முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொது ஏலம் மூலம் சூரியசக்தி மின்சாரம் கொள்முதல் செய்யப்படும் : அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தகவல்

வெள்ளிக்கிழமை, 12 பெப்ரவரி 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை - சூரியசக்தி மின்சாரம், இனிமேல் பொது ஏலம் மூலம் கொள்முதல் செய்யப்படும் என்று மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீட்டை ஊக்குவிப்பது தொடர்பான கருத்தரங்கம் சென்னையில்   நடந்தது. இதில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீட்டை ஊக்குவிப்பது தொடர்பான அறிக் கையை வெளியிட்டு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது:- தமிழகத்தில் கடந்த 5 ஆண்டு களில் 26,806 மெகாவாட் மின் உற்பத்தி நிறுவு திறன் உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது 13,700 மெகா வாட் மின் தேவை அதிகரித்துள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து கிடைக்க வேண்டிய 500 மெகாவாட்டும் அனல்மின் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட பழுது காரணமாக 600 மெகாவாட்டும் கிடைக்கவில்லை.

இருப்பினும், தமிழகத்தில் மின்வெட்டு இல்லாத நிலையை உருவாக்கி முதல்வர் ஜெயலலிதா சாதனை படைத்துள்ளார். மாநிலத்தின் மின் தேவை 14,500 மெகாவாட் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையும், கோடை காலத்தில் ஏற்படும் கூடுதல் மின் தேவையையும் சமாளிக்கும் திறன் நம்மிடம் உள்ளது. இப்போது 1,474 மெகாவாட் சூரியசக்தி மின்உற்பத்திக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இதில், மார்ச் 31-ம் தேதிக்குள் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூரியசக்தி மின்சாரம் ஒரு யூனிட்டுக்கு ரூ.7.01 விலை கொடுத்து வாங்கப்படுகிறது. மத்திய அரசு உத்தரவின்படி, இனிமேல் பொது ஏலம் மூலம் சூரியசக்தி மின்சாரம் கொள்முதல் செய்யப்படும்.

காற்றாலை மூலம் 7,445 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. காலையில் 300 மெகாவாட், மாலையில் 3 ஆயிரம் மெகாவாட் என ஏற்ற இறக்கத்துடன் மின்சாரம் கிடைப்பதால் அதை முழுமையாகப் பயன்படுத்த முடியவில்லை. ஏற்ற இறக்கத்தின்போது ஏற்படும் இடைவெளியை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. காற்றாலை மின்சாரத்தை அரசு ஒருபோதும் புறக்கணிக்கவில்லை. இவ்வாறு அமைச்சர் கூறினார். கருத்தரங்கில், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை (டெடா) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மங்கத் ராம் சர்மா, இந்திய தொழில் கூட்டமைப்பு தமிழக தலைவர் எஸ்.என்.ஐஸ்நோவர், துணைத் தலைவர் ரமேஷ் கைமால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்