முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

68 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் : முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

ஞாயிற்றுக்கிழமை, 14 பெப்ரவரி 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : முதல்வர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளையொட்டி, மாபெரும் மரம் நடும் திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் 68 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக நேற்று சென்னை, வேப்பேரியில் அமைந்துள்ள சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் முதல்வர் ஜெயலலிதா ஆலமரக்கன்றினை நட்டு திட்டத்தினை துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் வனம் மற்றும் மரங்களின் பரப்பை அதிகரித்து, தமிழகத்தின் பசுமைப் போர்வையை மேம்படுத்தும் உன்னத நோக்கிலும், வனப்பகுதிகளில் மட்டுமின்றி, வனத்திற்கு வெளியே இருக்கும் காலியிடங்களில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கவும் "மாபெரும் மரம் நடும்" திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் கடந்த 2012-ஆம் ஆண்டு 64 லட்சம் மரக்கன்றுகளும், 2013-ஆம் ஆண்டு 65 லட்சம் மரக்கன்றுகளும், 2014-ஆம் ஆண்டு 66 லட்சம் மரக்கன்றுகளும், 2015-ஆம் ஆண்டு 67 லட்சம் மரக்கன்றுகளும் நடும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பு உள்ளதால், இந்த ஆண்டு, தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளையொட்டி மாபெரும் மரம் நடும் திட்டத்தின் கீழ், 61 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழகம் முழுவதும் 68 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக, முதலமைச்சர் ஜெயலலிதா  நேற்று சென்னை, வேப்பேரியில் அமைந்துள்ள சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் ஆலமரக்கன்றினை நட்டு திட்டத்தினை துவக்கிவைத்தார்.

இந்த மரக்கன்றுகளை நடும் பணியானது வனத்துறை சார்பில் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும். மேலும், இம்மரக்கன்றுகள் வனப்பகுதிகளிலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும், அரசு மற்றும் தனியார் அலுவலக வளாகங்களிலும், சாலையோரங்களிலும், பூங்காக்களிலும், நடப்பட்டு பராமரித்து பாதுகாக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் ஆலம், இலுப்பை, புன்னை, மந்தாரை, புங்கன், மகிழம், பூவரசு, வேம்பு போன்ற பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்படும்.

இந்த நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாசலம், தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, காவல்துறை தலைமை இயக்குநர் அசோக் குமார், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர். ஹன்ஸ் ராஜ் வர்மா, முதன்மை தலைமை வன பாதுகாவலர் முனைவர் நா. கிருஷ்ணகுமார் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் டி.கே. ராஜேந்திரன், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள், பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்