முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

வியாழக்கிழமை, 11 பெப்ரவரி 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள 10 ரயில்வே திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். மேலும் இத்திட்டத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023-ன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள 10 ரயில்வே திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, முதல்வர்  ஜெயலலிதா பிரதமர்  நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் இத்திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்து, திட்டப்பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுமட்டுமின்றி, கடந்த பட்ஜெட்டுகளில் தமிழ்நாட்டுக்காக அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்படாததால் பணிகள் தொடங்கப்படாத 20 ரயில்வே திட்டங்களை வரும் ரயில்வே பட்ஜெட்டில் மேற்கொண்டு தமிழக மக்களின் நீண்டகால எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் முதல்வர் தமது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து முதல்வர் ஜெயலலிதா, நேற்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:- நாட்டில் உள்ள முதன்மையான தொழில்மய மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. தொழில் மயமாதல் விரைவாக வளர்ச்சியடைய உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு அத்தியாவசியமானது என்று உணர்ந்து, "தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023" என்ற திட்டத்தை நான்  தொடங்கியுள்ளதாகவும், தற்போதுள்ள உட்கட்டமைப்பு வசதிகளை உலகத்தரத்திற்கு மேம்படுத்த இந்த திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய உட்கட்டமைப்பு மேம்பாட்டில் ரயில் போக்குவரத்து ஒரு மிக முக்கிய அம்சமாகும். தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சியில் ரயில் போக்குவரத்து முக்கிய ஒருங்கிணைப்புப் பணியை ஆற்றி வருகிறது. 2016-17-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டில் தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய சில குறிப்பிட்ட திட்டங்கள் மற்றும் யோசனைகள் குறித்து தங்களுக்கு, தெரிவிக்க விரும்புகிறேன். இவற்றை தாங்கள் ஆக்கப்பூர்வமாக பரிசீலிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023-ல் தமிழகத்தின் உட்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்தவும் ரயில்போக்குவரத்தை வளர்ச்சியடைய செய்யவும் 10 முக்கிய ரயில்வே திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி, சென்னை-கன்னியாகுமரி இடையே இரட்டை ரயில்பாதையை நிறைவேற்றி முடிப்பது, ஸ்ரீபெரும்புதூர்-கிண்டி சரக்கு ரயில்பாதை அமைப்பது, சென்னை-தூத்துக்குடி இடையே சரக்கு ரயில்பாதை அமைத்தல், சென்னை-மதுரை-கன்னியாகுமரி இடையே அதிவேக பயணிகள் ரயில்பாதை ஏற்படுத்துதல், மதுரையிலிருந்து கோவைக்கு அதிவேக பயணிகள் ரயில்பாதை அமைத்தல், கோவையிலிருந்து சென்னைக்கு அதிவேக பயணிகள் ரயில்பாதை ஏற்படுத்துதல், சென்னை-பெங்களூரு இடையே அதிவேக ரயில்பாதை ஏற்படுத்துதல், சென்னை-பெங்களூரு இடையே சரக்கு ரயில்பாதை அமைத்தல், சென்னை-ஆவடி-கூடுவாஞ்சேரி இடையே ரயில்பாதை அமைத்தல், ஆவடி மற்றுத் திருவள்ளூரில் இருந்து எண்ணூர் துறைமுகம் வரை ரயில்பாதை அமைத்தல் ஆகிய 10 திட்டங்கள் தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023-ல் இடம்பெற்றுள்ளன.

தமிழக அரசும், ரயில்வே அமைச்சகமும் பங்குதாரராக இருந்து செயல்படுத்தும் 3 சிறப்பு திட்டங்களுக்கும், தமிழக அரசு முன்னுரிமை அளிக்கிறது. அதன்படி, சென்னை-தூத்துக்குடி சரக்கு ரயில்பாதை, சென்னை-மதுரை-கன்னியாகுமரி இடையே அதிவேக பயணிகள் ரயில் பாதை, மதுரை-கோயம்புத்தூர் இடையே அதிவேக பயணிகள் ரயில்பாதை ஆகிய 3 திட்டங்கள் அடங்கும்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த 3 ரயில்பாதை திட்டங்களை நிறைவேற்ற இந்திய ரயில்வே அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த எனது தலைமையிலான அரசு, ஏற்கெனவே கொள்கை அளவில் விருப்பம் தெரிவித்துள்ளது. இதில், மதுரை-தூத்துக்குடி தொழில் வளாகம் அமைக்கும் திட்டமும் அடங்கியுள்ளது. ரயில்வே அமைச்சகத்துடன் தமிழக அரசு இணைந்து மேற்கொள்ளும் சிறப்பு ஒத்துழைப்பு திட்டத்திற்கு தமிழக அரசு சார்பில் சில குறிப்பிட்ட நிபந்தனைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளதை தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ரயில்பாதை அமைக்க தேவையான நிலத்தை தமிழக அரசு வழங்கும் என்பதால், இதனையே, சந்தை மதிப்பீட்டு அடிப்படையில் தமிழக அரசின் பங்கு மூலதனமாக அங்கீகரிக்க வேண்டும். இதற்கு சமமான பங்குத் தொகையை ரயில்வே அமைச்சகம் பணமாகவோ அல்லது ரயில்வேக்கு சொந்தமான அல்லது மத்திய அரசு துறைகளுக்குச் சொந்தமான நிலமாகவோ வழங்கவேண்டும். பங்கு மூலதனங்கள் பணமாக இருக்குமானால், இருதரப்பும் அளிக்கும் தொகை குறித்த காலத்திற்குள் வழங்கப்பட்டு, போதிய நிதி இல்லாத காரணத்தால் ரயில்வே திட்டங்கள் காலதாமதமாகாமல் தவிர்க்கப்பட வேண்டும். இதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். இத்திட்டங்களை நிர்வகிக்கும் அமைப்பு, சம அளவில் இருக்க வேண்டும். அதாவது மாநில அரசுக்கும் இதில் போதுமான பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை தங்களுக்கு, நான் நினைவுகூறுகிறேன்.

