முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா மரணம்: மோடி இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 9 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

காத்மாண்டு : முன்னாள் நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79. நிமோனியாவால் பாதிக்கப்பட்டு இருந்த சுஷில் கொய்ராலா நேற்று அவரது வீட்டில் மரணம் அடைந்தார். நேபாளி காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பேசுகையில், 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ம் தேதி பிரதமராக தேர்வுசெய்யப்பட்ட கொய்ராலா மகாராஞ்காஞ் பகுதியில் உள்ள அவரது வீட்டில் நேற்று காலை 12.50 மணியளவில் மரணம் அடைந்தார், என்று கூறிஉள்ளார். சமீபத்தில் நுரையீரல் புற்றுநோய்க்கு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று சொந்த நாடுக்கு திரும்பினார்.

கடந்தவருடம் நேபாளத்தில் புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதற்கு மாதேசி, தாரு உள்ளிட்ட பழங்குடி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறையும் வெடித்தது. இதனால் பிரதமர் சுசில் கொய்ராலா தலைமையிலான நேபாள காங்கிரஸ் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு, கொய்ராலா பதவி விலகினார். நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருந்த கொய்ராலா நேற்று மரணம் அடைந்தார்.  கொய்ராலா 2014-ம் ஆண்டு பிப்ரவரி முதல் 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை நேபாள நாட்டு பிரதமராக பதவி வகித்தார்.

அவருடைய சடலம் கட்சியின் தலைமையகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இந்தியாவின் பனாரஸ் நகரில் பிறந்த கொய்ராலா நேபாள அரசியலில் 1954-ம் ஆண்டு கால்பதித்தார். 1960-ம் ஆண்டைய மன்னர் ஆட்சியை தொடர்ந்து, இந்தியாவில் இருந்த வண்ணம் 16 ஆண்டுகள் அரசியலில் ஈடுபட்டார். 1973 விமான கடத்தல் தொடர்பாகவும் இந்திய சிறையில் 3 ஆண்டுகள் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுஷில் கொய்ராலா மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் அவர் தெரிவித்தாவது, இந்தியா மதிப்புமிக்க நண்பரை இழந்து விட்டது. நேபாளத்துக்காக பல ஆண்டுகள் உழைத்த தலைவரை அந்நாடும், நேபாள காங்கிரஸ் கட்சியும் இழந்து விட்டன. அவரது எளிமை நமது அனைவருக்கும் நல்ல பாடமாகும். இத்தருணத்தில் கொய்ராலாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நேபாள மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என கூறியுள்ளார்.

இந்நிலையில் கொய்ராலாவின் இறுதிச்சடங்கில், இந்தியாவில் இருந்து வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தலைமையில் அனைத்துக் கட்சி குழு கலந்துகொள்கிறது. இத்தகவலை வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.  இந்த குழுவில் காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலளார் சீத்தாராம் யெச்சூரி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்