முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவசரகால முதலுதவிக்கான புதிய பைக் ஆம்புலன்ஸ் திட்டம்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

திங்கட்கிழமை, 8 பெப்ரவரி 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : ‘108’ அவசரகால ஆம்புலன்ஸ்திட்டத்திற்கு 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அவசரகால முதலுதவிக்கான 41 இருசக்கர வாகனங்களின் சேவையை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா  கொடியசைத்து துவக்கி வைத்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளில் விலை மதிப்பற்ற மனித உயிர்இறப்புகள் ஏற்படுகின்றன. இதனால் பாதிக்கப்படும் குடும்பங்கள், மன உளைச்சலுக்கு ஆளாவதோடு வருமானம் ஈட்டும் நபரை இழந்து பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாகின்றனர். உயிர் இழப்பை தடுக்கவும், விலை மதிப்பற்ற மனித உயிர்களைக்காப்பாற்றவும், முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, அரசு மருத்துவமனைகளில் விபத்து மற்றும் தலைக்காய சிகிச்சை மையங்களை ஏற்படுத்திவருவதோடு, ‘108’ அவசரகால ஆம்புலன்ஸ் திட்டத்தில் செயல்பட்டு வரும் ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையை கடந்த 5 ஆண்டுகளில் 385-லிருந்து 755-ஆக உயர்த்தியுள்ளது. இதுமட்டுமின்றி, 66 பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு அவசரகால ஊர்திகள், 78 மலையோரங்கள் மற்றும் மணல் பாங்கான பகுதிகளில் இயங்கக்கூடியசிறிய ரக அவசரகால ஊர்திகள், சென்னை புறநகர் பகுதியில் 2 அவசரகால சிகிச்சைமையங்கள் ஆகியவையும் செயல்பட்டு வருகின்றன. 108 அவசரகால சேவையை மேலும் செம்மைப்படுத்த வேண்டும் என்ற உயரியநோக்கில், அவசரகால முதலுதவிக்காக 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 41 இருசக்கரவாகனங்களின் சேவையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கிவைத்த அவசரகால முதலுதவிக்கான 41 இருசக்கர வாகனங்களில், 31 இருசக்கர வாகனங்கள் மோட்டார் சைக்கிள் வடிவிலும், 10 இருசக்கர வாகனங்கள் ஸ்கூட்டர் வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளன. ஆடவர் மட்டுமின்றி, பெண் அவசரகால மருத்துவ உதவியாளரும் இயக்கும் வண்ணம் இவ்வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே முதன் முறையாக பெண் மருத்துவ உதவியாளர்களால் இயக்கப்படும் அவசரகால முதலுதவிக்கான ஸ்கூட்டர் வடிவிலான இருசக்கரவாகனங்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு, முதல் 10 நிமிடங்கள் பிளாட்டினம் நிமிடங்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த முதல் 10 நிமிடங்களில் பாதிப்பின் தன்மையை கண்டறிந்து, பாதிக்கப்பட்ட பகுதியை அசையாமல் செய்து உயிர் மீட்பு உயிர் வாயு வழங்குவது இரத்தப்போக்கை கட்டுப்படுத்துவது போன்ற முதலுதவிகள் பாதிப்பின் தன்மையை குறைத்து, உயிர் காக்கும் வாய்ப்பை அதிகரிக்கும். விபத்துபகுதிகளுக்கு ‘108’ அவசரகால ஊர்திகள் செல்வதற்கு முன்பு, பாதிப்புக்குள்ளானவருக்கு உடனடியாக தரமான முதலுதவி கிடைக்க இந்த இருசக்கர முதலுதவி வாகனங்கள் வழிவகை செய்யும். இதனால் விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ உதவி கிடைப்பதற்கான கால அளவு மேலும் குறையும்.

இந்த இருசக்கர முதலுதவி வாகனத்தில், கையில் எடுத்து செல்லக்கூடிய உயிர்வாயு சிலிண்டர் நாடித்துடிப்பை கண்டறியும் கருவி இரத்த அழுத்தத்தை அறியும் கருவி இரத்தத்தில் சர்க்கரை அளவை அறியும் கருவி உடல் சூட்டை அறியும் கருவிபோன்ற உயிர் காக்கும் கருவிகளும் தேவையான மருந்துகளும் வைக்கப்பட்டுள்ளன. இந்த இருசக்கர வாகனத்தை பயிற்சி பெற்ற அவசரகால மருத்துவ உதவியாளர் ஓட்டுவார். அவசர ஒலி எழுப்பும் ஒலிபெருக்கி தன்மையுடன் கூடிய வண்ணத்தில் இவ்வாகனங்கள் சிறப்புற வடிவமைக்கப்பட்டுள்ளன.

அவசரகால அழைப்பு, ‘108’ அவசர கட்டுப்பாடு அறைக்கு வந்தவுடன், பாதிப்பின் தன்மைக்கேற்ப இந்த இருசக்கர வாகனம் அனுப்பி வைக்கப்பட்டு, பாதிப்பின்தன்மையை ஆய்வு செய்து முதலுதவி வழங்கப்படும். பாதிப்பின் தன்மை அதிகமாகவும், மருத்துவமனையில் உடனடி சிகிச்சை பெற வேண்டிய அவசியமும் இருப்பின், ‘108’ அவசரகால ஆம்புலன்ஸ் மூலம் பாதிக்கப்பட்டவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார். இந்த அவசரகால இருசக்கர வாகனம், முதல் கட்டமாக சென்னை மாநகரத்தில் முக்கிய சந்திப்புகள், குறுகிய மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிறுத்திவைக்கப்பட்டு, பகல் பொழுதில் போக்குவரத்து அதிகம் இருக்கக்கூடிய இடங்களில் இயக்கப்படும். இவற்றின் பயன்பாட்டைப் பொறுத்து, இந்தத் திட்டம் மற்றநகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இந்த சிறப்பு சேவை மூலம், மேலும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படும்.

இந்த நிகழ்ச்சியில், தொழில் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் தங்கமணி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் க்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர். ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், போக்குவரத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் (பொறுப்பு) ச.வி.சங்கர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்