Idhayam Matrimony

ஹனுமந்தப்பா போன்ற வீரர்களை கண்டு நாடே பெருமை கொள்கிறது: பிரதமர் மோடி இரங்கல்

வியாழக்கிழமை, 11 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - சியாச்சின் பனிசரிவிலிருந்து மீட்கப்பட்ட ராணுவ வீரர் ஹனுமந்தப்பா நேற்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததையொட்டி அவருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சியாச்சின் பனிப்பாறை சரிவில் சிக்கி 6 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட ராணுவ வீரர் ஹனுமந்தப்பா சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். முன்னதாக ஹனுமந்தப்பாவின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என்றும் மருத்துவமனையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ராணுவ ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை, சிறுநீரகம், நாளமில்லா சுரப்பிகள் மற்றும் அறுவை சிகிச்சை ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து அவருடைய உயிரை காப்பாற்ற கடந்த மூன்று நாட்களாக போராடினர். ஆனால் அவர்களுடைய கடும் போராட்டம் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் அவர் நேற்று காலை 11:45 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவரது உடல் உறுப்புகள் செயல் இழந்ததால் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஹனுமந்தப்பாவின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் அவர் தெரிவித்ததாவது:- ”ஹனுமந்தப்பா உயிரிழப்பு நமக்கு வருத்தம் மற்றும் பேரிழப்பை ஏற்படுத்திஉள்ளது. உங்களுடைய ஆத்மா சாந்தியடைய வேண்டும். ஹனுமந்தப்பாவின் உள்ளிருக்கும் வீரன் என்றுமே மறைய மாட்டான், ஹனுமந்தப்பா போன்ற வீரர்களை கண்டு நாடே பெருமை கொள்கிறது,” என்று பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் இரங்கல் தெரிவித்து உள்ளார்.  இதேபோல் ராணுவ தளபதி தல்பீர் சிங் மறைந்த ராணுவ வீரருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, ”ஹனுமந்தப்பாவின் வீரம் என்றும் மறவாது. இந்தியாவிற்காக அவர் செய்த தியாகம் எல்லோர் மனதிலும் உத்வேகமாக நிலைத்திருக்கும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவிற்காக ஹனுமந்தப்பா போராடினார். இப்போது அவர் அமைதியாக ஓய்வெடுக்கிறார் என்று ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்