந்த அளவே இழப்பீடு தரப்படுகிறது என்பதை உச்சநீதிமன்றமே ஒப்புக்கொண்டுள்ளது. எரிவாயு குழாய்களை பதிப்பதால், விவசாயிகளின் வாழ்வும், வாழ்வாதாரமும் பல்வேறு வழிகளில் பாதிக்கப்படுகிறது. மேலும், எரிவாயு குழாய்கள் பதிப்பதால், அவை வெடிப்பதற்கான அபாயமும், உள்ளது. குறிப்பாக இத்திட்டத்தை செயல்படுத்தினால், அப்பகுதியில் பழங்கள் தரும் மரங்கள் நடுவது, முக்கிய பயிர்களை சாகுபடி செய்வது, அடுத்தடுத்து பழ மரங்களை நடுவது போன்றவை இயலாததாகி விடும்.

2013-ம் ஆண்டு, நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் சட்டத்தின் கீழ் வெளிப்படையான நேர்மையான இழப்பீடு வழங்கும் உரிமைகள் கொண்ட அம்சங்களுக்கு இணையாக சமூக பாதிப்பு மதிப்பீட்டை மேற்கொள்ளும் வகையில், 1962-ம் ஆண்டின் பெட்ரோலியம் மற்றும் கனிம குழாய்கள் சட்டத்தில், குறிப்பிட்ட திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என தங்களை கேட்டுக் கொள்கிறேன். கெய்ல் நிறுவனத்திற்காக குழாய் அமைக்கும் பாதையை, பொதுமக்களுக்கும், விவசாயத்திற்கும் மிக குறைந்த பாதிப்பை மட்டும் உண்டாக்கும் வகையில், நெடுஞ்சாலைத்துறையினருடன் இணைந்து இத்திட்டத்தை விரைந்து செயலாற்றுவதற்கான சிறந்த வழியென தமிழக அரசு நம்புகிறது. விவசாய நிலங்களின் வழியே குழாய்கள் பதிக்கும் இத்திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை வழியாக செயல்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்வதற்கு, தமிழக அரசு நிபுணர்கள் குழு ஒன்றை அமைத்துள்ளது. கெய்ல் நிறுவனத்தின் அதிகாரிகளையும் இக்குழுவுடன் இணைந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது தான், ஏழை விவசாயிகளின் நலன் கருதி, இருதரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான ஒரு தீர்வை கண்டறிந்து, அதன்பின்னர் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியும்.

இப்பிரச்சினையில் தொடர்புடைய அரசு, மத்திய அரசு என்பதை உச்சநீதிமன்றமே சுட்டிக்காட்டியுள்ள நிலையில், தாங்கள் விரைந்து தலையிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தின் 7 மாவட்டங்களையும் உள்ளடக்கி, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின், பெட்ரோலியம் மற்றும் கனிம குழாய்கள் நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 1962, பிரிவு 3-ன் கீழ், கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் 5-ம் தேதியிட்ட அறிவிக்கை மற்றும் அதன் தொடர்ச்சியாக, 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19-ம் தேதி, 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ம் தேதிபின்னர் வெளியிடப்பட்ட அறிவிக்கைகள் மற்றும் அதன் பின்னர் வெளியிடப்பட்ட அனைத்து அறிவிக்கைகளையும் மத்திய அரசு ரத்து செய்ய முடியும். 2013-ம் வருட நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு சட்டத்தின் 93-ன் படியும், பெட்ரோலியம் மற்றும் கனிம குழாய்கள் சட்டத்தின் 18-வது பிரிவின் கீழும், மத்திய அரசு, தனது அறிவிக்கைகளை திரும்பப்பெறுவதற்கு அதிகாரம் உள்ளது. எனவே அந்த அறிவிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்.

இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எட்டப்படும் வரை, மத்திய அரசின் அறிவிக்கைகளை செயல்படுத்தக்கூடாது என்று கெய்ல் நிறுவனத்திற்கு தாங்கள் உத்தரவிட வேண்டும். 1962-ம் ஆண்டைய பெட்ரோலியம் மற்றும் கனிம குழாய்கள் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். பெட்ரோலியம் மற்றும் கனிம குழாய்கள் சட்டத்தின் கீழ், சமூகப் பாதிப்பு தொடர்பான மதிப்பீட்டை மேற்கொள்வதற்கும், நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு சட்டத்தில் வெளிப்படையான, நேர்மையான இழப்பீட்டை அளிக்கவும் உரிமை உண்டு. இதனிடையே, தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, எரிவாயுக் குழாய்கள் பதிக்கும் சாத்தியங்கள் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு அமைத்துள்ள நிபுணர் குழுவில் கெய்ல் நிறுவனம் இடம்பெற, மத்திய அரசு அந்நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும்.

அதன் மூலமே, தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய உணர்ச்சிப்பூர்வமான இப்பிரச்சினைக்கு, அனைவரும் ஏற்கக்கூடிய, ஆக்கப்பூர்வமான வகையிலான தீர்வு ஏற்படும் என நான் நம்புகிறேன். அதுவே தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக குழாய்கள் பதிப்பதற்கான தீர்வினை வழங்கும். இவ்வாறு முதல்வர ஜெயலலிதா அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago