முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து

வெள்ளிக்கிழமை, 12 பெப்ரவரி 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - பிரதமர் மோடி, அபுதாபி பட்டத்து இளவரசர் முன்னிலையில் இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே சைபர் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு முதலீடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கரன்சி நோட்டு மாற்றுதல் ஆகிய 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான், 3 நாள் சுற்றுப்பயணமாக புதன்கிழமை இந்தியாவுக்கு வந்தார். அவரை விமான நிலையத்துக்கு சென்று பிரதமர் மோடி வரவேற்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் இந்தியாவுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்காக, டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்துக்கு வந்த அபுதாபி பட்டத்து இளவரசரை பிரதமர் மோடி வரவேற்றார்.

அங்கு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதை அவர்கள் இருவரும் பார்த்தனர். அவர்கள் முன்னிலையில், 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அந்த ஒப்பந்தங்கள், சைபர் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு முதலீடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கரன்சி நோட்டு மாற்றுதல் ஆகிய துறைகள் தொடர்பானவை ஆகும். இத்தகவலை மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் விகாஸ் சொருப் சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார். அபுதாபி பட்டத்து இளவரசர், நேற்று மும்பைக்கு சென்றார். மும்பை பங்குச்சந்தை அலுவலகத்தைப் பார்வையிட்ட அவர், அங்கிருந்து நேரடியாக அபுதாபிக்கு திரும்பினார். 

முன்னதாக, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்க அபுதாபி பட்டத்து இளவரசர், ஜனாதிபதி மாளிகைக்கு வந்தார். அங்கு அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், பட்டத்து இளவரசருக்கு ஜனாதிபதி மதிய விருந்து அளித்தார். அதில், பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள், இருநாட்டு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இளவரசருடனான சந்திப்பின்போது, அவரது வருகையால், இரு நாட்டு உறவு மேலும் வலுப்படும் என்று ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார். இந்தியாவுடன் நல்லுறவு பேண வேண்டும் என்ற ஐக்கிய அரபு அமீரகத்தின் விருப்பத்தை இந்தியாவும் பகிர்ந்துகொள்வதாக அவர் கூறினார். கடந்த 1975-ம் ஆண்டு, அபுதாபி பட்டத்து இளவரசரின் தந்தை ஷேக் ஜாயித், டெல்லிக்கு வந்திருந்தபோது, தான் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இளவரசருக்கு ஜனாதிபதி பரிசளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்