முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

9 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் தமிழ் வளர்ச்சித்துறையின் புதிய கட்டிடங்கள்: முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 9 பெப்ரவரி 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : மதுரையில் ரூ 9 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கல்வி,  நிருவாகம் மற்றும் ஆய்வறிஞர் விடுதிக் கட்டிடங்கள்,  அறிவியல் புலக் கட்டிடம், சங்கத் தமிழ்க் காட்சிக்கூடம்  ஆகியவற்றை  முதல்வர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் திறந்து  வைத்தார்.  இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

திராவிட மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாகவும், சீரிளமை குன்றாத  மொழியாகவும், வளமையும் தூய்மையும் மிக்க மொழியாகவும், உலக மொழிகள்   அனைத்திலும் தொன்மை மிக்க  மொழியாகவும், விளங்குகின்ற தமிழ் மொழிக்குப் பெருமை  சேர்ப்பதிலும், அதனை உலகெங்கும் பரப்புவதிலும் தமிழ்  வளர்க்கும் பணிகளுக்காகப் பல  திட்டங்களை தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. 

அந்த வகையில், சென்னை, தரமணியில்  அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி  நிறுவன வளாகத்தில் 5 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 30,000 சதுர அடி  கட்டிட  பரப்பளவில், தரை மற்றும் இரண்டு தளங்களுடன், மரபுசார் தமிழ்க் கலைகளுடன்  நிறுவப்பெற்றுள்ள கல்வி,  நிருவாகம் மற்றும் ஆய்வறிஞர் விடுதிக் கட்டிடங்களை  முதல்வர் ஜெயலலிதா காணொலிக்  காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

மேலும், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில், நூலகக் கட்டிடத்தினை மையமாகக் கொண்டு 278 மீட்டர்  ஆரத்தில் ‘ த, ‘ மி, ‘ ழ், ‘ நா, ‘டு, என்ற வடிவில் 5 புலக் கட்டிடங்கள் அமைப்பதற்கான பெருந்திட்ட வரைபடத்தின்  அடிப்படையில்,  3 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ‘மி’ வடிவ அறிவியல் புலக் கட்டிடம் மதுரை தல்லாகுளம் பகுதியில் உலக தமிழ்ச் சங்கக் கட்டுப்பாட்டில் சங்கத் தமிழரின்  வாழ்வியலைக் கண்முன் நிறுத்தும்  வகையில் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்  அமைக்கப்பட்டுள்ள நிரந்தர சங்கத் தமிழ்க் காட்சிக் கூடம் என மொத்தம் 9  கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ் வளர்ச்சித் துறை  சார்பில் கட்டப்பட்டுள்ள கல்வி, நிருவாகம் மற்றும்   ஆய்வறிஞர் விடுதிக் கட்டிடங்கள்,  அறிவியல் புலக் கட்டிடம், சங்கத் தமிழ்க் காட்சிக்கூடம் ஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதா திறந்து  வைத்தார்.  இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்