ரயில்வே அமைச்சகம் சுற்றுக்கு விட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நகலில் தமிழகம் தெரிவித்த கருத்துகள் போதிய அளவில் இடம்பெறவில்லை. தமிழ்நாடு அரசு இந்த ஒப்பந்தத்தை ஏற்பதற்கு முன்பாக நகல் ஒப்பந்தத்தை திருத்தி அமைக்க வேண்டும். எனவே, தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு, நியாயமான, சரிசமமான, தமிழகத்திற்கு ஏற்புடைய புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக, ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்துமாறு ரயில்வே அமைச்சகத்தைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இதற்கு முன் வெளியிடப்பட்ட ரயில்வே பட்ஜெட்டுகளில் தமிழ்நாட்டுக்கென அறிவிக்கப்பட்ட பல ரயில்வே திட்டங்கள் போதிய நிதி ஒதுக்கப்படாததால் இதுவரை தொடங்கப்படாமல் உள்ளதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். மேலும், தங்களின் பார்வைக்காக இத்தகைய ரயில்வே திட்டங்களின் பட்டியல் ஒன்றை இணைத்துள்ளேன். ரயில் பயணிகளின் எதிர்பார்ப்பை கருத்தில்கொண்டு இந்த ரயில் திட்டங்களை விரைவுபடுத்த வரும் பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்க தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள ரயில்வே பட்ஜெட், தமிழக ரயில் பயணிகளின் நீண்டகால எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் அமையும் என்று தான் நம்புகிறேன். அத்துடன் தமிழ்நாட்டுக்காக அறிவிக்கப்பட்டு, இதுவரை தொடங்கப்படாத 20 ரயில்வே திட்டங்களை தங்களுக்கு பட்டியலிட்டுள்ளேன். அவைகள், மொரப்பூர்-தருமபுரி இடையே புதிய ரயில்பாதை, சென்னையிலிருந்து-வில்லிவாக்கம் வரை 5-வது மற்றும் 6-வது ரயில் பாதை, வில்லிவாக்கம்-காட்பாடி பிரிவில் புதிய ரயில் பாதை அமைத்தல், சிதம்பரத்தில் இருந்து அரியலூர் வழியாக ஆத்தூருக்கு புதிய ரயில்பாதை அமைத்தல், திண்டிவனம்-கன்னியாகுமரி இடையே இரட்டை ரயில்பாதை அமைத்தல், போடிநாயக்கனூரில் இருந்து கோட்டயத்திற்கு புதிய ரயில்பாதை அமைத்தல், ரேணிகுண்டாவில் இருந்து அரக்கோணம் வரை இரட்டை ரயில்பாதை அமைத்தல், அத்திப்பட்டு-கும்மிடிப்பூண்டி இடையே 3-வது மற்றும் 4-வது ரயில்பாதைகள் அமைத்தல், ஜோலார்பேட்டையிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக ஓசூருக்கு புதிய ரயில்பாதை அமைத்தல், மயிலாடுதுறை-திருக்கடையூர்-தரங்கம்பாடி-திருநள்ளாறு-காரைக்கால் இடையே புதிய ரயில்பாதை அமைத்தல், ராமநாதபுரத்திலிருந்து தூத்துக்குடி-திருச்செந்தூர் வழியே கன்னியாகுமரிக்கு புதிய ரயில் பாதை அமைத்தல், காரைக்குடியிலிருந்து ராமநாதபுரம் வழியாக தூத்துக்குடிக்கு புதிய ரயில் பாதை அமைத்தல், காரைக்காலில் இருந்து சீர்காழிக்கு புதிய ரயில்பாதை அமைத்தல், சேலம் நாமக்கல்லில் இருந்து பெரம்பலூர், அரியலூர் வழியாக காரைக்காலுக்கு புதிய ரயில்பாதை அமைத்தல், திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரிக்கு இரட்டை ரயில்பாதை அமைத்தல், மதுரை-போடிநாயகனூர் இடையே ரயில் பாதையை அகலப்பாதையாக மாற்றுதல், போடிநாயக்கனூரில் இருந்து எர்ணாகுளத்திற்கு புதிய ரயில்பாதை அமைத்தல், திண்டுக்கல்லில் இருந்து போடி-தேனி வழியாக குமுளி வரை புதிய ரயில்பாதை அமைத்தல், மதுரை-கன்னியாகுமரி இடையே திருநெல்வேலி, நாகர்கோவில் சந்திப்பு ஆகியவற்றில் முனைய வசதிகளுடன் மின்சார இரட்டை ரயில்பாதை அமைத்தல், சென்னையில் இருந்து சைதாப்பேட்டை வழியாக ஸ்ரீபெரும்புதூருக்கு புதிய அகல ரயில்பாதை அமைத்தல், தஞ்சாவூர்-அரியலூர் இடையே புதிய ரயில்பாதை அமைத்தல், மதுரையிலிருந்து மேலூர் வழியாக காரைக்குடிக்கு புதிய ரயில்பாதை அமைத்தல் ஆகிய 20 திட்டங்களை விரைவில் நிறைவேற்ற வேண்டிய நடவடிக்கைகளை எடுக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago