முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யுவராஜ் சிங்கை தாமதப்படுத்துவது குறித்து டோணி பதில்

சனிக்கிழமை, 13 பெப்ரவரி 2016      விளையாட்டு
Image Unavailable

ராஞ்சி : இரண்டாவது டி20 போட்டியில், இலங்கையை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது இந்திய அணி. இப்போட்டியில், யுவராஜ் களம் இறங்க வேண்டிய நேரத்தில் கேப்டன் டோணி பேட் செய்ய சென்றது பல வகை விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

டோணி களமிறங்கியதுமே ரெய்னா விக்கெட்டும் வீழ்ந்ததால் யுவி களமிறங்கினார். ஆனால் முதல் பந்தை சிக்சருக்கு தூக்க முற்பட்டு எல்லைக்கோடு அருகே கேட்ச் கொடுத்து டக்-அவுட் ஆனார். இந்த போட்டி முடிந்த பிறகு நிருபர்களிடம் ஜாலியாக அரட்டையடித்தார் டோணி. அப்போது அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

உங்களது ஹெலிகாப்டர் ஷாட் மிஸ் ஆவது போல தெரிகிறதே, என்ற நிருபர்களின் கேள்விக்கு, கடலுக்கு அடியிலுள்ள நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஹெலிகாப்டர் எப்படி புறப்படும், என்று பதில் கேள்வி கேட்டார் டோணி. ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பதற்கு யார்க்கர் அல்லது ஓவர் பிட்ச் வகை பந்துகள் வீசப்பட்டிருக்க வேண்டும். தனக்கு அப்படிப்பட்ட பந்துகள் வீசப்படுவதில்லை என்பதை நீர்மூழ்கி கப்பல் கதையை உதாரணம் காட்டி பேசினார் டோணி.

மேலும் அவர் கூறுகையில், எனக்கு பவுன்சர் பந்தை வீசும்போது நான் ஹெலிகாப்டர் ஷாட்டை அடிக்க வேண்டுமானால், ஒரு நாற்காலி போட்டு ஏறிதான் நிற்க வேண்டும் என்றார் சிரித்தபடி. ஹர்திக் பாண்ட்யா பற்றி டோணி கூறுகையில், அவருக்கு சர்வதேச போட்டிகளில் ஆடி அனுபவம் வர வேண்டும் என்பதற்காக முன்கூட்டியே களமிறக்கினேன். பாண்ட்யா எடுத்த எடுப்பிலேயே அதிரடியாக பெரிய ஷாட்டுகளை அடிக்க கூடிய திறமைசாலி என்பதை அறிந்துதான் அவ்வாறு செய்தேன்.

உலக கோப்பை டி20 போட்டிகளை முன்னிட்டு இதுபோன்ற சோதனை முயற்சிகள் அவ்வப்போது எடுக்கப்படும். அனைத்து பேட்ஸ்மேன்களின் திறமையையும் கூர்தீட்டிக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும் என்று டோணி தெரிவித்தார். யுவராஜ்சிங்கை முன்கூட்டியே பேட்டிங் செய்ய களமிறக்குவதில்லையே ஏன் என்ற கேள்விக்கு, யுவராஜ் சிங் களமிறங்குவதை பற்றி மட்டுமே பேசுகிறீர்களே, நான் மேலும், கீழும் ஊசலாட்டத்தோடு களமிறங்கிக் கொண்டுள்ளதை பற்றி யாருமே கேட்பதில்லையே என்று சிரித்தபடி கூறினார் டோணி.

இருப்பினும், யுவராஜ்சிங் விவகாரம் கொஞ்சம் சீரியசானது என்பதை உணர்ந்து பதில் அளித்த டோணி, போட்டி ஆரம்பிக்கும்போது யுவராஜ்சிங்கை 5வதாக களமிறக்குவதுதான் திட்டமாக இருக்கிறது. ஏனெனில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை தொடர்ந்து, 3வதாக விராட் கோஹ்லி, 4வதாக சுரேஷ் ரெய்னா களமிறங்க வேண்டியுள்ளது. முதல் நான்கு பேட்ஸ்மேன்களும், உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாட்டு மண்ணிலும் பல சாதனைகளை புரிந்தவர்கள். எனவே அவர்கள் இடத்தை யுவராஜுக்கு பங்கிட்டு கொடுப்பது என்பது இயலாது.

யுவராஜ்சிங் அணிக்கு திரும்பியுள்ளார் என்பது உண்மைதான். ஆனால், அவருடன் ஆடிய அனுபவத்தில் சொல்கிறேன், களமிறங்கிய உடன் அவரால் பெரிய ஷாட்டுகளை அடிக்க முடியாது. சிறிது நேரம் எடுத்த பிறகே அடிக்க முடியும். எனவேதான், 17 ஓவர்களுக்கு பிறகு அவர் இறங்க வேண்டி வந்தால், அவரை களமிறக்குவதை தவிர்க்கிறேன். இனி வரும் போட்டிகளில் சூழ்நிலைக்கு தக்கபடி, யுவராஜ்சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்படும். என்னைப் பொறுத்தளவில் அணியின் வெற்றிதான் முக்கியம் என்பதால் அதற்கு ஏற்ப பேட்ஸ்மேன்களை களமிறக்குகிறேன். இவ்வாறு டோணி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்