முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சியாச்சின் பனிச்சரிவில் புதைந்து மீட்கப்பட்ட ஹனுமந்தப்பாவின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கண்ணீர் அஞ்சலி

வெள்ளிக்கிழமை, 12 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

தார்வாட் - சியாச்சின் பனிச்சரிவில் புதைந்து 3நாட்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட ராணுவ வீரர் ஹனுமந்தப்பா கோபட் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள். கர்நாடக மாநிலம் தார்வட் மாவட்டத்தில் உள்ள பெட்டாடுர் கிராத்தை சேர்ந்தவர் ராணுவ வீரர் ஹனுமந்தப்பா கோபட் . அவர் ஜம்மு காஷ்மீரில் உள்ள உலகின் மிக உயரமான போர்களப்பகுதியான சியாச்சின் பனி மலை பகுதியில் உள்ள முகாமில் பணியில் இருந்தார்.

அங்கு ஏற்பட்ட ஒரு பனிச்சரிவில் 10 இந்திய வீரர்கள் பல அடி பள்ளத்தில் 19ஆயிரம் அடியில் புதையுண்டார்கள். அவர்களை மீட்பதற்கு ராணுவ வீரர்கள் பல டன் பனிப்பாறைகளை தோண்டி உடல்களை தேடினர். பல டன் பனிப்பாறையில் சிக்கி இருந்த ராணுவ வீரர் லான்ஸ் நாயக் ஹனுமந்தப்பா கோபட் 3நாட்களுக்கு பின்னர்  உயிருடன் மீட்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவரது இறுதி  ஊர்வலம் அவரது சொந்த கிராமம் பெட்டாடுரில் நேற்று நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கண்ணீர் மல்க கலந்து கொண்டார்கள். அவரது உடல் கிராம பஞ்சாயத்து அலுவலகம் அருகே உள்ள இடத்தில் புதைக்கப்பட்டது.

ஹனமந்தப்பாவுக்கு லிங்காயத் சமூகத்தினரின் இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடந்தன. ஹனுமந்தப்பாவின் உடல் பெட்டாடுர் கிராம மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அவரது அம்மா, மனைவி, மற்றும்அவரது 2வயதுமகள் ஆகியோர் கண்ணீருடன் கதறினர். அந்த நிகழ்வு அங்கிருந்த நூற்றுக்கணக்கானவர்களை கண்ணீர் விடச் செய்தது. ஹனுமந்தப்பாவின் மனைவி மகாதேவி ஒரு கட்டத்தில் மயங்கி விழுந்தார். அவரது குடும்ப உறுப்பினர்கள் , ராணுவத்தினர், போலீசார் ஆறுதல் கூறினார்கள்.ஹனுமந்தப்பாவின் கிராமமே கண்ணீர் கடலில் மிதந்தது. அவர் கடந்த 13ஆண்டுகளுக்கு முன்னர் ராணுவத்தில் சேர்ந்தார்.

அவர் ராணுவத்தில் சேருவதற்கு பலமுறை முயற்சித்து தோல்வி அடைந்தார். பின்னர் அவர் ஊட்டியில் நடந்த தேர்வு முகாமில் தேர்வு பெற்று ராணுவத்தில் சேர்ந்தார். முந்தைய நாள் இரவன்று ஹனுமந்தப்பாவின் உடல் ஹப்பள்ளியில் உள்ள கே.ஐ.எம்எஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்திற்கு ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு வந்து அஞ்சலிசெலுத்தினார்கள். கர்நாடக முதல்வர் சித்தராமய்யா, மத்திய அமைச்சர் அனந்த் குமார், உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா மற்றும் சில  அமைச்சர்கள் அரசியல் தலைவர்கள் ஹனுமந்தப்பா இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். பெட்டாடுருக்கு சென்ற முதல்வர் சித்தராமய்யா ஹனுமந்தப்பா குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்