முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூனியர் உலகக் கோப்பை: இந்தியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்

ஞாயிற்றுக்கிழமை, 14 பெப்ரவரி 2016      விளையாட்டு
Image Unavailable

மிர்பூர் : 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசி வரை போராடி  இந்தியவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. பந்து வீச்சால் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு சற்றே சங்கடத்தை ஏற்படுத்தினாலும் கூட, கடைசியில் இந்தியா தோல்வியைத் தழுவ நேரிட்டு விட்டது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி 49.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்களை எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.

முன்னதாக மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய இந்திய அணி 45.1 ஓவர்களிலேயே 145 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முற்றிலும் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமானதாக போட்டி நடந்த மிர்பூர் பிட்ச் காணப்பட்டது. இதனால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பெரும் திணறல் ஏற்பட்டு விட்டது. அதேசமயம், சிறப்பாக பவுன்ஸ் ஆனதை தங்களுக்கு முற்றிலும் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மேற்கு இந்தியத் தீவு பவுலர்கள் இந்தியாவை நிலை குலைய வைத்து விட்டனர்.

இந்தியாவின் முன்னணி வீரர்கள் ஏமாற்றிய நிலையில் சர்பாரஸ் கான் மட்டும் கடுமையாகப் போராடி 51 ரன்களை எடுத்து இந்தியாவின் மானத்தை கொஞ்சமாவது காப்பாற்றினார்.  இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிய இந்திய வீரர் சர்பாரஸ் கான்தான். நேற்றைய ஆட்டத்தையும் சேர்த்து அவர் மொத்தம் 5 அரை சதம் போட்டுள்ளார். மொத்தம் 355 ரன்களைக் குவித்துள்ளார். மேலும் உலகக் கோப்பைப் போட்டிகளில் அவர் இதுவரை 7 அரை சதம் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு சாதனையும் கூட.

மேற்கு இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் அல்ஸாரி ஜோசப்தான் இந்தியாவின் சீர்குலைவைத் தொடங்கி வைத்தார். தொடக்க ஆட்டக்காரர்கள் ரிஷப் பந்த் (1), கேப்டன் இஷான் கிஷன் (4) ஆகியோரை அவர் முதலில் வீழ்த்தினார். 10 ஓவர்கள் வீசிய அவர் 39 ரன்களைக் கொடுத்து மொத்தம் 3 விக்கெட்களைச் சாய்த்தார். இந்தியா 17.2 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 50 என்ற மோசமான நிலையில் இருந்தது. அதன் பின்னர் சர்பாரஸ் கான் சிறப்பாகவும், போராட்டத்துடனும் ஆடி ஸ்கோரை உயர்த்தினார். 89 பந்துகளைச் சந்தித்த அவர் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 51 ரன்கள் எடுத்தார்.

அதேபோல ராகுல் பாதம் மறு முனையில் போராடி 21 ரன்களை எடுத்தார். மேற்கு இந்திய பந்து வீச்சாளர் ரியான் ஜானும் 3 விக்கெட் சாய்த்தார். கீமோ பால் 2, செமர் ஹோல்டர் 1, ஷமர் ஸ்பிரிங்கர் 1 என்று இந்தியாவை நையப்புடைத்து விட்டனர். பின்னர் ஆட வந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் கூட ரன் எடுக்க தடுமாறியது. இருப்பினும் கீசி கார்டி கடைசி வரை போராடி தனது அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்து விட்டார். இந்தியத் தரப்பில் மயங்க் தகர் அபாரமாக பந்து வீசினார். அவரது பந்து வீச்சைப் பார்த்தபோது இந்தியாவுக்கு வெற்றி கிடைத்தாலும் கிடைக்குமோ என்ற நிலை இருந்தது. ஆனால் மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் நல்ல பைட் கொடுத்ததால், இந்தியாவுக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் போய் விட்டது. கீ சி கார்டி அவுட்டாகாமல் 52 ரன்களைக் குவித்தார். சிம்ரோன் ஹெட்மெயர் 23 ரன்களை எடுத்தார். உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியா 5வது முறையாக தகுதி பெற்றிருந்தது. இதற்கு முன்பு 2000, 2008, 2012 ஆகிய ஆண்டுகளில் அது கோப்பையை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்