முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

"ஜிகா" நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க நிதி ஒதுக்கீடு குறித்து ஒபாமா ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 9 பெப்ரவரி 2016      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் - "ஜிகா" நோயை தடுப்பதற்கான மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிக்காக நிதி ஒதுக்கீடு செய்வதற்கு அமெரிக்க பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெறுவது தொடர்பாக அதிபர் பராக் ஒபாமா ஆலோசித்து வருகிறார். டெங்கு மற்றும் சிக்கன் குனியாவுக்கு காரணமான கொசுக்களின் வாயிலாக கடந்த ஆண்டு பிரேசில் நாட்டில் தோன்றிய "ஜிகா" நோயானது ரியோ டி ஜெனிரோ உள்ளிட்ட சுமார் 30 அமெரிக்க நாடுகளிலும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள சில நாடுகளிலும் படுவேகமாக பரவி வருகின்றது.  தாயின் கருவில் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை இந்த நோய் பாதிப்படையச் செய்கிறது. இதனால், "ஜிகா" பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகள் சிறிய தலைகளுடன் காணப்படுகின்றன.

இந்நோயானது, சிக்குன் குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்களை பரப்பும் ‘ஏடிஸ்’ கொசுக்களால் பரவுவதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், செக்ஸ் மூலமாகவும் "ஜிகா" பரவுவதாக சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இந்நோயை குணப்படுத்தும் மருந்துகளோ, தடுப்பு மருந்துகளோ இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் ஏற்கனவே பிரேசில் நாட்டில் ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் "ஜிகா" நோய் பாதிப்புடன் பிறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தெற்கு அமெரிக்காவின் கொலம்பியா பகுதியில் மட்டும் 25 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் "ஜிகா" வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இவர்களில் 3177 பேர் கர்ப்பிணிப் பெண்கள் என்பதால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளிம் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இங்கு மட்டும் மேலும் 6 லட்சம் பேர் "ஜிகா" பாதிப்புக்கு உள்ளாகக்கூடும் என அஞ்சப்படுகிறது. ஆசியா கண்டத்துக்கும் வேகமாக பரவ தொடங்கியுள்ள "ஜிகா" வைரஸ் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.  அமெரிக்காவில் பெரும்பாலான மாநிலங்களில் இந்நோயின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அமெரிக்காவின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான டெக்ஸாஸ் மாநிலத்திலும் பலருக்கு இந்நோயின் அறிகுறிகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.இந்நிலையில், "ஜிகா" நோயை தடுப்பதற்கான மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிக்காக 180 கோடி டாலர் ஒதுக்கீடு செய்வதற்கு அமெரிக்க பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெறுவது தொடர்பாக அதிபர் பராக் ஒபாமா ஆலோசித்து வருவதாக அதிபரின் வெள்ளை மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், "ஜிகா" வைரஸ் தாக்கம் தொடர்பாக அமெரிக்காவின் பிரபல செய்தி சேனலுக்கு பேட்டியளித்த ஒபாமா, எபோலாவைப்போல் "ஜிகா" நோயால் மக்கள் இறந்துப் போவதில்லை என்பது நல்ல செய்தியாக உள்ளது. தங்களுக்கு இந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதைகூட உணர்ந்துகொள்ள முடியாத நிலையில் ஏராளமான மக்கள் "ஜிகா" வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயால் மக்கள் உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும், இதை மிக தீவிரமான விஷயமாக நாம் கருத வேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்