முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கும்பகோண மகாமகம் குளத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்

சனிக்கிழமை, 13 பெப்ரவரி 2016      ஆன்மிகம்
Image Unavailable

கும்பகோணம்  - கும்பகோண மகாமகம் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில் நேற்று மகாமகம் குளத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். தென்னகத்தின் கும்பமேளா என்று அழைக்கப்படும் மகாமக திருவிழா கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. மகாமகத்தின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் மகாமகம் குளத்தில் புனித நீராடுவார்கள். இதற்கு முன் 2004–ம் ஆண்டு மகாமகம் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மகாமகம் வருகிற 22–ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. அன்றைய தினம் லட்சக்கணக்கில் பக்தர்கள் புனித நீராடுகிறார்கள். இதையொட்டி நேற்று கும்பகோணத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

அபிமுகேஸ்வரர் கோவிலில் முதலில் கொடியேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆதி கும்பேஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர், காளகஸ்தீஸ்வரர், சோமேஸ்வரர் கோவில்களில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆதிகும்பேஸ்வரர் கோவில் அருகில் மகாமகம் குளம் அமைந்துள்ளது. குளத்தைச் சுற்றிலும் 16 சோடச லிங்கங்கள் அமைந்துள்ளன. 16 தானங்களை நினைவுபடுத்தும் வகையில் 16 சிவலிங்கங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. குளத்தின் உள்ளே 20 தீர்த்த கிணறுகள் உள்ளன.

இங்கு மகாமகத்தின்போது புனித நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதனால் பக்தர்கள் மகாமகத்தின்போது குளத்தில் புனித நீராட ஆர்வம் காட்டுகிறார்கள். 22–ந்தேதி தான் மகாமகம் என்றாலும் கொடியேற்றம் தொடங்கிய இன்றே பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்பட்டார்கள். இதையடுத்து இன்றே லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பகோணம் வந்து குவிந்தனர். கொடியேற்றப்பட்டதும் வெளியூர் பக்தர்களும், உள்ளூர் பக்தர்களும் மகாமக குளத்தில் புனித நீராட தொடங்கினார்கள். தொடர்ந்து ஆயிரக்காணக்கான பக்தர்கள் அணி அணியாக புனித நீராடி வருகிறார்கள். கொடியேற்றத்தையொட்டி நேற்று 20 நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மகாமக குளத்தில் விடப்பட்டது.

ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் இருந்து அமிர்த நீர் கலசம் கண்ணாடி பல்லக்கில் வைக்கப்பட்டு யானை முன்னே செல்ல மேள தாளம் முழங்க மகாமக குளத்தை அடைந்தது. அமிர்த நீர் கலசத்தை சிவசங்கர சிவாச்சாரியார் தலைமையில் அர்ச்சகர்கள் மகாமகம் குளத்துக்குள் எடுத்துச் சென்று சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு குளத்து நீரில் கலக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மகாமக குளத்து நீரை கலசத்தில் எடுத்து கண்ணாடி பல்லக்கில் மீண்டும் ஊர்வலமாக ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. பக்தர்கள் நெரிசல் இன்றி புனித நீராடுவதற்கு வசதியாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக மகாமக குளத்திற்கு 4 வழிபாதை அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு பாதை வழியாக முக்கிய பிரமுகர்களும், மற்றொரு பாதை வழியாக முதியோர், மாற்றுத்திறனாளிகள் செல்லவும், மற்ற பாதைகளில் அனைத்து பக்தர்களும் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பக்தர்கள் வசதிக்காக கும்பகோணத்திற்கு முக்கிய நகரங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் ஏராளமான சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்துக்கழகங்கள் இயக்கி வருகிறது. சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகின்றன.

கும்பகோணத்தை சுற்றி 7 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர், சுகாதார வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளது. அவசர உதவிக்காக 30 ஆம்புலன்சுகள் தயார் நிலையில் உள்ளன. தீயணைப்பு வாகனங்கள் பல்வேறு மாவட்டங்களில் கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் உள்ளன. மேலும் குறுகலான தெருக்களில் செல்லும் வகையில் உள்ள 5 மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. 3 ஆயிரம் ஊர்க்காவல் படையினரும் பாது காப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அறநிலையத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகாமக விழாவையொட்டி கும்பகோணம் விழாக்கோலம் கொண்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்