முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் பா.ஜ.க.வின் அரசியல் யுக்திகள் எடுபடாது: ராகுல்காந்தி பேச்சு

புதன்கிழமை, 10 பெப்ரவரி 2016      அரசியல்
Image Unavailable

திருவனந்தபுரம் - கேரளாவில் பா.ஜ.க.வின் அரசியல் யுக்திகள் எடுபடாது, அவர்களால் கேரளாவில் காலூன்ற முடியாது என்று காங்கிரஸ் துணைதலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதீரன் ‘ஜனரக்ஷா யாத்திரை’ என்ற பேரணியை கடந்த 2 வாரத்திற்கு முன்பு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தொடங்கினார். மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அவர், இதன் நிறைவு விழாவை நேற்று முன்தினம் திருவனந்தபுரம் அருகே உள்ள சங்குமுகம் கடற்கரையில் நடத்தினார். இந்த யாத்திரை நிறைவு விழாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:–  கேரளாவில் உம்மன் சாண்டி அரசு சிறந்த அரசாக செயல்படுகிறது. அவரது ஆட்சியில் தொழில் வளம் பெருகி உள்ளது. பொதுமக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். உம்மன்சாண்டி ஆட்சியை யாராலும் குறை முடியாது. சிலர் அரசியல் ஆதங்கத்தால் சமூக விரோதிகள் மூலம் பொய் புகார்களை கிளப்பிவிட்டு உள்ளனர். தேர்தல் நெருங்குவதால் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் மக்கள் மத்தியில் இது எடுபடாது.  உம்மன்சாண்டி மீதும், காங்கிரஸ் ஆட்சி மீதும் மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

பொய்யான விளம்பரங்கள், பொய் வாக்குறுதிகள் மூலம் மத்தியில் மோடி ஆட்சியை பிடித்து விட்டார். அவருக்கு உலகம் சுற்றுவதை தவிர வேறு எதுவும் தெரியாது. அவர், மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. அவரது அரசியல் யுக்திகள் கேரள மக்களிடம் எடுபடாது. எனவே கேரளாவில் பாரதீய ஜனதாவால் கால் ஊன்றவே முடியாது. இங்கு திரண்டுள்ள கூட்டம் என்னை பிரமிக்க செய்கிறது.  இதற்கு முன்பு இதுபோன்ற கூட்டத்தை கேரளாவில் நான் பார்த்ததில்லை. மக்கள் ஆதரவுடன் மீண்டும் கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும். கம்யூனிஸ்டுகளின் இரட்டை வேடங்களை மக்கள் அறிவார்கள்.

அவர்களால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுபார்களை திறப்போம் என்று கூற முடியுமா? பொய் புகார்கள் மூலம் காங்கிரஸ் அரசு மீது அவர்களால் களங்கம் ஏற்படுத்த முடியாது.  இவ்வாறு அவர் கூறினார்.  கேரள மாநில முன்னாள் முதல்வர், தேசிய பொறுப்பாளருமான ஏ.கே. அந்தோணி பேசும்போது, நான் கேரளாவில் 3 முறை முதல்வராக இருந்துள்ளேன். ஆனாலும் உம்மன்சாண்டிதான் சிறந்த முதல்வர். ஏழைகள் கஷ்டம் அறிந்து அவர் ஆட்சி நடத்துகிறார் என்றார்.  இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி, மாநில காங்கிரஸ் தலைவர் சுதீரன் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்