முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தியாகி சிதம்பர நாதன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, மொழிப்போர் தியாகி சின்னசாமி சிலைகளை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 9 பெப்ரவரி 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க போராடிய தியாகி சிதம்பர நாதன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, இந்தி எதிர்ப்பு போராட்ட தியாகி சின்னசாமி ஆகியோரது சிலைகளை சென்னையில் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

தமிழ்நாட்டிற்காக தமிழ்நாட்டின் மேன்மைக்கென தன்னலமற்ற சேவை ஆற்றிய தலைவர்கள், தமிழுக்குத் தொண்டு செய்த சான்றோர்கள், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று தம் இன்னுயிரை அர்ப்பணித்த தியாக சீலர்கள் ஆகியோரின் நினைவாக தமிழக அரசு சிலைகள் அமைத்து சிறப்பித்து வருகிறது. அந்த வகையில், குமரி மாவட்டத்தை தமிழ்நாட்டோடு இணைத்திட போராட்டம் நடத்திய மொழிப்போர்தியாகி சிதம்பரநாதனுக்கு கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்றும், தலைசிறந்த தமிழ்க் கவிஞரை, தமிழ்ப்பற்றாளரை போற்றும் வகையில், கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரத்தில் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளைக்கு தமிழக அரசின் சார்பில் சிலை வைக்கப்படும் என்றும், தாய்மொழி தமிழுக்காக தன் உயிரைத் துச்சமென மதித்து உயிர் நீத்த மொழிப்போர் தியாகி கீழப்பளுவூர். சின்னச்சாமியின் நினைவைப் போற்றி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அன்னாரின் சிலை அமைக்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

அதன்படி, கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகி சிதம்பரநாதன் சிலை, கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரத்தில் 10 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை சிலை, திருச்சிராப்பள்ளி மாவட்டம், கம்பரசம் பேட்டையில் 8 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகி கீழப்பளுவூர் சின்னச்சாமியின் சிலை,

மேலும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் 7 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திர போராட்டவீரர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி சிலைகளையும், எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில்15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். மார்பளவுச் சிலை மற்றும் பொன்விழா முகப்பு வளைவு, 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில்கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதிக் கட்டிடம், அரசுப் பொருட்காட்சிக்கான தளவாடப் பொருட்களை பாதுகாப்பான முறையில்வைப்பதற்காக செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் சேலம் மாவட்டம் - கடத்தூர் அக்ரஹாரம் கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில், 12,200 சதுர அடி கட்டிட பரப்பளவில், நிலத்தினை சுற்றி சுற்றுச்சுவர், ஆழ்துளை குழாய் கிணறு, மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, காவலர் தங்கும் அறை, கழிப்பறை ஆகிய வசதியுடன் 1 கோடியே 23 லட்சத்து 37ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசுப் பொருட்காட்சி கிடங்கு;என மொத்தம் 3 கோடியே 73 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் செய்தி மக்கள்தொடர்புத் துறையால் அமைக்கப்பட்டுள்ள சிலைகள் மற்றும் கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.

மேலும், இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் மறைந்த முன்னாள் இந்தியகுடியரசுத் தலைவர் பாரதரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவிடத்தில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுநிதியிலிருந்து 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்குமற்றும் நினைவிடத்தின் அருகில் 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீனபயணியர் நிழற்குடை ஆகியவற்றையும் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் .கே.டி. ராஜேந்திரபாலாஜி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் .கே.சி. வீரமணி, தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர் த.உதயசந்திரன், செய்தி மக்கள்தொடர்புத் துறை இயக்குநர் .ஜெ. குமரகுருபரன், தமிழ் வளர்ச்சித் துறைஇயக்குநர் முனைவர் கா.மு.சேகர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்